இறைச்செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி (அலை)
அல்லாஹ்வின் அருளால் தமிழக முஸ்லிம்களிடம் தவ்ஹீது எனும் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு முன்பாக தவ்ஹீது கொள்கை அவர்களிடம் இடம் பிடிக்காமல் இல்லை. இணை வைத்தல், தர்ஹா வழிபாடு, தாயத்து தட்டு போன்றவை கூடாது என்ற சிந்தனை மக்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கவே செய்தது.
அதனால் தான் தவ்ஹீது எழுச்சி வருவதற்கு முன்பே தமிழக முஸ்லிம்கள் இரு அணியினராக இருந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருந்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு கூட்டம் அல்லாஹ்வை மட்டும் வணங்கிக் கொண்டு தர்ஹா வழிபாட்டை எதிர்த்துக் கொண்டிருந்தனர்; இன்னும் அப்படியே இருக்கின்றனர். இன்னொரு கூட்டம் தர்ஹா வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு அதற்கு முட்டுக் கொடுத்து அதை ஆதரித்துக் கொண்டிருந்தனர்; இன்னும் அப்படியே இருக்கின்றனர்.
இரு சாரார்களும் ஆதரிக்கவும் எதிர்க்கவும் மத்ஹபு நூல்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துப் போடுவார்கள். இரண்டும் சம அளவில் வந்து நின்றது. அதனால் எல்லாம் சரி தான் என்ற மனநிலை மக்களிடம் இருந்தது. அதனால் அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கி தங்கள் வழியில் சென்று கொண்டிருந்தனர். தர்ஹா வழிபாட்டுக்காரர்கள் தங்கள் வழியில் சென்று கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் மத்ஹபுக் கொள்கையில் ஐக்கியமாயிருந்தனர்.
எப்போது மத்ஹபுக்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், ஒப்புதல் அடங்கிய ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் மார்க்கம்; அதாவது வஹ்யு மட்டும் தான் மார்க்கத்தின் ஆதாரம் என்று நிறுவினோமோ அப்போது தர்ஹா வழிபாடு சிந்தனை மக்களிடமிருந்து தரையில் விழுந்து நொறுங்கியது. மக்கள் அலைகடலென தர்ஹா வழிபாட்டிலிருந்து மட்டுமல்லாமல் மத்ஹபு வழிபாட்டிலிருந்தும் வெளியே வந்தனர்.
சொல்லப் போனால் தர்ஹா வழிபாட்டை விட மத்ஹபு வழிகேடு ஆழமானதாக இருந்தது. தவ்ஹீதுக்கு எதிராக வந்த எதிர்ப்புகளை விட மத்ஹபுகள் இல்லை நிலைபாட்டிற்கு வந்த எதிர்ப்பு மிகக் கடுமையானதாக இருந்தது.
‘மத்ஹபு இல்லையென்றால் மக்கள் வழிகேட்டில் விழுந்து விடுவார்கள்; இமாம்களின் விளக்கமில்லை என்றால் குர்ஆன் விளங்காது; ஹதீஸ் விளங்காது’ என்று இஸ்லாத்தில் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் என்ற நான்கு அடிப்படைகளைத் தூக்கிப் பிடித்து மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சென்றார்கள். அது மக்களிடம் எதிர்மறை விளைவையே கொடுத்தது.
இறைச்செய்தி அதாவது வஹ்யு மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற சிந்தனையோட்டம் வலுவடைந்தது. வஹீ மட்டும் என்று தங்களின் மத்ஹ்பு வழிகேட்டிலிருந்து வழிபாட்டிலிருந்தும் அப்படியே வெளியேறினர். அலை அலையாக தவ்ஹீது கொள்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டு வந்தனர். அப்படி வந்த அந்தக் கொள்கைச் சகோதரர்களிடம் வஹீ தான் மார்க்கத்தின் ஆதாரம் என்று பதிந்திருந்த சிந்தனையை இன்று மரத்தை அரிக்கும் கரையான் போல் ஸலஃப் கொள்கை எனும் கரையான் அரிக்க ஆரம்பித்துள்ளது.
வஹீ தான் மார்க்க ஆதாரம் என்று உறுதியாக இருந்தவர்களின் இதயங்களில் இன்று இரும்பைப் பிடிக்கும் துரு போல் ஸலஃப் கொள்கை எனும் துரு பிடிக்க ஆரம்பித்து விட்டது. விளைவு இஸ்லாத்தில் குர்ஆன், ஹதீஸ் என்ற வஹீ அடிப்படையிலான இரண்டு ஆதாரங்களைத் தாண்டி சஹாபாக்கள் என்ற மூன்றாவது ஆதாரத்தை இந்த ஸலஃபுகள் ஏற்றுக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.
சஹாபாக்கள் இல்லாமல் மார்க்கத்தை விளங்க முடியாது என்று மத்ஹபுவாதிகள் வைத்த அதே போலி வாதத்தை வைக்கக் கிளம்பி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் மத்ஹபுவாதிகளை மிஞ்சும் அளவுக்கு இவர்களது செயல்பாடு அமைந்திருக்கின்றது. ஆண்களை எடுத்துக் கொண்டால் ஜுப்பா, தொப்பி என்று ஒரு வித்தியாசமான தோற்றத்திலும், பெண்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக முகத்தை மூடிக் கொண்டும் அலைகின்றார்கள்.அதனால் இஸ்லாத்தில் மூன்றாவது ஆதாரத்தை நிறுவத் துடிக்கும் இவர்களை எதிர்த்து சிந்தனை ரீதியிலும் செயல்பாட்டு ரீதியிலும் இவர்களது கொள்கையை அடையாளம் காட்டி இளைஞர்களை இந்த வழிகேட்டிலிருந்து மீட்பது நமது கடமையாகும்.
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
(அல்குர்ஆன்: 19:43)➚
தனக்கு வந்த வஹீ எனும் கல்வியைத் தான் இப்ராஹீம் (அலை) சொல்கின்றார்கள். அந்த இறைச்செய்தியை இறுகப்பிடித்து அதன்படி அவர்கள் நடந்து நேர்வழியை அடைந்தார்கள். இதை அல்லாஹ் தனது குர்ஆனில் கூறுகிறான்.
அவன், அவரைத் (இப்ராஹீமை) தேர்ந்தெடுத்து, நேரான பாதையில் செலுத்தினான்.
(அல்குர்ஆன்: 16:121)➚
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கும் கூறுகின்றான்.
(நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
(அல்குர்ஆன்: 43:43)➚
நேர்வழியில் செல்ல வேண்டுமா? இவ்விரு தூதர்களின் வழியில் வஹீயை மட்டுமே பின்பற்றும் வண்ணம் நமது வாழ்க்கையை அமைத்து வெற்றி பெறுவோமாக!