04) இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

3359 حدثنا عبيد الله بن موسى، أو ابن سلام عنه، أخبرنا ابن جريج، عن عبد الحميد بن جبير، عن سعيد بن المسيب، عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم، ” أمر بقتل الوزغ، وقال: كان ينفخ على إبراهيم عليه السلام

உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல் : (புகாரி: 3359)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள் என்று மட்டும் ஹதீஸ் இருந்தால் நபிகள் நாயகத்தின் அந்தக் கட்டளையை நாம் நிறைவேற்ற வேண்டும். இது எந்த வசனத்துக்கும் எதிரானது அல்ல.

இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை மேலும் மூட்டிவிடுகின்றது என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தக் காரணம் சரியா என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதைச் சிந்திக்கும் போது இது திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணாக அமைந்துள்ளதை நாம் அறியலாம்.

பல்லி ஒரு சிறு உயிரினம். அது நெருப்பை ஊதிப் பெரிதாக்கியது என்ற சொல் அறிவுச் சுரங்கமாகத் திகழ்ந்த நபியின் கூற்றைப் போல் உள்ளதா? அல்லது விபரமறியாத ஒருவரின் சொல்லைப் போல் அமைந்துள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பல்லி சிறிய ஓர் உயிரினம். மிகப்பெரும் நெருப்புக்கு அருகில் சென்றால் கூட அது கருகி விடும் என்ற விஷயம் கூடவா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது?

இது முதல் விஷயம்.

சில உயிரினங்கள் இறைத்தூதர்களுக்கு உதவியுள்ளன என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் அது போன்ற ஹதீஸ்களை நாம் ஏற்கலாம். சுலைமான் நபியவர்களுக்கு ஹுத் ஹுத் பறவை உதவியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

(பார்க்க 27:20)

ஆனால் எந்த உயிரினமும் இறைத்தூதர்களுக்கு எதிராகக் களமிறங்காது. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டே நடக்குமாறு படைக்கப்பட்டுள்ளன.

3:83 اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் (3 : 83)

13:15 وَلِلّٰهِ يَسْجُدُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் (13 : 15)

22:18 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَ الْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِ‌ ؕ

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் (22 : 18)

இவ்வசனங்களுக்கு எதிராக பல்லி அல்லாஹ்வுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இப்ராஹீம் நபி ஏகத்துவக் கொள்கையைச் சொன்னார்கள். இதற்காகவே அவர்கள் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள். பல்லி இதில் சந்தோஷம் அடைந்து இப்ராஹீம் நபிக்கு எதிராக தன் பங்குக்கு நெருப்பை ஊதி விட்டது என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.

இதை நம்பினால் உயிரினங்களிலும் காபிரான உயிரினம் உள்ளது என்று நாம் நம்பியாக வேண்டும். அவ்வாறு நம்புவது மேற்கண்ட வசனங்களை மறுப்பதாக அமையும்.

இன்னொரு இஸ்லாமிய அடிப்படைக்கும் முரணாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

وَلَا تَكْسِبُ كُلُّ نَـفْسٍ اِلَّا عَلَيْهَا‌ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ۚ

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். 

(அல்குர்ஆன்:)

17:15 مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ ‌ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا‌ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ؕ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا‏

நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் (17 : 15)

35:18 وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. 

அல்குர்ஆன் (35 : 18)

وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَـكُمْ‌ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ؕ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. 

அல்குர்ஆன் (39 : 7)

53:36 اَمْ لَمْ يُنَبَّاْ بِمَا فِىْ صُحُفِ مُوْسٰىۙ‏
53:37 وَاِبْرٰهِيْمَ الَّذِىْ وَفّٰىٓ  ۙ‏
53:38 اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۙ‏
53:39 وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

அல்குர்ஆன் (53 : 36)

ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது தான் இஸ்லாத்தையும், கிறித்தவ மதத்தையும் வேறுபடுத்திக் காட்டும் முக்கியக் கொள்கையாகும்.

ஆதம் பாவம் செய்ததால் அனைவரும் பாவியாகப் பிறக்கிறார்கள் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. ஆதம் பாவம் செய்தால் அவரின் சந்ததிகள் எப்படி அந்தப் பாவத்தைச் சுமப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் கேள்வி எழுப்புகிறோம்.

எல்லோரும் பாவிகளாகப் பிறக்கின்றனர். இந்தப் பிறவிப் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன்னைப் பலி கொடுத்து நிவாரணம் தந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு எதிராகவும் மேற்கண்ட வசனங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் கேள்விகளை எழுப்புகிறோம்.

பல்லி இப்ராஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

இது உண்மையாக இருந்தால் எந்தப் பல்லி அவ்வாறு ஊதியதோ அந்தப் பல்லியைத் தானே கொல்ல வேண்டும். அந்தப் பல்லி செத்துப் போய் பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் அதன் வழித்தோன்றல்களான பல்லியைக் கொல்ல இந்தக் காரணம் பொருந்துமா?

மேலும் இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் போடும்போது உலகத்தில் உள்ள பல்லிகள் எல்லாம் அந்த இடத்துக்கு வந்து இருக்க முடியாது. அந்தப் பல்லிகளையும் அதன் வழித்தோன்றல்களையும் ஏன் கொல்ல வேண்டும்?

குர்ஆனுக்கு முரணாக நபியவர்கள் இவ்வாறு பேசியிருப்பார்களா? சாதாரண மனிதன் கூட ஒருவர் செய்த தவறுக்காக மற்றவரைத் தண்டிக்க மாட்டான் எனும் போது அறிவின் சிகரமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா?

எனவே பல்லியைக் கொல்லச் சொல்லும் காரணம் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதாலும், உண்மைக்கு எதிராக இருப்பதாலும் இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு நாம் வந்தாக வேண்டும்.

இது எந்த நூலில் இடம்பெற்று இருந்தாலும் எத்தனை நூல்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இந்த முடிவுக்குத் தான் நாம் வர வேண்டும். அப்படி வர மறுத்தால் மேலே நாம் எடுத்துக்காட்டிய எல்லா வசனங்களையும், இஸ்லாத்தின் அடிப்படையையும் மறுத்தவர்களாக நேரும். எந்த மனிதனும் முரண்பட்ட இரண்டை நம்ப முடியாது.

இதுதான் ஹதீஸ்களைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.