இறை கோபத்தை பெற்றுத்தரும் தீய பண்புகள்…
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் பேரருளால் ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
அன்புள்ளவர்களே! நம் இஸ்லாமிய மார்க்கம் அறிவான மார்க்கம், அறிவை வளர்க்க சொன்ன மார்கம். ஆனால் இன்று நாம் இஸ்லாம் சொல்லாத சில தீய செயல்களினால் இஸ்லாமிய மார்க்கத்திக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாக நம் மனம் போன போக்கில் சில விஷயங்களை செய்து வருகிறோம். அது ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அழகல்ல.
மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் [சகுனம் பார்த்தல், ராசி பார்தலின் மூலம்] தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.
அல்லாஹ் நம் உள்ளத்தில் தீய செயல்களை செய்யும் ஆசையையும், நன்மையான செயல்களை செய்யும் ஆசையையும், போடுகிறான்; நம் ஈமான் நன்மையின் பக்கம் சாய்கிறதா? அல்லது தீமையின் பக்கம் சாய்கிறதா? என்பதாக சோதிக்கிறான். நம் நஃப்ஸை நன்மையிலும், தீமையிலும் அல்லாஹ்வை நினைக்கும் உள்ளமாக மாற்றிடுவோமாக! ஆமீன்.
அன்புள்ளவர்களே! நாம் செய்யும் பாவங்கள் மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
சிறு பாவங்கள் [தீயவை பார்த்தல், தீயதை கேட்டல், தீய செயலை செய்தல்] , [ இவைகளை ஒழு, தொழுகை, நோன்பு, ஹஜ் ஆகிய அமல்களின் மூலம் போக்கி விடலாம்.]
மனிதர்களின் மூலம் ஏற்படும் பாவங்கள் [ பிறர்மனம் புண்படும்படி நடத்தல், கடன் வாங்கி ஏமாற்றுதல், புறம் பேசுதல்] [ இவைகளை பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.]
[பித் அத்] மார்கத்தில் சொல்லாத விஷயங்களை செய்வதின் இழிவுகள் பற்றியும்,,
சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல் சம்பந்தமாகவும்,
நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் – மூட நம்ம்பிக்கையின் விபரீதங்கள்
சம்பந்தமாகவும், விதியை நம்புதல் அதன் சிறப்பும் அவசியம் – பற்றியும்,
இன்னும் பல சுவை கருத்துக்களுடன் இன்றைய ஜுமுஆவில் முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
அல்லாஹ் பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் அதன் வழிபடி வாழ அருள்புரிவானாக! ஆமீன்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:-
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன்: 3:19) ➚
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அன்புள்ளவர்களே! நாம் மார்கத்தில் சொல்லாத சகுனம் பார்த்தல், ராசி பார்தல், சூனியம் செய்தல், ராசி பார்தல், ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் ஆகிய தீமைகளை அதிகமாக செய்து வருகிறோம். இதனை செய்யக்கூடாது என்பதற்கு மார்க்கம் என்னென்ன எச்சரிக்கைகள் செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள.(அபூதாவூத்: 1514)
“உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறெவரை?’ என்று பதிலளித்தார்கள். புஹாரி-3456
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” நஸாயி-1578
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.(அபூதாவூத்: 4606)
புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
அன்புள்ளவர்களே! நாம் மார்கத்தில் சொல்லாத சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் ஆகிய தீமையான காரியங்கள் நடக்கும் போது அதனை விட்டும் ஒதுங்கி நம் ஈமானை பாதுகாத்தல்.
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன்: 25:72) ➚
சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ஜோதிடம் கேட்டல், கியாமத் நாளின் அடையாளம்
அன்புள்ளவர்களே! சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் ஆகிய தீமைகள் அதிகமாக நடப்பது கியாமத் நாளின் அடையாளமாகும்..
கல்வி உயர்த்தப்படுவது. ( கல்விமான்கள் மரணிப்பது) அறியாமை அதிகமாவது.விபச்சாரம் அதிகரிப்பது மதுப்பிரியர்கள் அதிகமாவது. ஆண் இனம் குறைவது பெண் இனம் அதிகமாவது ஐம்பது பெண்களை ஒரு ஆண் நிர்வாகம் செய்யுமளவு அதிகமாகி விடுவது. இவைகள் அழிவு நாளின் அறிகுறிகளாகும்.(புகாரி: 5437)
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.(புகாரி: 80, 81, 5577, 6808, 5231)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது(முஸ்லிம்: 2230)
யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்”(அபூதாவூத்: 3904)
நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரும் மோசடியாகும்”(அபூதாவூத்: 4971)
நட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்” நூல்: ஹாகிம், பாகம்1
இந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது!
நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக, பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கிட்டால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல் போன்றவையாகும்.
இரவு நேரத்தில் வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். கழுதை கத்தினால் நல்ல சகுனம். காரணம், அது உறவைத் தேடிக் கத்துகிறது. காக்கை கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது. பூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது. இது போன்ற வீணான கற்பனைகளை நம் மனதில் நினைத்து பிறர் மனதை புண்பட செய்கிறோம்.
அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது “உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!” எனும் (2:189ஆவது) இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்கள் விஷயத்தில் அருளப்பெற்றது.(புகாரி: 1803)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள்.
(அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.(முஸ்லிம்: 1700)
முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ர-லி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்)கொண்டிருந்தோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள். மேலும், “நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக்கொண்டிருந்தோம்” என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், “இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதி-லிருந்து) தடுத்துவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.
நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனின் தட்சிணை ஆகியவற்றுக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.(புகாரி: 5761)
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். ‘அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் சிலவேளைகளில் எங்களக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அந்த உண்மையான சொல் ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.(புகாரி: 5762)
அன்புள்ளவர்களே! பலரின் வாழ்வை சீரழித்த ஜோதிடத்தின் விளைவுகளை கீழுள்ள தலைப்பை க்ளிக் செய்யுங்க..
ஜோதிடத்தை நம்பியதால் விபரீதம்: முதியவரை கொன்ற மனைவி, பல குமருகளின் திருமணங்கள் தள்ளி போடுவதும் இந்த ஜோசியம் முக்கிய காரணம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. “ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது.(புகாரி: 5757)
அன்புள்ளவர்களே! சபர் மாதத்தில் இருக்குற நாம் இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் சிலரிடத்தில் ஸஃபர் மாதம் பீடை மாதம் என்றும், அம்மாதத்தில் திருமணம், சுப நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்றும் தீய எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது, அண்ணல் நபி ﷺ அவர்களின் காலத்திலிருந்து இப்போது வரைக்கும் அத்தீய பழக்கம் நின்ற பாடில்லை. ஆக கீழுள்ள நபிமொழியை நினைவில் கொண்டு நம் மனதில் உள்ள் பீடையை நீக்கிடுவோம்.
ஆயிஷா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்துகொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
அன்புள்ளவர்களே! நல்ல நேரம் [நாள்], கெட்ட நேரம் [நாள்] என்பது நம்முடைய இபாதத்தை பொருத்துதான் இருக்கிறது. [உ.ம்] காலை சுப்ஹ் தொழுதால் அல்லாஹ்வின் பொருப்பில் வந்து விடுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். புகாரி (7491)
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்லநாள் கெட்டநாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் நல்ல நாள்? தீய நாள்? சென்னர்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும்.[(முஸ்லிம்: 2334)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச்செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன். புகாரி (6882)
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எவர் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். எவர் இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறாரோ அவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்” என்று கூறினார்கள்.(புகாரி: 6921)
அன்புள்ளவர்களே! சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் ஆகிய தீமைகளுக்கு ஆலோசனையும் கூற கூடாது உதவியும் செய்யக்கூடாது. அத்தீமைகளை தடுக்க முன் வர வேண்டும்.
உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால்
தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும். திர்மிதி-2173
அன்புள்ளவர்களே! சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் ஆகிய பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து இருப்பது மிக அழகானதாகும்..
ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்”(திர்மிதீ: 2317)
பல குடும்பங்களை சீரழித்த & தமக்குத் தேவையற்ற மேற்கூறிய பெரும் பாவங்கள் வேன்டாமே.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்’ என்று பதிலளித்தார்கள்.(புகாரி: 5754)
தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. நற்குறி எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும். நல்ல (மங்கலகரமான) சொல் தான் அது. என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். புகாரி (5756.)
அன்புள்ளவர்களே! நல்ல நேரம் கெட்ட நேரம் – ராசி பார்க்குதல் போன்றவைகளை நம்ப கூடாது. அல்லாஹ்வின் விதியை மட்டுமே நம்ப வேண்டும். [பொருந்திக்கொள்ளவேண்டும்] லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் [நன்மை, தீமை அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது] இன்னல்லாஹ அலா குல்லி ஷையின் கதீர் [ அல்லாஹ்வே எல்லா பொருளின் மீதும் சக்தி பெற்றவன்] என உறுதியான ஈமான் வர வேண்டும்.
இஸ்லாத்தில் விதியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது போல் வேறு மதங்களிலும் தலைவிதி என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் சொல்லும் விதி நம்பிக்கைக்கும் மற்றவர்களின் விதி குறித்த நம்பிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் “உங்களில் யாராக இருந்தாலும் நரகத்திலும் சொர்க்கத்திலும் அவரது இடம் முடிவு செய்யப்படாமல் இல்லை” என்று கூறினார்கள். நாங்கள் இதன் மீது நம்பிக்கை வைத்து ஏதும் செய்யாமல் இருக்கலாமா என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் செயல்படவேண்டும் எனக் கூறிவிட்டு யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். (92:5) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.(புகாரி: 4945, 4946),
விதியை நம்ப வேண்டும் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியின் மீது பழி போட்டு விட்டு செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்துகிறார்கள்.
விதியை நம்புவதால் கிடைக்கும் இந்த மாபெரும் இரண்டு நன்மைகளும் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.
முஸ்லிமின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவனுக்கு எல்லாமே நன்மையில் முடிகின்றது. அவனுக்குத் துண்பம் நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்கிறான். எனவே அது அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு இன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. இந்த நிலை முஸ்லிமைத் தவிர யாருக்கும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.(முஸ்லிம்: 5726)
எனவே விதியை சரியான முறையில் நம்பி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இவ்வுலகில் பெறக்கூடியவர்களாகவும், நம்ப வேண்டியவைகளை சரியான முறையில் நம்பி மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தினராகவும் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக.
அல்லாஹ்வுக்கு பிடிக்காத இணையாக்கும் செயலை விட்டும் தவிர்போம்
அன்புள்ளவர்களே! சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல், ராசி பார்க்குதல் ஜோதிடம் கேட்டல், குறி சொல்லல் – குறி கேட்டல், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்த்தல் ஆகிவைகள் அல்லாஹ்வுக்கு பிடிக்காத அல்லாஹ்வாஈ இணையாக்கும் செயல்கள் ஆகும் ஆதலால் அதனை விட்டும் தவிர்போமாக!
ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள், பத்துக் காரியங்கள் செய்யும்படி எனக்கு உபதேசம் செய்தார்கள். அதில் ஒன்று
நீர் வெட்டப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும், அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என்றார்கள். புஹாரி 5861.
என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.(புகாரி: 3461).
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.