இரமலான் மாத இரவுகளில் குறிப்பிட்ட வணக்கங்களை மட்டும் செய்யுமாறு வலியுறுத்தலாமா?
இரமலான் மாதத்தில் என்னென்ன வணக்கங்களை செய்ய திருக்குர்ஆனும் நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பேருரள் கிடைக்கும் மாதம் ரமலான் மாதமாகும்.
ரமலான் மாதம் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனின் பேரருள் இம்மாதத்தில் கிடைப்பதால் அதிக வணக்கங்களில் மக்கள் ஈடுபடுகின்றன. பள்ளிவாசலில் சிலர் குறிப்பிட்ட வணக்கங்களை குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்த அட்டவணையிட்டு செயல்படுத்துகின்றனர். இவ்வாறு செய்யலாமா?
நபிகளார் ரமலான் மாதத்தின் என்னென்ன வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். எதை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டால் இந்த கேள்விக்கு விடை கண்டுபிடித்துவிடலாம்.
இரமலான் மாதத்தில் நபி (ஸல்) இரவுத் தொழுகை (இன்று மக்களால் தராவீஹ் என்று சொல்லப்படும் தொழுகையை) நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 37) ➚, (முஸ்லிம்: 1391) ➚
(இரலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) ஓர் இரவில் பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத போது (அவர்களுக்குப் பின்னால் தொழ நின்ற) மக்கள் அதிகரித்தனர். மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு மக்கள் திரண்ட போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை. அதிகாலையானதும் நீங்கள் செய்ததை நிச்சயாக நான் பார்த்(துக் கொண்டுதான் இருந்)தேன். (இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டுமென) உங்கள் மீது அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சியது தான் உங்களிடம் வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது என்று கூறினார்கள். இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
யார் (இரவில்) இமாமுடன் அவர் தொழுகையை முடிக்கும் வரை நின்று தொழுகிறாரோ அவருக்கு இரவு (முழுவதும்) நின்று தொழுத நன்மை எழுதப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
(திர்மிதீ: 734) ➚,(நஸாயீ: 1605) ➚, இப்னுமாஜா-1327,(அஹ்மத்: 21485) ➚ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
எனவே அதிக நேரம் நின்று வணங்க ஆசைப்படுபவர்கள் பள்ளியில் இமாமுடன் சேர்ந்து தொழுது கூடுதல் நன்மைகளை பெறலாம்.
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். சிலரைப் பின் பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே! என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன்.
மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்! என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுவந்தனர் என்று அப்துர்ரஹ்மான் பின் அப்துல்காரீஎன்பவர் குறிப்பிடுகிறார்.
நபிகளார் காலத்திலிருந்து உமர் (ரலி) அவர்கள் காலம் வரை மக்கள் ஜமாஅத்தாகவும் தனியாகவும் தொழுவந்துள்ளனர். இதை நபிகளார் அனுமதித்துள்ளனர். எனவே விரும்பினால் ஜமாஅத்தாகவும் விரும்பினால் தனியாகவும் தொழலாம்.
அவர்கள் ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்.
ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுபவர்கள்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 66)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللهِ الأَغَرِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ : مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.
நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவ மன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 1145) ➚, (முஸ்லிம்: 1386) ➚
இரமாலன் மாதத்தில் பாவமன்னிப்பு தேடுவதை நபிகளார் ஆர்மூட்டியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! லைத்துல் கத்ரை அடைந்தால் நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அதற்கு, ”இறைவா! மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புவன் என்னை மன்னித்துவிடு!“ என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
திருக்குர்ஆன் இறங்கிய மாதமாக இருப்பதாலும் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளதால் அதிகமதிகம் திருக்குர்ஆனை படிப்பவர்களாகவும். இம்மாதத்தில் நபிகளார் அதிகமதிகம் தர்மம் செய்துள்ளதால் முடிந்தளவு கூடுதலாக தர்மம் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.
உலக விசயங்களிருந்த தவிர்ந்து வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபட இரமாலன் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் பள்ளியில் தங்கி இறைவணக்கங்களில் ஈடுபடலாம்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 2033) ➚
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு பிறகு அவசியம் ஏற்படும் நேரங்களில் பயான் செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர்.
அப்போது என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர்.
இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) (ரலி),
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை’ அல்லது “நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்’ குலத் தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்’ குலத்தைச் சேர்ந்த வர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்க ளுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள் ளுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 4:1)➚ஆவது இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை யாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும்.அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 59:18)➚ ஆவது வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு “ஸாஉ’ கோதுமை, ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை யேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத் தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டி ருந்தனர்.
இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.
அறிவிப்பவர்: ஜரீர் (ரலி),
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு பிறகு அவசியமான நேரங்களில் பயான் செய்துள்ளார். இதன் அடிப்படையில் இரவுத் தொழுகை மற்றும் வேறு வணக்கங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மக்களுக்கு பயனுள்ள பயான்களை செய்து கொள்ளலாம்.
இரமலான் மாதங்களில் நபிகளார் நேரடியாக செய்து காட்டிய வணக்க வழிபாடுகள் செய்ய ஆர்வமூட்டலாம். இதைத்தான் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் செய்ய வேண்டுமென பட்டியலிட்டு கட்டாயப்படுத்தக்கூடாது.
இரமலான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட, பாவமன்னிப்புத் தேட, துஆ செய்ய இடையூறாக வேறு வணக்கங்களை பள்ளியில் செய்ய வலியுறுத்தக்கூடாது. மேற்கூறப்பட்ட காரியங்களை தனித்தனியாக ஒருவர் செய்ய விரும்பும் நேரத்தில் அவர் செய்வதற்கு இடையூறுகள் இருக்கக்கூடாது.
ஜமாஅத்துடன் தொழுகை நடத்துவது நபிகளார் காட்டித் தந்தவை. அவற்றை பள்ளியில் நடத்தலாம். குறைந்த நேரத்தில் பயான்கள் வைத்துக் கொள்ளலாம். முழு நேரமும் பயான் போன்றவை நடத்தி மற்ற வணக்கங்கள் செய்ய இடையுறு செய்யக்கூடாது.
இரமலான் மாதங்கள் அதிகமதிகம் தொழுவதும் பாவமன்னிப்பு தேடுவதும் முக்கியமானவையாகவும். இதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.