இணை வைப்போர் – அன்றும் / இன்றும்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக!
‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன்: 10:31)

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:84),85

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:86),87

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:88),89

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’

(அல்குர்ஆன்: 29:61)

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன்: 29:63)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 31:25)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:38)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 43:9)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன்: 43:87)

இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்காவில் வாழ்ந்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வைத் தான் படைத்தவன் என்று நம்பினார்கள் என்று தெளிவுபடக் கூறுகின்றன.

அப்படியானால் எதற்காக குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

மக்காவில் வாழ்ந்த அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அவன் தான் மாபெரும் ஆற்றல் மிக்கவன் என்று நம்பினார்கள். அத்துடன் குட்டித் தெய்வங்களையும் ஏற்படுத்தி அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்று கருதி அவர்களை வணங்கினார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நமது நாட்டில் உள்ள இணைகற்பிக்கும் பிற மதத்தினருக்கு இந்த நம்பிக்கை இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அறவே இல்லை. ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் இல்லை.