02) இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான்.
உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும், எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதம் எனப்படுவது.
கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ, சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாக இருந்தால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிய வந்தால் அதைத் தந்திர வித்தை – மேஜிக் எனக் கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதம் முதல் வகையிலானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும், ஏமாற்றுதலும் கிடையாது.
ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாத வகையில் ஏதோ தந்திரம் செய்கிறார்; நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் – சூனியம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை.
ஸிஹ்ர் என்ற சொல்லுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள்.
இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) எனக் குறிப்பிட்டு நிராகரித்தனர்.