இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

சட்டத்தின் கண்கள் சாட்சிகள்

எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம் நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள் என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள்.

உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

(புகாரி: 52)

இந்த உள்ளம் சரியாகி விட்டால் எல்லாமே சரியாகி விடும். அந்த உள்ளத்தை, திருக்குர்ஆன் எப்படிச் சரி செய்கின்றது? அந்த உள்ளத்தில், படைத்த இறைவனைப் பற்றிய அச்சத்தை விதைக்கின்றது.

அல்லாஹ் ஒருவனே!

இறைவனைப் பற்றிய அச்சத்தை மனிதனது உள்ளத்தில் விதைப்பதற்கு முன், “இறைவன் ஒருவன்; அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானவன் யாருமில்லை, எவருமில்லை’ என்பதைத் தெளிவுபட, தர்க்க ரீதியாக அந்த உள்ளத்தில் நிலை நிறுத்துகின்றது.

சிலைகள் கடவுள் இல்லை

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

“நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். “அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.

(அல்குர்ஆன்: 21:50-65)

சிலைகள் கடவுளாக முடியும் என்ற சிந்தனையை தர்க்க ரீதியாகத் தகர்த்தெறிகின்றது.

சூரிய, சந்திரன் கடவுளாக முடியுமா?

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

(அல்குர்ஆன்: 41:37)

மனிதர்கள் கடவுளாக முடியுமா?

மனிதனுக்கென்று பலவீனங்கள் உள்ளன. அந்தப் பலவீனங்கள் இருப்பவர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

பசி

உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

(அல்குர்ஆன்: 5:75)

இயேசுவையும், அவரது தாயார் மேரியையும் மொத்த கிறித்தவ உலகமும் கடவுள் என்று எண்ணி வணங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவ்விருவரும் கடவுளர் அல்லர் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

(அல்குர்ஆன்: 5:75)

பசி என்ற குறைபாடு அவ்விருவரிடமும் இருந்தது. உணவு சாப்பிட்டார்கள். உணவு சாப்பிடுபவர்கள் அது ஜீரணமாகி மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றியாக வேண்டும். இப்படிப்பட்ட குறைகளைக் கொண்டவர்கள் எப்படிக் கடவுளாக முடியும்? என்று திருக்குர்ஆன் வினவுகின்றது.

மனைவி, மக்கள்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 13:38)

“அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன்: 112வது அத்தியாயம்

மனைவி, மக்களின் ஆசாபாசத்திற்கு அடிமையான ஒருவன் எப்படி அகில உலகத்திற்கும் கடவுளாக இருக்க முடியும்? என்ற வாதத்தையும் திருக்குர்ஆன் முன்வைக்கின்றது.

உறக்கம், மரணம்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

(அல்குர்ஆன்: 2:255)

கடவுளாக இருப்பவனுக்கு உறக்கம் இருக்கக் கூடாது. அது போல் அவனுக்கு மரணமும் இருக்கக் கூடாது.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்‘ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20), 21

மறதி

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

(அல்குர்ஆன்: 19:24)

நித்திய ஜீவன்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

(அல்குர்ஆன்: 2:255)

ஒரே ஒருவன் தான்

கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? அவர்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா? அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

(அல்குர்ஆன்: 21:22)

இப்படி திருக்குர்ஆன், ஒரு தெளிவான கடவுள் கொள்கையை மனிதனின் உள்ளத்தில் தர்க்க ரீதியாகப் பதிய வைத்து, அந்தக் கடவுளுக்கு அவ்வுள்ளத்தைப் பணிய வைக்கின்றது.