இயேசு உயிர்த்தெழுந்தது ஞாயிறா? திங்களா?
ஈஸ்டர் சண்டே என்பது தவறு! ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி! பைபிளின் அடிப்படையில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறி ஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள் என்ற அடிப்படையில் கொண்டாடுவர். இது குறித்து பல உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதால், மறைக்கப்பட்ட அந்த உண்மைத் தகவல்களை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே உணர்வு இதழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை தற்போது மீண்டும் வெளியிடப்படுகின்றது.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறித்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.
ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயு என்ற சுவிஷேசத்தில் 12:40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.
அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு.
ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாக சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை.
இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப்போட்டு பார்க்கலாம்.
அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை பகல் 3 மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர்த்தெழுந்து விட்டதாகவும், அதைச் சிலர் பார்த்ததாகவும் பைபிள் கூறுகின்றது.
இப்போது பைபிள் சொல்லக்கூடிய கணக்கை காண்போம். ஏசு இறந்து அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை.
வெள்ளிக்கிழமை இரவில் அடக்கம் செய்யப்பட்டதால் வெள்ளிக்கிழமை பகலில் அவர் பூமிக்குள் இருக்கவில்லை, இரவு மட்டுமே இருந்துள்ளார்.
சனிக்கிழமை முழுவதும் அவர் பூமிக்குள் இருந்துள்ளதால் இதில் ஒரு பகல், ஒரு இரவு உள்ளது.
மொத்தம் இரண்டு இரவுகள் ஒரு பகல் ஆகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை மகதலா மரியாள் ஏசுவை பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
மத்தேயு 28:1 முதல் 6
கிறித்தவ நம்பிக்கைப் பிரகாரம் சனிக்கிழமை ஓய்வு நாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும்தான் இயேசு பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார்.
ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும்.
ஏசு சொன்ன உண்மையான முன்னறிவிப்பின்படி,
1)வெள்ளிக்கிழமை இரவு
2)சனிக்கிழமை பகல்
3) சனிக்கிழமை இரவு
4) ஞாயிறு பகல்
5) ஞாயிறு இரவு
6)திங்கள் பகல்
முடிந்து திங்கட்கிழமை இரவுதான் உயிர்த்தெழுந்ததாக கிறித்தவர்கள் நம்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இயேசுவின் முன்னறிவிப்பை மறுக்கிறார்கள்.
மேற்கண்டவாறு கணக்கு போட்டால்தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றன. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவுதான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்பது தெரிய வருகின்றது.
ஏசு தான் சொன்ன பிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப் போனது. இதன் மூலம் பைபிள் இறைவேதமில்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.
அதே நேரத்தில் ஏசுவைப்போல தோற்றமுடைய சாத்தான்தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பலசான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதிசெய்யப்படுகின்றது.
அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
Jonah was in the stomach of a huge fish for three days and three nights. The Son of Man will be in the grave for three days and three nights.
மத்தேயு 12:40
மேற்கண்ட ஆங்கில வார்த்தைகளில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதைக் கீழ்க்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
மத்தேயு – 12:38 முதல் 40
மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்று நாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையைக் கட்டியுள்ளனர் போதகர்கள்.