இறையருளை பெற்றுத்தரும் துல்ஹஜ் பத்து நாட்கள்

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

இறையருளை பெற்றுத்தரும் துல்ஹஜ் பத்து நாட்கள்

அல்லாஹ்வின் அருள் பொங்கும் ரமலான் மாதத்தை மிகச் சிறப்பான முறையிலும் நன்மைகளை அதிகமதிகம் செய்தும் கழித்திருக்கின்றோம். நமக்கு வழங்கப்பட்ட அற்புதமான வாய்ப்பை நம்மில் பெரும்பாலானோர் கன கச்சிதமாகப் பயன்படுத்தி இலக்கை நோக்கிப் பயணித்திருக்கின்றோம்.

ரமளானைத் தொடர்ந்து நன்மைகளை நாம் அதிகமதிகம் செய்து இறையருளில் நனைய வேண்டும் என்பதற்காக நம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது துல்ஹஜ் மாதம். இந்த துல்ஹஜ் மாதம் என்பது ரமளானுக்கு அடுத்தபடியாக நம்மை சொர்க்கத்தின் பாதையில் வெகு சீக்கிரமாக இழுத்துச் செல்கின்ற ஒரு அற்புத மாதமாகும்.

துல்ஹஜ் மாதத்திற்கு ஏராளமான சிறப்புகளும் மகத்துவமும் நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தருகின்ற சக்திகளும் இருக்கின்றன. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் துல்ஹஜ் மாதத்தின் புனிதத்தை அறிந்தும் அறியாதவர்களைப் போன்று அலட்சியமாகக் கழித்து வருவதைப் பார்க்கின்றோம்.

இன்னும் சொல்வதாக இருந்தால் துல்ஹஜ் மாதத்திற்கு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன? அதை அடைந்து கொள்வது எப்படி? அருள் பொங்கும் துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளைப் பெற என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகளுக்குத் திட்டங்கள் வகுக்கப்படாமலேயே பெரும்பான்மையான முஸ்லிம்களின் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கின்றது.

மாதங்கள் குறித்துத் திருக்குர்ஆன்

உலகம் படைக்கப்பட்ட நாட்கள் முதலே மனிதர்கள் தங்களின் வாழ்நாளையும், இன்னபிற காரியங்களையும் கணக்கிடுவதற்காக மாதங்களை அல்லாஹ் வகுத்திருக்கின்றான். இறைவன் வகுத்திருக்கின்ற மாதங்களில் சில புனித மாதங்களையும் இறைவன் கற்றுத் தந்திருக்கின்றான்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 9:36)

உலகத்தைப் படைத்த ஆரம்ப கட்டத்திலேயே இறைவன் மாதங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து விட்டான். மேலும், அந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்கள் புனித மாதங்களாக இறைவனால் கருதப்படுகின்றது.

இந்தப் புனித மாதங்களில் எதிரிகள் வலுக்கட்டாயமாகக் கூட்டத்தைச் சேர்த்து போருக்கு வந்தாலே தவிர, முஸ்லிம்கள் கண்டிப்பாகப் போருக்குச் செல்லக் கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும்.

இந்த நான்கு புனித மாதங்களில் ஒன்று தான் நம்மை ஆரத் தழுவக் காத்துக் கொண்டிருக்கின்ற, இறையருளை வாரி இறைக்கின்ற துல்ஹஜ் மாதமாகும். இந்தப் புனித மாதத்தில் நன்மைகளை போட்டி போட்டுக் கொண்டு அதிகமதிகம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

இறையருளைப் பெற்றுத் தரும் பத்து நாட்கள்

நம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கின்ற துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் என்பது அளப்பரிய சிறப்பையும் நன்மையும் வாரி வழங்குகின்ற நாட்கள்.
இந்தப் பத்து நாட்களில் ஒரு முஸ்லிமான அடியார் அல்லாஹ்வுக்காகச் செய்கின்ற அமல்கள் அல்லாஹ்விடத்திலே மகத்தான நற்கூலியைப் பெற்றுத் தந்து, அல்லாஹ்வின் அருளுக்குச் சொந்தக்காரர்களாக மாற்றுகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நற்செயலும் இந்த (அய்யாமுத் தஷ்ரீக்) நாட்களில் செய்யும் எந்த நற்செயலையும் விடச் சிறந்ததல்ல’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அறப்போர் (ஜிஹாத்)கூட (சிறந்தது) இல்லையா?’’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அறப்போர் கூட(ச் சிறந்தது) இல்லைதான். ஆனால், தம் உடலையும் தமது பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று எதுவுமில்லாமல் திரும்பி வந்த மனிதரைத் தவிர’’ என்று சொன்னார்கள்.

ஆதாரம்:(புகாரி: 969)

துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் என்பது நற்செயல்களை அதிகமதிகம் செய்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற நாட்கள் என்பதை இச்செய்தி வலுவாக எடுத்துரைக்கின்றது. எந்தளவிற்கென்றால், இந்தப் பத்து நாட்களில் நாம் செய்கின்ற அமல்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது, இந்தப் பத்து நாட்கள் அறப்போரை விடவா சிறந்தது? என்று விழி உயர்த்திக் கேள்வி எழுப்பிய போது, ஆம்! அறப்போர் கூடச் சிறந்தது இல்லைதான். ஆனால், அல்லாஹ்வின் பாதையில் சென்று வெறுமனே ஒன்றுமில்லாமல் திரும்பிய மனிதரைத் தவிர என்று இந்தப் பத்து நாட்களை சிலாகித்துக் கூறினார்கள்.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழாத நமக்கு அறப்போரில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. ஆனால், நம்மில் ஒருவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அல்லாஹ்வுக்காக நற்காரியங்களில் ஈடுபடும் போது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடச் சிறந்த நற்கூலியை அல்லாஹ் தருகின்றான் என்றால், எவ்வளவு மகத்தான, சங்கைக்குரிய நாட்களை ஒவ்வொரு வருடமும் நாம் இழந்து வருகின்றோம் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

இறைவன் கூறுகின்ற அந்தக் குறிப்பிட்ட நாட்களான துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களில் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழும் வண்ணமாக தக்பீர் கூற வேண்டும். அதிகமான நேரங்கள் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகவும், இறைதியானத்தில் ஈடுபடுவதற்காகவும் ஒதுக்க வேண்டும் என்பதை விளங்க முடிகின்றது.

ஆனால் நம்மில் எத்தனை பேர் தக்பீரிலும், தியானத்திலும் ஈடுபட்டு வருகின்றோம்? என்ற கேள்விக்கணையை நம்முடைய உள்ளங்களில் நாமே கேட்டுக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களில் இந்த நாட்களை வீணடிக்காமல் இருக்க அதிகம் சிரமத்தை எடுக்க வேண்டும்.

வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!

(அல்குர்ஆன்: 89:1-2)

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே அல்லாஹ், வைகறையாக இருக்கின்ற காலத்தின் மீது சத்தியம் செய்து விட்டுப் பிறகு, முக்கியமான பத்து இரவுகளின் மீதும் சத்தியம் செய்கின்றான்.

இறைவனால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்ற அந்தப் பத்து இரவுகள் எவை என்பதை நேரிடையாக ஹதீஸ்களில் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வைத்து, அந்தப் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களைத் தான் குறிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் பத்து குறிப்பிட்ட இரவுகளின் மீது சத்தியம் செய்து விட்டு, சில முக்கியமான செய்திகளை மக்களுக்குச் சொல்ல வருகின்றான். அதாவது இறைவன், தான் படைத்த சில பொருட்களின் மீது சத்தியம் செய்யும் போது, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, இறைவன் சத்தியம் செய்கின்ற அந்தப் பொருட்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம். இரண்டாவது, அதன் மூலமாக நாம் பெற வேண்டிய படிப்பினை.

இதன் மூலம் இறைவன் நமக்குச் சொல்லித் தருகின்ற செய்தி என்னவென்றால், இந்தப் பத்து இரவுகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவங்களும், சிறப்புகளும் இருக்கின்றது என்பதையும், ஏராளமான படிப்பினைகளை நாம் பெற்று இறையருளைப் பெற வேண்டும் என்பதையும் அல்லாஹ் நமக்குப் பாடம் நடத்துகின்றான்.

இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும்
துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உள்ள மிக முக்கியமான நாள் அரஃபா நாளாகும். அதாவது துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் தான் ஹாஜிகள் அரஃபா என்ற பெருவெளியில் இலட்சோப இலட்ச மக்கள் திரண்டு நின்று அல்லாஹ்வின் அருளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், அன்பைப் பெறவும் ஆதரவு வைத்தவர்களாய் அணிதிரண்டு நிற்பார்கள்.

அன்றைய அரஃபா நாள் என்பது மக்காவில் கூடி இருக்கின்ற ஹாஜிகளுக்கு மாத்திரம் உரிய நாளாகக் கருதி விடக் கூடாது. மாறாக, பிறை ஒன்பது அன்று உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து முஃமினான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சொந்தமான புனிதம் நிறைந்த அரஃபா நாள்.

உலகத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டு காலமாக தூதுத்துவப் பாடம் நடத்தினார்கள் அல்லவா! அந்தத் தூதுத்துவத்தின் இறுதி உபதேசமாக 23 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றைச் சாறு பிழிந்து மக்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைத்து, பிரம்மாண்டமான ஒரு பேருரை நிகழ்த்தியதும் இந்த அரஃபா நாளில் தான்.

அரபா தினம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம். வரலாறுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனித நாள் அரஃபா. அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.

தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப் பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்’’ என்றார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?’’ எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்’’ (என்பதே அந்த 5:3 வசனமாகும்)’’ என்றார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாளே பண்டிகை நாள்தான்)’’ என்றார்கள்.

ஆதாரம்:(புகாரி: 45)

ஹஜ் என்பதே அரஃபாவில் தங்குவது தான். பத்தாம் இரவில் ஃபஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்:(நஸாயீ: 966)

புனிதம் நிறைந்த ஹஜ் பயணம் இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அரஃபாவுக்குச் சென்றால் தான் முழுமையாக அடைந்து கொள்ள முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார்கள்.

நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள் அரஃபா நாள் குறித்து இன்னும் ஏராளமான சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

இறைவன் நரகவாசிகள் மீது கொண்டுள்ள கோபத்தைக் கருணையாகவும் அன்பாகவும் மாற்றி, பெரும் பெரும் கூட்டமாக வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கின்ற நரகவாசிகளுக்கு விடுதலை கொடுக்கும் நாள் இந்த அரஃபா நாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?’’ என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.

ஆதாரம்:(முஸ்லிம்: 2623)

அரஃபா நாளில் அல்லாஹ் நரகவாசிகளுக்கு விடுதலை கொடுக்கின்றான். நரகத்திலிருந்து அதிகமான மக்களை வெளியே கொண்டு வருகின்ற இந்தக் காரியத்தை, சிறப்பிற்குரிய இந்த அரஃபா நாளில் தான் இறைவன் செயல்படுத்துகின்றான்.

மேலும், நபிகள் நாயகம் கூறும் போது, அரஃபா தினத்தில் அல்லாஹ் நரகவாதிகளுக்கு விடுதலை கொடுப்பது போன்று வேறு எந்த நாளிலும் நரகத்திலிருந்து விடுதலை அளிப்பதில்லை என்ற வாசகத்திலிருந்து அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான, தனது அருள் மழையைப் பொழிகின்ற, மன்னிப்பின் வாசலை திறந்து விடுகின்ற புனித நாள் இந்த அரஃபா நாள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மேலும், அல்லாஹ் அரஃபா பெருவெளியில் கூடி இருக்கின்ற ஹாஜிகளை நெருங்கி வந்து, இவர்கள் எதற்காக இங்கே குழுமி இருக்கின்றார்கள் என்று கேட்டு, தனது கருணையை அவர்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்ற அற்புத நாள் இந்த அரஃபா நாள்.

கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள் ஹஜ் செய்பவர்கள் அரஃபா என்ற பெரு வெளியில் கூடி இருக்கின்ற போது, படைத்த இறைவன் நெருங்கி வந்து தனது அருள் மழையைப் பொழிகின்றான்.

ஹாஜிகளாக இல்லாத, ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அரஃபா நாளின் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரிய வாய்ப்பையும், மகத்தான பாக்கியத்தையும் நமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

“துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்:(முஸ்லிம்: 2151)

அரஃபா தினத்தில் ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் பிறை ஒன்பது அன்று ஒரு நோன்பு நோற்றால் முந்தைய ஓராண்டு மற்றும் பின்னால் வர இருக்கின்ற ஓராண்டுப் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று கூறி அல்லாஹ்வின் மகத்தான அருளுக்குச் சொந்தக்காரர்களாக நம்மை மாற்றுகின்ற செயலை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

பிறை ஒன்பது அன்று ஒரே ஒரு நாள் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நோற்கின்ற நோன்பின் மூலமாக பின்னால் வர இருக்கின்ற ஒரு வருட காலம் நாம் செய்ய இருக்கின்ற பாவத்திற்கு இப்போதே பாவமன்னிப்பிற்கு முன்பதிவு செய்து விடுகின்ற அளவுக்கு சிறப்பிற்குரிய நாள் இந்த அரஃபா நாள்.

இந்த ஒரு நாள் நோன்பு என்பது கிட்டத்தட்ட 730 நாட்கள். அதாவது, முந்தைய ஒருவருட பாவத்திற்கும், பின்னால் வர இருக்கின்ற ஒருவருட பாவத்திற்கும் மன்னிப்பைப் பெற்றுத் தருகின்ற ஒரு அற்புதமான வாய்ப்பாகும். நம்மை ஆரத்தழுவ காத்துக் கொண்டிருக்கின்ற இந்த துல்ஹஜ் பிறை ஒன்பது அரஃபா நாளின் நோன்பைத் தவற விட்டு விடாமல் இருக்க சபதம் ஏற்போம்!!

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் என்பது இறைவனின் பார்வையில் போர் செய்வதை விட சிறந்த நாட்கள் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அதிகப்படியான அமல்களைச் செய்து அல்லாஹ்வின் அருளையையும் மன்னிப்பையும் பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

  • வசதி வாய்ப்புள்ளவர்கள் ஹஜ் – உம்ரா செய்வது
  • நோன்பு நோற்பது
  • அரஃபா நோன்பு நோற்பது
  • அதிகமதிகம் தக்பீர் கூறுவது
  • ஹஜ்ஜுப் பெருநாளில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவது
  • வசதி வாய்ப்புள்ளவர்கள் குர்பானி கொடுப்பது
  • அதிகமதிகம் தான தர்மம் செய்வது
  • குர்ஆனோடு அதிகம் தொடர்பு வைப்பது
  • கடமையான மற்றும் உபரியான தொழுகைகளை சரியாகப் பேணுவது
  • இறை தியானத்தில் மூழ்கி இருப்பது
  • அதிகமதிகம் உளமாற இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடிச் சரணடைவது
  • கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்து விலகி இருப்பது
  • இரவுத்தொழுகையில் மிகவும் பேணுதலாக இருப்பது

இதுபோன்ற ஏராளமான கூலியையும் இறைவனிடமிருந்து மன்னிப்பையும் அருளையும் பெற்றுத் தந்து நம்மை சொர்க்கத்தின் பக்கம் வெகு சீக்கிரம் அழைத்துச் செல்கின்ற இந்த அரிய வாய்ப்பைத் தவற விடலாமா? இந்த மாதத்தின் சிறப்புகளை அறிந்தும், அறியாமல் தவற விடுவோமேயானால் நம்மை விட கைசேதத்திற்குரியவர்கள் வேறு யார் இருக்க முடியும்?

இத்தனை காலம் பல ஆண்டுகள் துல்ஹஜ் மாதம் நம்முடைய வாழ்க்கையிலிருந்து கடந்து சென்று விட்டாலும், இன்ஷா அல்லாஹ் இனிவரும் துல்ஹஜ் மாதத்தை கன கச்சிதமாகப் பயன்படுத்தி, களமிறங்கி அதிகமதிகம் நன்மையில் ஈடுபடுவேன் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். இதுபோன்ற நற்காரியங்களில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு, துல்ஹஜ் மாதத்தில் இறையருளைப் பெற முயற்சிப்போமாக!