இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காண்கிறோம். அவற்றை மக்களுக்கு அயராது எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கிறோம்.

இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடுவதற்குக் காரணமாகவும், கருவாகவும் அமைந்திருப்பது, “அந்தப் பெரியார்கள் சமாதிகளில் உயிருடன் இருக்கிறார்கள்; தங்கள் சமாதிகளுக்கு முன்னால் பக்திப் பரவசத்துடன் நின்று கெஞ்சிக் கேட்கும் பக்த கோடிகளின் பிரார்த்தனைகளை அவர்கள் பரிவோடும் பாசத்தோடும் செவிமடுக்கின்றார்கள்; அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறார்கள்’ என்ற நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை சரியானது தானா? என்று பார்ப்போம்.

இரும்புத் திரையை மிஞ்சும் இறைத் திரை

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

(அல்குர்ஆன்: 55:19), 20

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99), 100

இரு கடல்களும் சந்திக்க முடியாத அளவிற்கு, நம்முடைய புறக் கண்களுக்குத் தெரியாத ஒரு நிரந்தரத் திரையை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். அது போலவே உலகத்தில் வாழ்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையில் ஒரு திரையைப் போட்டுள்ளான். இந்தத் திரை இரும்புத் திரையை மிஞ்சும் வலுவான திரையாகும்.

அல்லாஹ்வின் இந்தத் திரையைக் கிழித்துக் கொண்டு இவ்வுலகில் வாழ்வோரின் அபயக் குரல்களை இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என்று நம்புவது இறை மறுப்பாகும்.

இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என்ற இந்த வாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் சம்மட்டியாக உஸைர் (அலை) அவர்களின் மரணச் சம்பவம் அமைந்துள்ளது. ஈஸா (அலை) அவர்களின் பிறப்பில் அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினான் என்றால், உஸைர் (அலை) அவர்களின் இறப்பில் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

எல்லோரையும் அல்லாஹ் ஒரு தடவை மரணிக்கச் செய்கிறான் என்றால் உஸைரை அல்லாஹ் இரு தடவை மரணிக்க வைத்துள்ளான். முதலில் ஒரு தடவை இறந்து, உயிர் பெற்று, பிறகு இரண்டாவது தடவை எல்லோரையும் போல் இறக்கின்றார்கள்.

இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக உஸைர் (அலை) அவர்களின் மரணத்தில் என்ன அடங்கியிருக்கின்றது? என்பதைக் காண்பதற்கு முன்னால், ஒருவர் உறங்கும் போதும், அவர் மரணிக்கும் போதும் உயிரின் நிலை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

உறங்கும் போது ஓடி விடும் உயிர்

வீட்டையே அதிர வைக்கும் பேரிடி முழக்கத்துடன், பேய்க் காற்றுடன் பெருமழை பெய்து ஓய்ந்திருக்கும். ஆனால் வீட்டிற்குள் உறங்குகின்ற மனிதன் விழித்த பின்பு வெளியே வெறித்துப் பார்த்து, மழை பெய்ததைத் தெரிந்து கொள்கிறான். இதற்குக் காரணம் புலன்களின் உணர்வுக்குப் பூரண காரணமாக இருக்கும் அவனது உயிர் பூத உடலை விட்டு எங்கோ போயிருக்கின்றது என்று தானே பொருள். ஆம்! அது தான் உண்மையாகும்.

ஓடுகின்ற பேருந்தில் ஒருவன் உறங்குகின்றான். ஓரிடத்தில் அந்தப் பேருந்து முட்டி மோதி நிற்கின்றது. மோதியவுடன் அவனது தலையில் இடி விழுந்தாற்போல் ஓர் அடி விழுகின்றது. ரத்தம் பீறிட்டு வருகின்றது. அத்துடன் அவனது உணர்வும் சேர்ந்தே திரும்புகின்றது. “நாம் விழித்திருந்தால் நமது மண்டையில் அடி விழுந்திருக்காதே! இந்தக் காயத்தை விட்டுத் தப்பியிருக்கலாமே!’ என்று நினைக்கிறான். தன்னை இழந்து தூங்கிய இவனிடமிருந்து உயிர் எங்கே போனது? இதை அல்லாஹ்வே சொல்கிறான்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 39:42)

உறங்குவோரின் உயிர் அல்லாஹ்விடமே சென்று விடுகின்றது என்பதை இந்த இறை வசனம் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றது. பேருந்தில் பயணித்தவன் அடிபட்டு மீண்டும் உணர்வு பெற்று விட்டான் என்றால் அவனை குறிப்பிட்ட தவணை வரை இறைவன் வாழ விட்டிருக்கின்றான் என்று அர்த்தம். விழிக்காமலேயே விபத்தில் அவன் இறந்து விடுகின்றான் என்றால் அவனது உயிரை அல்லாஹ் தன் கையிலேயே வைத்துக் கொள்கின்றான்.

இதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது,

“உனது திருப்பெயரால் மரணித்து, (உனது பெயராலேயே) உயிர் பெற்று எழுகின்றேன்” என்றும், விழிக்கும் போது, “எங்களை மரணிக்கச் செய்த பிறகு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடம் தான் உயிர் பெற்றெழுதல் இருக்கின்றது” என்றும் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூல்: புகாரி

உங்களில் ஒருவர் படுக்கைக்குச் சென்றால், தான் அணிந்திருக்கும் ஆடையின் உட்புறத்தைக் கொண்டு அவரது படுக்கை விரிப்பை உதறி விட்டுக் கொள்ளட்டும். ஏனெனில் அவரில்லாத சமயத்தில் அதில் என்ன விழுந்தது என்று அவருக்குத் தெரியாது. அதன் பிறகு, “என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!” என்று கூறுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 6320)

உறங்கும் போது நமது உயிர்கள் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன என்பதை அண்ணலாரின் இந்த ஹதீஸ்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்து விடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!” என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமக்கு விதிக்கப்பட்டிருந்த அளவுக்குத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உறங்கினார்கள். ஃபஜ்ர் நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை திசையை முன்னோக்கிய படி தமது வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்த படியே கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும் வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், “பிலாலே!” என்று அழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! உங்களது உயிரைப் பிடித்த அதே நாயன் தான் எனது உயிரையும் பிடித்து விட்டான்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்” என்று கூற, உடனே மக்கள் தங்கள் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி)யிடம் இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும், “தொழுகையை மறந்து விட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவு கூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக‘ (அல்குர்ஆன்: 20:14) என்று கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1097)

இந்த ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின் உயிரும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. அல்லாஹ் அதை விட்டால் தான் அவர்களும் விழிக்க முடியும் என்பதைப் பார்க்கிறோம்.

அத்துடன் உறங்குகின்ற அத்தனை பேரின் உயிர்களும் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன. அதை ஒரு நொடிப் பொழுதும் வைத்திருப்பான்; அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்திருப்பான். அவன் நாடினால் நாடிய நேரத்தில் விடுவான்.

வழமையாக ஒரு மனிதன் உறங்கும் நேரம் அரை நாள்! அதிக பட்சம் ஒரு நாள் உறங்குவதைப் பார்க்கிறோம். இதற்கு மாற்றமாக முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்களைக் கைப்பற்றி தனது அடியார்களை உறங்க வைக்கவும் இறைவனால் முடியும். இதைத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.)

(அல்குர்ஆன்: 18:25)

அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்” என்றனர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றும் கூறினர்.

(அல்குர்ஆன்: 18:19)

இந்தக் குகைவாசிகள் உறங்கினார்களா? அல்லது இறந்து விட்டார்களா? என்ற சந்தேகம் வரலாம். இதற்கும் அல்லாஹ்வே விளக்கம் தருகின்றான்.

அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.

(அல்குர்ஆன்: 18:18)

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், அந்த நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகை வாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம்.

(அல்குர்ஆன்: 18:21)

மறுமை நாள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான். இந்தச் சம்பவத்தின் மூலம், தான் கைப்பற்றும் உயிர்களை அல்லாஹ் முன்னூறு ஆண்டுகள் கழித்தும் விட்டு விடுகின்றான் என்பதை அறிந்து கொள்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழாமல் உறங்கி விட்ட ஹதீஸிலிருந்தும், குகைவாசிகள் உறங்கி எழுந்த பின் உரையாடிய நிகழ்ச்சியிலிருந்தும் உயிர்கள் அல்லாஹ்வால் அவர்களின் உடல்களில் திருப்பியனுப்பப்படும் வரை உலகில் என்ன நடந்தது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை என்பதை அறிய முடியும்.

உறங்குவோருக்கு உலகில் நடப்பது தெரியவில்லை எதுவும் என்றால் இறந்தவர்களுக்கு உலகில் நடப்பவை எப்படித் தெரியும்? இத்தனைக்கும் நாம் மேலே காட்டியுள்ள சம்பவங்களில் உறங்கியவர்கள் நல்லடியார்கள் தான் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்களுக்குத் தான் உறங்கும் போது என்ன நடந்தது என்ற விஷயம் தெரியவில்லை.

மக்களுக்கு அத்தாட்சியான மாமனிதர் உஸைர்

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:259)

இந்த வசனத்தில் “உம்மை அத்தாட்சியாக்குவதற்காக” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒரு நூற்றாண்டுக்குப் பின் உயிர் பெற்று வந்த அதிசய மனிதர் என்ற கோணத்தில் மட்டும் உஸைர் (அலை) அவர்கள் மக்களுக்கு அத்தாட்சியாகத் திகழவில்லை. அவர்கள் இன்னொரு கோணத்திலும் அத்தாட்சியாகத் திகழ்கிறார்கள்.

இறந்து விட்ட பெரியார்கள், நல்லடியார்கள் செவியுறுகின்றார்கள் என்று சங்கு முழங்கும் சாட்சாத்களின் வாதங்களைச் சாம்பலாக்கி விடுகின்றது இவரது மரணச் சம்பவம்.

அல்லாஹ் அவரிடம், “எவ்வளவு நாள் தங்கியிருந்தீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு, “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி” என்று பதில் கூறுகிறார். இதன் மூலம், தனக்கு என்ன நடந்தது என்றே அந்த நல்லடியாரால் அறிய முடியவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று அவர் அறிந்தால் தானே, அவரைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியும்?

உஸைர் (அலை) அவர்களின் இந்தப் பதிலின் முலம், அவர்களைக் கடவுளின் குமாரர் என்று அழைக்கும் கூட்டத்தாருக்கு, “நீங்கள் நம்பி அழைத்த உஸைர் இப்போது கைவிரித்து உங்கள் முகத்தில் கரி பூசி விட்டார்” என்று அல்லாஹ் ஒரு பக்கம் தெளிவாக்குகின்றான்.

சமாதிகளில் சங்கமித்து விட்ட சங்கை மிக்க பெரியார்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அஜ்மீர் ஹாஜா முஈனுத்தீன், நாகூர் ஷாகுல் ஹமீது போன்றோர் செவியுறுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்று ஒரு கூட்டம் ஊர் தோறும் உரக்கப் புலம்பிக் கொண்டிருக்கின்றது அல்லவா? இந்தப் புலம்பல் சங்கதிகளுக்கும், சமாச்சாரங்களுக்கும் உஸைர் (அலை) அவர்கள் அளித்த இந்தப் பதிலின் மூலம் சாவு மணி அடிக்கின்றான்.

உஸைர் (அலை) அவர்களது உடல் கல்லறையில், கப்ரில் அடக்கப்படாமல் வெட்ட வெளியில் தான் கிடந்தது என்று தெளிவாகவே குர்ஆன் கூறுகின்றது. உடல் வெளியே கிடந்தும் வெளியுலகில் நடக்கும் எதுவும் அவருக்குத் தெரியவில்லை எனும் போது, சப்த அலைகளைச் சுமந்து திரியும் காற்றலைகள் கடுகளவும் நுழைய முடியாத கப்ருகளில் கிடக்கும் நல்லடியார்கள் எப்படிச் செவியுற முடியும்? நிச்சயம் செவியுற முடியாது.

இந்தக் கோணத்திலும் உஸைர் (அலை) அவர்கள் எல்லாக் காலத்திற்கும் சிறந்த அத்தாட்சியாகத் திகழ்கின்றார்கள்.

அகல மறுக்கும் ஆழ்ந்த தூக்கத்திலுள்ள, வழிகேடர்கள் என்று முத்திரை இடப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, சத்திய மறையின் இந்தச் சான்று போதுமானதே!