இணைவைப்பே தீமைகளின் தாய்!
இணைவைப்பே தீமைகளின் தாய்!
ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும் அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை.
இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை.
இதற்கு மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் மக்களும் அல்லது ஏக இறைவனுக்கு இணையாக துணை யாக ஏதேனும் ஒன்றைக் கருதும் மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் மனிதர்களின் சொந்தக் கரங்களாலும் கற்பனை களாலும் உருவாக்கப்பட்ட சடங்கு களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எனவே, இந்த உலகில் வாழும் போது எண்ணற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அல்லது எதிர்ப்படும் சிக்கல்களைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பாவமான காரியங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், இவர்களிடம் இருக்கும் இணை வைப்புக் கொள்கையே இவர்கள் செய்யும் அனைத்து தீமைகளுக்கும் பாவங்களுக்கும் உண்மைக் காரணமாக, முக்கிய அடிப்படையாக உள்ளது. இது குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.
இனம், மொழி, நிறம் ரீதியாக மக்களைத் துண்டாடும் தீண்டாமைக் கொடுமை இன்னும் இருக்கவே செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் பல நாடுகளிலும் நிறவெறி என்ற பெயரில் தீண்டாமை பரவியுள்ளது. இதைக் கண்டித்து, பல குரல்கள் ஒலித்துள்ளன. பல்வேறு விதமான போரட்டங்கள், புரட்சிகள் நடந்துள்ளன. ஆனாலும், இதை ஒழிக்க முடியவில்லை.
காரணம், இதன் மூலம் பாதிக்கப் படும் மக்கள் நினைப்பது போல, கல்வி, பொருளாதரம், அதிகாரம் போன்றவை கிடைக்காமல் இருப்பது தீண்டாமைக்குக் காரணமல்ல. மனிதர் களிடம் இருக்கும் இணைவைப்பு கலந்த ஆன்மீகக் கொள்கையே மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. தீண்டாமைக்கு எதிராகப் போராடும் நபர்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலக அளவிலும், உள்ளூர் அளவிலும் கவனித்துப் பாருங்கள். வெள்ளை நிறத்தவர்கள் அல்லது குறிப்பிட்ட இனத்தவர்கள், குலத் தவர்களின் கடவுள் கொள்கையை எடுத்துப் பார்த்தால், இறைவன் தங்களை மட்டுமே மேன்மையாகவும் மற்றவர்களை இழிவாகவும் படைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கவோ சமரசம் செய்து கொள்ளவோ முன்வர மறுக்கிறார்கள்.
அதனால் தான், பல காலங்கள் கடந்தாலும், சமூக நிலை மாறினாலும், வாழ்க்கை முன்னேற்றம் அடைந் தாலும் இதுபோன்ற பாகுபாடுகள் மறையாமல் இருக்கின்றது.
இந்நிலையில், ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் மட்டுமே இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கிறது. உலக ஒற்றுமைக்கான காரணியை அழகாக அழுத்தமாக முன் வைக்கிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத் திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆரம்பத்தில் ஒரு மனித ஜோடியை மட்டுமே படைத்தான். அந்த ஒரு தாய் தந்தையரில் இருந்தே முழு மனித சமுதாயமும் தோன்றியது என்று இஸ்லாம் கூறும் உண்மையை ஒவ்வொருவரும் உளமாற உணர்ந்து, அதற்கேற்ப வாழும்போது தீண்டா மைக்கு அறவே இடம் இருக்காது.
மனித குலத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க இஸ்லாம் மட்டுமே உரிய, உயரிய வழியாக இருக்கிறது. தீண்டமைக்குரிய அடையாளங்களை அவலங்களைச் சுமந்திருக்கும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதுமே அவை அனைத்தும் காணாமல் போய்விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதற்கும் மேலாக, ஏற்றத் தாழ்வுக்கு வித்திடும் அனைத்து வாதங்களையும் பின்வரும் வகையில் கடுமையாகக் கண்டித்து வெறுப்பது இஸ்லாத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பு என்பதில் ஐயமில்லை.
அரபி மொழியல்லாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களை விட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப் பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இன மாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ் வின் பாதையில் செய்யப்படும் போர் எது?” என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, “எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.
இனத்திற்காகப் போரிடுபவர் இஸ்லாத்திற்காகப் போரிடுபவர் அல்ல என்பதை இதன் மூலம் நபியவர்கள் விளக்குகின்றார்கள். தனது சாதியைச் சேர்ந்தவன், தனது மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் செய்த தவறுகளை நியாயப்படுத்துவதையும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிப் போராடுவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் இஸ்லாம் இதைக் கண்டிக்கின்றது.
மகப்பேறு மருத்துவ மனைகளில், பரிசோதனை மையங்களில் ஒரு பொது அறிவிப்பு வைக்கப்பட்டு இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பரிசோதிப்பது பெரும் குற்றம்; இந்தத் தடையை மீறுவோருக்குத் தண்டனை கிடைக்கும் என்று அதில் இடம் பெற்றிருக்கும். இதற்குரிய காரணம் சொல்லாமலே அனைவருக்கும் புரிந்து விடும்.
பெண் பிள்ளை பிறந்தால் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்யும் கொடூரர்கள் நிறைய இருக்கிறார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தை பிறப்பது அவமானமாகவும், வாழ்க்கை சுமையாகவும் நினைக்கிறார்கள். இவ்வாறு கருதுவதற்கும் இருப் பதற்கும், அவர்களின் வாழ்க்கை நெறியான இணை வைப்புக் கொள்கையே அடிதளமாக இருக்கிறது.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தை களைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடு கிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தி யினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
ஏக இறைவனே தான் நாடியோருக்கு குழந்தை பாக்கி யத்தைத் தருகிறான். இது அவனது மிகப்பெரும் கிருபை, அளப்பறிய அருள் என்கிறது இஸ்லாம். குழந்தை இல்லாமல் சோதனையில் துடிக்கும் தம்பதியர்களைப் பார்க்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை) களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
இன்னும் ஒருபடி மேலாக, பெண் குழந்தையைச் சீராக வளர்க்கும் நபர்களுக்கு மறுமையில் நிறைவான நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கிறது. எனவே தான், ஓரிறைக் கொள்கையை ஏற்று, பின்வரும் செய்திகளை மனதில் கொண்டு வாழும் முஃமின்களிடம் பெண் சிசுக் கொலை எனும் கொடிய காரியத்தைக் காண முடியவில்லை.
“இரு சிறுமிகளை பருவம் அடையும் வரை யார் பராமரிக் கிறார்களோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு வருவோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கை விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
மனிதப் படைப்பின் முக்கியமான முதன்மையான அடையாளமே பகுத் தறிவு தான். அதை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் ஏராளமான மூடநம்பிக்கைகள் மனிதர்களிடம் இருக்கின்றன. வீட்டை விட்டு வெளியேறுவது முதல் வீடு கட்டுவது வரை அனைத்திலும் இதன் தாக்கத்தைக் காணலாம்.
பெரும்பாலான மக்கள் சகுனம், ஜோசியம், சூனியம், நரபலி என்று மூளையை மழுங்கடிக்கும் சிந்தனை களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவற்றின் மூலம் செல்வத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கிறார்கள்.
நன்றாக இருக்கும் வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடித்துத் தள்ளுவார்கள். ஒழுங்காக நடக்கும் வியாபாரத்தை யாரோ செய்வினை வைத்து விட்டதாகக் கருதி இழுத்து மூடுவார்கள். நோய் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்காமல் பேய் பிடித்து விட்டதாகக் கூறி மந்திரவாதிகளிடம் சென்று தங்கள் பொருளாதாரம், கற்பு, உயிர் போன்றவற்றை இழப்பார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது அவர்களின் வாழ்க்கை முறையாக விளங்கும் இணைவைப்புக் கோட்பாடு தான்.
நாம் அவர்களுக்கு வழங்கிய வற்றில் இருந்து ஒரு பாகத்தை தாங்கள் அறியாதவைகளு(க்காக கற்பனைக் கடவுளு)க்காகப் படைக்கின்றனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் இட்டுக் கட்டியது பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும், கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்து கின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங் களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தை களைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
“இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.
“இக்கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும் பங்காளிகள்” எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
இவை மட்டுமல்ல, விளக்கேற்றிய பிறகு செல்வத்தை யாருக்கும் தரக் கூடாது; மாதவிடாய் பெண்கள் வீட்டுக்குள் வரக் கூடாது; கணவனை இழந்த பெண்கள் எதிரே வந்தால் காரியம் விளங்காது; காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள்; கை அரித்தால் பணம் வரும்; கயிறு கட்டினால் நோய் குணம் ஆகும்; தகடு மாட்டி வைத்தால் துன்பம் வராது; ஜோசியம் மூலம் நாளை நடப்பதை அறியலாம் என்று ஆயிரக்கணக்கான மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.
இதுபோன்ற பகுத்தறிவுக்குப் பங்கம் விளைவுக்கும் சிந்தனைகளை இஸ்லாம் துடைத்து எறிகிறது. அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப் படியே நடக்கின்றன. அவனுடைய அனுமதி இல்லாமல் எந்தவொரு இன்பமும், துன்பமும் வராது என்கிறது, இஸ்லாம்.
“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக!
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறை களில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
எல்லாம் அவன் செயல் என்று ஏக இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் போது குருட்டுத் தனமான காரியங்கள் பக்கம் போக வேண்டிய அவசியமே இருக்காது. இந்த நேரம் இதை செய்யக் கூடாது; அந்த இடத்தில் அதைச் செய்யக் கூடாது என்றொல்லாம் சிந்தனையை குழப்பிக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்காது.
ஒரு வரியில் விளக்குவதாக இருந்தால், இணை வைப்பு கொள்கைக்கு மாற்றமாக ஓரிறைக் கொள்கை சொல்லும் வகையில் நம்பிக்கை இருக்கும் போது மட்டுமே மூடநம்பிக்கைகள் மண்மூடிப்போகும்.
இணைவைப்புக் கொள்கையுடைய சித்தாந்தங்கள் வெறும் அர்த்தமற்ற ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன. அவை கண்மூடித் தனமான நம்பிக்கைகள், செயல்கள் போன்றவற்றில் மனிதர்களைத் தள்ளுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன.
ஓரிறைக் கொள்கையான இஸ்லாமோ முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது. ஆன்மீகம் எனும் எல்லையைத் தாண்டி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் துறை களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில் மனிதனின் ஒழுக்க வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.
அவற்றுள் ஒன்றாக, மதுப் பழக்கம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளது. இஸ்லாமிய பார்வையில், மதுப்பழக்கம் என்பது மனிதர்களை வழிகெடுக்கத் துடிக்கும் ஷைத்தானால் தூண்டப்படும் காரியம். இறை அருளை விட்டும் தூரமாக்கும் செயல்.
இணை வைப்புக் கொள்கையில் உள்ளவர்கள் மதுவை ஒரு பெரிய பாவமாகக் கருதாமல் பெருமைக்குரிய செயலாகக் கருதுவதைப் பார்க்கிறோம். அது மட்டுமின்றி மதுவைக் கொண்டே சிலைகளுக்குப் படையல் செய்வதையும், திருவிழாக்களில் மது விருந்தை, மதத்தின் பெயராலேயே நடத்துவதையும் காண்கிறோம்.
ஆனால் மற்றவர்கள் முன்னால் மதியையும் மானத்தையும் இழக்க வைக்கும் மதுவை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது; தடுக்கிறது.
மனிதர்களை கெடுத்து, குட்டிச் சுவராக்கும் மதுவை ஒழிப்பதற்குரிய வழிமுறைகளை இந்த மார்க்கம் கற்றுத் தந்ததுடன், அதில் வெற்றியும் கண்டுள்ளது.
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண் டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
போதை தரும் எல்லா பானமும் தடை செய்யப் பட்டதேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
முதலில் மதுவானது கேடு தரும் காரியம் என்றும், பிறகு மது அருந்திய நிலையில் வணக்க வழிபாட்டின் பக்கம் வரக் கூடாது என்றும், இறுதியாக இது ஷைத்தானிய செயல் என்றும் இஸ்லாம் முடிவை அறிவித்தது.
மதுவை விட்டும் மக்கள முழுமை யாக மீட்டெடுக்கும் வகையில், மனிதர்களின் இயல்பைக் கவனித்து மதுவிற்கு எதிராகக் களமிறங்கியது. மது மட்டுமல்லாது போதை தரும் அனைத்துப் பொருட்களையும் தடை செய்தது. இதையும் மீறி அதன் பக்கம் செல்பவர்களுக்குக் கடுமையான தண்டனையை வரையறுத்தது. மது உட்பட எல்லா வகையான போதைப் பழக்கத்தையும் வெறுக்கும் சமுதாயத்தை உருவாக்கியது.
மது தடை செய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே (ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.
(மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் “(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என்னிடம்), “வெளியே போய் பார்(த்து வா)” என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர் “அறிந்து கொள்ளுங்கள். மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.
(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு” என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.
அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) “மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர் கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)” என்று கூறினர்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(இறைவனை) அஞ்சி, இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, இறை நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார் களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை” (5:93) எனும் வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
இன்று எத்தனையோ சட்டங்கள் போட்டும் ஒழிக்க முடியாத மதுப் பழக்கத்தை ஒரேயொரு திருமறை வசனத்தின் மூலம் இஸ்லாம் தடை செய்து, அதில் வெற்றியும் கண்டது என்றால் அதற்குக் காரணம் அது கற்பிக்கும் ஓரிறைக் கொள்கையும், மறுமை நம்பிக்கையும் தான்.
மது இல்லாத சமூகம் மலருவதற்கு ஆட்சியாளர்களின் அதிரடிச் சட்டங்கள் தேவை இல்லை. இணைவைப்பு கொள்கைக்குப் பதிலாக ஒரிறைக் கொள்கையின் நம்பிக்கை எல்லோருடைய உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டால் போதும், மதுப்பழக்கம் மாயமாகிப் போகும்.
செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்க்க வேண்டும் எனும் பேராசையின் பிரதிபலிப்பே வட்டியாகும். இது, பிறருக்கு உதவும் மனித நேயத்தை குழிதோண்டிப் புதைக்கும் காரியம்.
வட்டியினால் வீடு வாசல் இழந்து வீதிக்கு வந்தவர்கள் பலர். மதிப்பு மரியாதையை இழந்து உயிரைத் துறந்தவர்கள் பலர். அடுத்தவர் உழைப்பை உறிஞ்சும் இது போன்ற செயல்களை எந்தவொரு கொள்கை யும் தடுப்பதில்லை; கண்டிப்பதில்லை.
குறிப்பாக, இணைவைப்பு கொள்கைகள் இதன் பக்கம் கடைக்கண் பார்வை கூட செலுத்துவது இல்லை. எப்படியும் பணத்தை பெருக்கிக் கொள்ளலாம்; பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தாராள அனுமதி கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமோ இந்த விவகாரத்திலும் தனித்து விளங்குகிறது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.
அல்லாஹ் வட்டியை அழிக் கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
எந்தவொரு கொள்கையிலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் வட்டிக்கு எதிராகக் களம் கண்டிருக்கிறது. காரணம், வட்டி என்பது தனிமனிதனை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தையே சீரழிக்கும் செயல். நாள்தோறும் விலை மாற்றம், விலைவாசி உயர்வு போன்றவைக்கு இதுவே மூல காரணம்.
எனவே தான் வட்டி வாங்குவதை மட்டுமல்ல! அதைக் கொடுப்பது, பதிவு செய்வது, அதற்கு சாட்சியாக இருப்பது அனைத்தையும் கண்டிக்கிறது. இவையெல்லாம் ஏக இறைவனிடம் இருந்து சாபத்தை, தண்டனையை பெற்றுத் தரும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
எந்த வழியிலும் செல்வத்தை திரட்டிக் கொள்ளலாம்; அதில் ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் போதும் என்கிற இணைவைப்பு கொள்கையின் அவலத்தை யோசித்து பாருங்கள். வட்டியின் மூலம் பலரின் அழிவுக்குக் காரணமாக இருப்பவர்கள் கூட கோவில் உண்டியலில் லட்சக் கணக்கான பணத்தைக் கொண்டு கொட்டுவதற்குக் காரணம் அவர்களது தவறான கடவுள் கொள்கை தான்.
சமூக நலன் காக்கும் ஏகத்துவ கொள்கையைக் கடைபிடித்தால் மட்டுமே வட்டிக் கொடுமைக்கு முழுமையாக முற்றுப் வைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இணைவைப்புக் கொள்கை என்பது மனித வாழ்க்கையின் நோக்கத்தை, இலக்கை மாற்றிவிடும்; இருளில் தள்ளிவிடும்.
மூடநம்பிக்கைகள், பாவங்கள், தீமைகள், அனாச்சாரங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதும் இதுவே. மனிதர்களுக்குத் துன்பத்தை தருகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும், சிக்கல்கலுக்கும் காரணமாக இருப்பதும் இதுவே.
நாமும், மற்றவர்களும் கவலைகள் இல்லாமல் நலமுடன் இருக்கும் வகையில் நமது வாழ்க்கை தூய்மையாக இருக்க வேண்டும் எனில் ஓரிறைக் கொள்கையின்படி வாழ வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கும் நம்பிக்கை மற்றும் நடத்தையை விட்டு நாம் அகன்று விட வேண்டும்.
அப்போது மட்டுமே ஈருலகிலும் வெற்றி பெற இயலும். அந்த அடிப்படையில் இணை வைத்தலால் உருவாகும் பல்வேறு தீமைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
இறைவனை எளிதில் நெருங்க முடியாது; அவனது அருளை அடைய வேண்டும் என்றால் பரிகாரம் நடத்த வேண்டும்; தேவைகளுக்கு ஏற்ப பூஜைகள் செய்ய வேண்டும்; கணக்குப் பார்க்காமல் காணிக்கை தர வேண்டும் என்று ஆன்மீகம் முலம் பெரும் மோசடி நடந்து வருகிறது. இதனால், எதையும் யோசிக்காமல் பக்தர்கள் அளிக்கும் கொடைகள் மூலம் குறிப்பிட்ட சிலருடைய வயிறும் வாழ்க்கையும் நிறைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, “ஆண்டவன் எங்கும் இல்லை; ஆன்மீகம் என்பது கொள்ளை’ என்று சிலர் கோஷம் போட்டு கிளம்பி விட்டார்கள். கொசுவை ஒழிக்க வீட்டையே எரிக்கத் தயார் ஆகிவிட்டார்கள் இந்த நாத்திகர்கள்.
இந்த நிலை மாற வேண்டுமா? கண்டதை எல்லாம் கடவுளாகக் கருதும் மனநிலை மாறினால் போதும். இறைவனுக்குரிய அம்சங்களில் எதுவும் எதிலும் இல்லை; எவரிலும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். அவனை எங்கிருந்தும் எப்போதும் அழைக்கலாம் எனும் நம்பிக்கை மலர வேண்டும். இதோ திருமறை வசனங்களைப் பாருங்கள்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த் திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என் னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடா தீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை யோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
இறைவன் பொதுவானவன்; அவனிடம் பிரார்த்தனை செய்வதற்கும், பாவ மன்னிப்புக் கோருவதற்கும்; அவனது அன்பைப் பெறுவதற்கும் ஒருபோதும் இடைத்தரகர் தேவை இல்லை என்பதே தூய இஸ்லாம். ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் அனைத்துப் பித்தலாட்டங்களும் ஏமாற்றல்களும் அழிந்தொழிய இந்த இஸ்லாமிய நம்பிக்கையே சிறந்த தீர்வு தரும்.
இறைவன் மனிதனைப் போன்றவன்; மனிதனும் இறைவனாக ஆகலாம் என்பது போன்ற படைத் தவனின் புனிதத்தைப் பாழ்படுத்தும் நம்பிக்கையே தீமைகளுக்கு அச்சாணியாக இருக்கிறது.
தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் தீங்கு தரும் அனைத்துப் பாவங்களையும் சிலர் செய்கிறார்கள். பிறகு, குறிப்பிட்ட தொகையை காணிக்கை செலுத்தி விட்டால் அல்லது ஆலயம் கட்டுவதற்குப் பணம் கொடுத்து விட்டால் இறைவன் பார்வையில் நல்லவனாகி விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்தத் தைரியம் காரணமாகவும் வட்டி, வரதட்சனை, லஞ்சம், மோசடி என்று ஏகப்பட்ட தீமைகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் பார்வையில் இறைவனை வணங்குவது என்பது அவனை வழிபடுவது மட்டுமே. அவ்வாறு தான் இணைவைப்புக் கொள்கையின் இறைநம்பிக்கை இருக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாற்றமாக இஸ்லாம் இருக்கிறது.
“எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக!
“முஃமின் – இறை நம்பிக்கை யாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஏக இறைவனுக்குப் பயந்து அவனது கட்டளைப்படி நல்ல முறையில் செயல்படுவது வணக்கம் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது, இதுவே இறை நம்பிக்கையின் உண்மையான அடையாளம் என்றும் பிரகடனம் செய்கிறது.
“கடவுளை மற! மனிதனை நினை!’ என்பது நாத்திகப் பழமொழி. மனிதர்களை மறந்து, அவர்களுக்குச் சேவை செய்வதைத் துறந்து, பக்தியில் மூழ்குவதே இறைவனின் அன்பை அருளை அடையும் வழி என்று ஆன்மீகவாதிகள் வாழ்ந்ததன் எதிர்விளைவாக இந்தப் பழமொழி பிறந்தது. இது இணைவைப்பு கொள்கைகளுக்கு பொருந்துமே தவிர ஒருபோதும் இஸ்லாத்திற்குப் பொருந்தாது.
காரணம், பிற மனிதர்களுக்கு உதவுவதும், தேவைகளை நிறை வேற்றுவதும், ஆதரவு அளிப்பதும் இறைவனை நெருங்குவதற்கான வழி என்றும் மறுமையில் மகத்தான கூலிகளைப் பெற்றுத்தரும் என்றும் இந்த மார்க்கம் போதிக்கிறது.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை.
அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நல்லறங்களும் வணக்கமே எனும் இஸ்லாமியக் கண்ணோட்டம் வரும் போது மட்டுமே மனிதன் தீமைகளை விட்டும் பாவங்களை விட்டும் விலகுவான். மேலும், சக மனிதர்களுக்கு உதவி செய்வது, ஒத்துழைப்பு தருவது போன்ற பொதுநலம் காக்கும் குணம் உருவாகும். சுயநலம் ஒழியும்.
ஒட்டுமொத்தக் குடும்பங்களின் தொகுப்பே சமுதாயம். சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டும் எனில் ஒவ்வொரு குடும்பமும் சிறந்து விளங்குவது கட்டாயம். எனவே, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறையாகத் திருமணம் செய்து கட்டுக்கோப்பான குடும்பத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களுக்குள் உரிமைகளை, கடமைகளை சரிவரப் பேண வேண்டும். முறையான வாழ்க்கை துணையிடம் மட்டுமே பாலுணர்வுத் தேவையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய ஒழுக்க விழுமங்களை எல்லாம் விபச்சாரம் சிதைத்து சேதப்படுத்தி விடுகிறது. நவீன காலத்திலோ இந்த ஒழுக்கக் கேடான காரியம் வெவ்வேறு விதங்களில் தலைவிரித்து ஆடுகிறது. காம வேட்டைகளும் சேட்டைகளும் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அசிங்கம் நிறைந்த அனாச்சாரத்தையும் அடக்கி ஒடுக்கும் ஆற்றலும் அணுகுமுறையும் ஓரிறைக் கொள்கையிடம் மட்டுமே இருக்கிறது.
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
விபச்சாரி, விபச்சாரம் செய்யும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் செய்வதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடு கின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளை யடிப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஏக இறைவனை நம்பியவர்கள் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருக்கக் கூடாது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி விபச்சாரம் செய்யும் போது இறை நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள் என்று எச்சரிக்கிறது இஸ்லாம். இதையும் மீறி இதில் ஈடுபடும் நபர்களுக்கு இம்மையிலும் மறுமை யிலும் கடுமையான தண்டனையை நிர்ணயிக்கிறது.
விபச்சாரம் செய்யும் பெண்ணை யும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ் வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டு இருக்கட்டும்.
(பொய் கூறித் திரிந்தவர், விபச்சாரம் செய்தவர், குர்ஆனைப் புறக்கணித்தவர், பிறர் மானத்தில் விளையாடியவர் ஆகியோருக்குத் தண்டனை வழங்கப்படுவதை மிஃராஜில் நபியவர்கள் பார்த்தார்கள்.)
(மலக்குகளை நோக்கி) “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு (மலக்குகள்) இருவரும் கூறியதாவது:
ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.
அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்ட வர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.
அறிவிப்பவர் ஸமுரா பின் ஜுன்துப்,
இணைவைப்புக் கொள்கைகள் விபச்சாரச் செயலுக்கு எதிராக வாய் திறந்து இருக்கின்றனவா? கிடைக்கும் இடமெல்லாம் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆட்களுக்கு தண்டனைகள் தருவதற்கும், திருத்துவதற்கும் சரியான சட்டங்களை வைத்துள்ளனவா? இதற்கெல்லாம் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும். ஆனால், இப்படி ஓரிறைக் கொள்கை கைகட்டி வேடிக்கைப் பார்க்கவில்லை என்பதை மேற்கண்ட செய்திகள் மூலமே புரிந்து இருக்கும்.
தினந்தோறும் கொலை பற்றிய செய்தி இல்லாமல் நாளிதழ் வெளி வருவதில்லை எனும் அளவிற்குக் கொலைகள் பெருகி விட்டன. அரசியல், பொருளாதாரம், சுய விவகாரம் என்று பல்வேறு காரணங்களால் இந்தக் கொடுமை சர்வசாதாரணமாக நடக்கிறது.
ஆன்மீகம் குறித்து மட்டும் உரக்கப் பேசும் இணைவைப்புக் கொள்கைகள் கொலையைத் தடுப்பதற்குத் தீர்வு சொல்வதில் தோற்றுவிட்டன. ஆனால் இஸ்லாம் இதையும் இரும்புக் கரம் கொண்டு தடுக்கிறது.
காரணம், இஸ்லாம் அமைதியை நாடும் மார்க்கம்; கொலையைக் கொடிய செயல் எனும் கொள்கை கொண்டது இது. உயிர்கள் அனைத்தும் புனிதமானவை என்று போதிக்கிறது. இறை நம்பிக்கை இருப்பவர்கள் கொலையை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று ஆணை இடுகிறது.
(முஃமின்கள்) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள் களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய் பவன் வேதனையைச் சந்திப்பான்.
“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்‘ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்‘ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் “புனிதமிக்க தினம்‘ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இது எந்த நகரம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க நகரம்‘ என்றனர். பிறகு அவர்கள் “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க மாதம்!” என்றனர்.
பிறகு நபி (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்கு கின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமான வையாகும்!” எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மனிதர்கள் விட்டொழிக்க வேண்டிய பெரும்பாவங்களை பட்டியல் போடும் இஸ்லாம், அதில் கொலையைக் குறிப்பிடுகிறது. இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு பழிக்குப் பழி சட்டம் மூலம் கடுமையான தண்டனையை கொடுக்கிறது. இந்த உலகில் கொலையாளிகள் தப்பித்து கொண்டாலும் மறுமையில் இறை வனின் கடுமையான வேதனையில் இருந்து எவ்வகையிலும் தப்பிக்க இயலாது என்று எச்சரிக்கை விடுக்கிறது.
இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், “பொய் கூறுவதும்‘ அல்லது “பொய்ச் சாட்சியம் சொல்வதும்‘ பாவங் களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக் காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப் பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப் படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும்.
இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.
ஓரிறைக் கொள்கை கூறும் குற்றவியல் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் இடங்களில் கொலை என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்; உயிருக்கு உயிர் எனும் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தைப் பரிகாசம் செய்பவர்கள், கொலையைத் தடுக்க, தீர்வு சொல்ல இயலுமா? கொலையைக் குறைப் பதற்குக் கூட அவர்களிடம் தெளிவான வழி இல்லை; அவர்களின் இணைவைப்புக் கொள்கையிலும் முறையான பதில் இல்லை என்பதே உண்மை.