இவர்கள் முஸ்லிம்களா?

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை.

1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் கூடாது. வரும் ஆண்டு தான் உம்ரா செய்ய வர வேண்டும்.

2. மக்காவிலிருந்து வரும் முஸ்லிம்கள் மக்காவிற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

இந்த இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவையாகத் தெரிந்தன.

இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் கையெழுத்தாவதற்கு முன்பே மக்காவிலிருந்து அபூ ஜன்தல் என்பவர் உடலில் சங்கிலியால் பின்னிப் பிணைக்கப் பட்டவராக, பரிதாபகரமான நிலையில் வந்து நிற்கின்றார்.

அபூ ஜன்தல் வேறு யாருமல்ல! ஒப்பந்தத்தில் குறைஷிகளின் சார்பில் கையெழுத்துப் போடவுள்ள ஸுஹைல் பின் அம்ரின் மகன் தான்.

அபூ ஜன்தல் அவ்வாறு வந்த போது ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்கள் அவரை மக்காவிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று குறிப்பிடுகின்றார்கள். அவரை அவ்வாறு அழைத்துச் செல்லக் கூடாது; அழைத்துச் சென்றால் இந்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஸுஹைல் பின் அம்ர் பிடிவாதம் பிடிக்கின்றார்.

வேறு வழியில்லாமல் நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையில் கையெழுத்துப் போடுகின்றார்கள். கதறக் கதற, கண்களில் கண்ணீர் ததும்ப அபூ ஜன்தல் மக்காவிற்கே திரும்ப அனுப்பப்படுகின்றார்.

நபித் தோழர்கள், குறிப்பாக உமர் (ரலி) போன்றோர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பணிந்து போவதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றார்கள்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் நபித் தோழர்கள் அபூ ஜன்தலின் விவகாரத்தில் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் உறைந்தே போய் விட்டார்கள். இருப்பினும் இந்த ஒப்பந்தம், உடன்படிக்கை பின்னால் அளப்பறிய நன்மையிலேயே முடிகின்றது. முஸ்லிம்களுக்குப் பெரும் வெற்றியாக அமைகின்றது. இதை,(புகாரி: 2734)ஹதீஸைப் படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய கருத்து, மக்காவில் இஸ்லாம் கண்ட வளர்ச்சி பற்றியதாகும்.

மதீனாவிலிருந்து உம்ராவுக்காக வந்த நபி (ஸல்) அவர்களையும், ஏனைய முஸ்லிம்களையும் உம்ரா செய்ய விடாமல் குறைஷிகள் தடுத்து விட்டாலும், அபூ ஜன்தலைப் போன்ற முஸ்லிம்கள் மக்காவில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் கொடுத்த உயிர்ப் பிச்சை

மக்காவில் வாழும் இந்த முஸ்லிம்களின் காரணமாகத் தான் மக்கா குறைஷிகளுக்கு உயிர்ப் பிச்சை கிடைக்கின்றது. இல்லையெனில் நிராயுதபாணியாக, போர் நோக்கம் சிறிதும் இல்லாமல், உம்ராவுக்காக வந்த முஸ்லிம்களிடம் ஏறி மிதித்ததற்கு ஒரேயொரு பரிசும் தண்டனையும் போர் தான். குறைஷிகள் செய்த அநியாயத்திற்காக அவர்கள் மீது முஸ்லிம்கள் போர் தொடுப்பது தான் நியாயம்.

அந்த நியாயங்களை அல்லாஹ் பட்டியலிடுவதைப் பாருங்கள்.

அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.)

(அல்குர்ஆன்: 48:25)

1. அல்லாஹ்வை மறுத்தது.

2. மஸ்ஜிதுல் ஹராமில் நுழைய விடாமல் தடுத்தது.

3. பலிப்பிராணிகள் அதற்குரிய இடத்தை அடைவதை விட்டும் தடுத்தது.

இத்தனை நியாயங்கள் இருந்தும் குறைஷிகளுக்கு ஏன் உயிர்ப்பிச்சை வழங்கப்பட்டது?

அதற்கு ஒரேயொரு காரணம், அபூ ஜன்தல் போன்ற உங்களுக்குத் தெரியாத வேறு சில முஸ்லிம்கள் மக்காவில் இருக்கிறார்கள்.

மக்கா காபிர்களைத் தாக்கும் போது இந்த முஸ்லிம்களையும் அறியாமல் தாக்கி விடுவீர்கள்; முஸ்லிம்களாகிய நீங்களே சக முஸ்லிம்களைக் கொன்ற துன்பம் உங்களைப் பாதிக்கச் செய்யும்.

இந்தக் காரணத்தினால் தான் மக்கா குறைஷிகள் மீது போர் தொடுப்பதை விட்டும் தடுத்து விட்டதாக முஸ்லிம்களை நோக்கி அல்லாஹ் கூறும் அதே வசனத்தின் பிற்பகுதியைப் பார்ப்போம்.

உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.

(அல்குர்ஆன்: 48:25)

இந்த வசனம் நமக்கு இடுகின்ற கட்டளையும் செய்தியும் இது தான்.

அதாவது, ஒரு பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்தப் பகுதியை எதிர்த்துத் தாக்கக் கூடாது; அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தனியாக விலகாத வரை அந்தப் பகுதி மீது முஸ்லிம்கள் போர் தொடுக்கக் கூடாது என்பது தான் இந்த வசனம் இடுகின்ற கட்டளை!

ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எல்லா நியாயங்களும் இருந்தாலும் மேற்கண்ட இந்தக் காரணம் இருந்தால் போர் தொடுக்கக் கூடாது என்பது இறைவனின் கட்டளை!

ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் இஸ்லாத்தில் அனுமதியில்லாத ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை முற்றிலும் புறக்கணித்து விடுகின்றது.

இவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்று குவிப்பது இஸ்லாத்தின் எதிரிகளை அல்ல! பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளானாலும் சரி! இந்தியாவின் காஷ்மீரானாலும் சரி! இது போன்ற தாக்குதல்களில் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும், 90 சதவிகிதத்திற்கு மேல் முஸ்லிம்கள் தான்.

1. தற்கொலைத் தாக்குதல் என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று; அதில் ஈடுபடுவோருக்கு நிரந்தர நரகம் என்பதை(புகாரி: 3463, 3062)போன்ற பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றன. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவதன் மூலமே இந்தக் கூட்டத்தினர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றனர்.

2. இவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் பகுதி, வாகனம், சந்தை போன்ற அனைத்து இடங்களிலும் ஏதாவது முஸ்லிம்கள் இல்லாமல் இருப்பதில்லை. இதைத் தெரிந்தும் இவர்கள் இந்தத் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்றால் 48:25 வசனத்தில் அல்லாஹ் கூறும் கட்டளையைக் காற்றில் பறக்க விடுகின்றனர். குர்ஆனின் கட்டளையைக் காலில் போட்டு மிதிக்கும் இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

3. போரில் கூட பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்திருந்தும் அதை அலட்சியம் செய்து, அவர்களையும் கொன்று குவிக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புறக்கணிக்கும் இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

4. இவர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு, தற்கொலை செய்து கொண்டோ அல்லது வேறு வழியிலோ தப்பித்து விடுகின்றனர். ஆனால் பாதிக்கப்படுபவர்கள் குண்டு வெடித்த பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தான். அந்தப் பகுதியில் வாழும் அப்பாவி முஸ்லிம்களை அரசாங்கம் குறி வைத்துத் தாக்கி அவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்து விடுகின்றது.

யார் பேரில் சந்தேகம் ஏற்பட்டாலும் காவல் துறை அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் சித்ரவதை செய்கின்றது. அவர்கள் மீது தாங்கள் விரும்பிய வழக்குகளைப் பதிவு செய்து, மாநில அளவில், மத்திய அளவில், உலக அளவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி வாக்குமூலம் வாங்குகின்றது.

இந்த வாக்குமூலத்தை வரவழைப்பதற்காக அவருடைய இன உறுப்பில் மின் தாக்குதல் தொடுக்கின்றது. அவரது மனைவி மற்றும் வீட்டிலுள்ள பெண்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து மானபங்கம் செய்கின்றது.

இப்படிக் காவல்துறை செய்யும் காட்டுமிராண்டித்தனங்களையும், காட்டுத் தர்பாரையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அரசாங்கம் இப்படியொரு போரை முஸ்லிம்கள் மீது தொடுப்பதற்கு யார் காரணம்? இந்தக் குருட்டு ஜிஹாத் சிந்தனைக் கூட்டம் தான்? முஸ்லிம்களைக் காக்கப் போகிறோம் என்று சொல்லிப் புறப்பட்டு, முஸ்லிம்கள் மீது அரசாங்கத்தைப் போர் தொடுக்க வைப்பதன் மூலம் ஒரு வகையில் இவர்களே முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கின்றார்கள். இப்படி முஸ்லிம்களையே தங்கள் கையால் அழிக்கும் இவர்கள் முஸ்லிம்களா? ஒரு போதும் முஸ்லிம்கள் அல்லர்.

5. ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று திருக்குர்ஆன் (6:164, 17:15, 35:18, 39:7, 53:38) கூறுகின்றது. ஆனால் இந்தப் பாவிகளோ பாவத்தைச் செய்து விட்டுப் பழியை அடுத்தவர் மீது போட்டுவிட்டுத் தப்பி விடுகின்றனர்.

6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாüன் துன்பங்கüல் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாüல் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

(புகாரி: 2442)

இந்த ஹதீஸின் கட்டளைக்கு மாற்றமாக இந்தத் தற்கொலை வெறியர்கள் முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்து விடுகின்றனர்.

7. இரக்கமுள்ள மார்க்கத்தை அரக்க மார்க்கமாகச் சித்தரித்து உலக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதை விட்டும் தடுத்து விடுகின்றனர். அதாவது அவர்கள் இஸ்லாத்தில் இணைந்து தங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்வதை இவர்கள் தடை செய்து விடுகின்றனர்.

இன்று இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும், “இந்தப் பயங்கரவாதத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று பல்வேறு கட்டங்களில் பல்வேறு செய்தி ஊடகங்கள் மூலம் அறிவித்துத் தெளிவுபடுத்துகின்றனர். இது வரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்த தேவ்பந்தி உலமாக்கள் கூட அண்மையில், இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்கப்படுத்தினர். இருப்பினும் அண்மையில் நடந்த சம்பவங்களில் முஸ்லிம்களே குறி வைத்துக் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த மாபாவிகள் செய்கின்ற அநியாயத்தால், இந்துத்துவா சக்திகளே இது போன்ற காரியங்களைச் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டு, பலிகடாவாக்கி விடுகின்றனர். முஸ்லிம்களை அழிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்துத்துவா சக்திகள் செய்கின்றனர்.

டெல்லியில் நடத்த குண்டு வெடிப்பில் ராணுவ உடையில் ஒருவன் குண்டு வைத்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏன்? அது இந்துத்துவா பயங்கரவாதியாக இருக்கக் கூடாதா? என்று எந்தப் புலனாய்வுத் துறையும், பத்திரிகைத் துறையும் பார்ப்பதில்லை. இவ்வாறு பார்க்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்:

1. இந்துத்துவா சக்திகள் இதைச் செய்யாது என்ற நம்பிக்கை. ஆனால் இந்துத்துவ இயக்கங்களின் அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்படும் வெடிகுண்டுகளும், அங்கு இயங்கும் ஆயுதத் தொழிற்சாலைகளும் அவர்கள் இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் புலன் விசாரணையைத் தொடர்ந்தால் இந்தியாவில் நடைபெறும் இந்தக் குண்டு வெடிப்புக்கள் ஒரு சரியான முடிவுக்கு வரும்.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடக்கின்றன என்பது முஸ்லிம்கள் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் அனைவரின் ஐயப்பாடும் இது தான். புலன் விசாரணை இந்தக் கோணத்தில் அமையாத வரை நாட்டில் இது போன்ற குண்டுவெடிப்புக்கள் தொடரவே செய்யும்.

2. இந்தக் கோணத்தில் விசாரணை செல்லாததற்குக் காரணம், தற்கொலைப் படைத் தாக்குதல்.

குண்டு வெடிப்பு என்றாலே முஸ்லிம்கள் தான் என்பதை இந்தச் சண்டாளர்கள் உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளனர். இதற்குக் காரணம் மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான தாக்குதல் தொடுக்கும் கல்மனம் கொண்ட இந்த மாபாவிகள் தான்.

இந்தச் சிந்தனை தான் இங்குள்ள புலனாய்வுத் துறையினர் வேறு திசையில் விசாரணை செய்வதற்குத் தடையாக இருக்கின்றது.

இப்படி முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வேரறுக்கக் கிளம்பியிருக்கும் இவர்கள் மனிதர்களே கிடையாது.

இவர்கள் மனிதர்களே இல்லை எனும் போது இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்? இவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் அல்லர்.