இடது கையில் கடிகாரம் அணியலாமா?
இடது கையில் கடிகாரம் அணியலாமா?
அணியலாம்.
அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார்.
எந்தக் காரியங்கள் வலது கையாலும் இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும்.
எந்தக் காரியம் வலது கையால் செய்வதை விட இடது கையால் செய்வது தான் அதிக வசதியானது என்று உள்ளதோ அந்தக் காரியத்தை இடது கையால் செய்வது நபிவழியைப் புறக்கணித்ததாக ஆகாது. வலது பகுதியைப் புறக்கணித்ததாகவும் ஆகாது.
பொதுவாக வலது கை தான் அனைத்துக் காரியங்களையும் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது. அந்தக் கையில் கடிகாரம் கட்டினால் கடிகாரத்துக்குச் சேதம் ஏற்படும். அல்லது சேதம் ஏற்படுமோ என்ற எண்ணம் காரணமாக இயல்பாக வேலைகளைச் செய்ய முடியாது
இடது கை அதிகம் பயன்படாத காரணத்தால் அதில் கடிகாரம் கட்டுவது தான் இயல்பாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்த வெள்ளி மோதிரத்தை இடது கையில் அணிந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்” என்று கூறி, தமது இடக் கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள். (முஸ்லிம்: 4254) ➚
மேலும் இன்று செல்போனில் அடிக்கடி பேசுகிறோம். வலது கைக்கு பல வேலைகள் உள்ளதால் வலது கையில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தால் வலது கையால் பல வேலைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்தக் காரணத்துக்காக இடது கையில் செல்போனை வைத்துக் கொண்டு பேசினால் வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஆகாது. மாறாக வலது கையால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவே ஆகும்.
பயணத்தில் வலது கையால் பொருட்களைத் தூக்கிச் செல்வதை விட இடது கையால் தூக்கிச் செல்வது அதிக பயனுள்ளது என்பதற்காக இடது கையில் தூக்கிச் சென்றால் வலதைப் புறக்கணிப்பதாக ஆகாது.