இஜ்மா மார்க்க ஆதாரமா?

பயான் குறிப்புகள்: கொள்கை

“முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர் சில அமைப்பினர்.

ஸலஃபிய்யாக்கள் என்றும் மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாக் அமைப்பினர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் – குர்ஆன் ஹதீஸை சார்ந்தவர்களின் கூட்டமைப்பு என்ற தங்கள் இயக்கத்தின் அடிப்படைக்கே முரணாகச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் தங்கள் வழிகேட்டை மறைக்க, ‘ஸஹாபாக்களின் கருத்தை விளக்கத்திற்காக முற்படுத்துகிறோம், அவர்கள் மூன்றாம் ஆதாரமல்ல’ என்று சமாளிப்பு வார்த்தைகளை ஒருபுறம் கூறி, மறுபுறம் அவர்களை ஆதாரமாகக் கருதவில்லையென்றால் அது அறியாமை என்றெல்லாம் தங்களுக்குள்ளே கொள்கை தெளிவின்றி முரண்பட்டு நிற்பதைப் பற்றியெல்லாம் சத்தியம் முழக்கம் தனது முதல் இதழிலேயே முழங்கியது; பதிலும் அளித்திருந்தது.

வஹிக்கு எதிரான அவர்களின் பயணம் இத்துடன் நிற்கவில்லை. இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரமே என்று நீள்கிறது.

எனவே, இஜ்மா என்றால் என்ன? அது மார்க்கத்தின் ஆதாரமா? இதில் இஜ்மாவுஸ் ஸஹாபா, ஃபஹ்முஸ் ஸஹாபா என்றெல்லாம் கூறுகிறார்களே அது என்ன? என்பது குறித்து மார்க்கத்தின் தெளிவை இக்கட்டுரை தங்களுக்கு விளக்குகிறது.

இஜ்மா என்றால் என்ன?

இஜ்மா என்ற அரபுச் சொல்லுக்கு, “ஒன்றுபடுதல், ஒருமித்த முடிவெடுத்தல்” என்று பொருளாகும்.

நல்ல விஷயத்திலோ, தீமையிலோ எதில் ஒன்றுபட்டாலும் அதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படும்.

இஜ்மா என்ற வேர் சொல்லிலிருந்து உருவான ‘அஜ்மஅ’ என்ற வினைச்சொல் அல்குர்ஆனில் இந்த அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவரை ஆழமான கிணற்றில் போடுவதென அவர்கள் ஒருமித்து முடிவு செய்த நிலையில் அவர்கள் அவரை அழைத்துச் சென்றபோது (தமது திட்டத்தை நிறைவேற்றினர்.) “அவர்களின் இச்செயலை (வருங்காலத்தில்) அவர்களுக்கு நீர் அறிவிப்பீர். அப்போது அவர்கள் (உம்மை) அறிந்திருக்க மாட்டார்கள்” என்று யூஸுஃபுக்கு நாம் அறிவித்தோம்.

(அல்குர்ஆன்: 12:15)

(நபியே!) இது மறைவான செய்திகளில் உள்ளதாகும். அதை நாம் உமக்கு அறிவிக்கிறோம். அவர்கள் சதி செய்தவாறு தமது காரியத்தில் ஒன்றுபட்டபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

(அல்குர்ஆன்: 12:102)

நூஹுடைய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! “என் சமுதாயத்தினரே! நான் (நபியாக) இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு நான் அறிவுரை கூறுவதும் உங்களுக்குப் பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே, உங்கள் கடவுள்களுடன் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள்! அதன்பின் உங்கள் காரியம் உங்களிடம் மறைமுகமாகவும் இருக்க வேண்டாம். அதன் பின்னர் எனக்கு முடிவு கட்டுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் தனது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 10:71)

ஒருமித்த முடிவெடுத்தல் என்ற அர்த்தத்தில் இஜ்மா என்ற சொல் மொழிவழக்கில் பயன்படுத்தப்பட்டாலும் ஃபிக்ஹ் துறையில் அதற்குச் சற்று விரிவான பொருளை வழங்குகிறார்கள்.

நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு இந்தச் சமுதாயத்தின் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் மார்க்கச் சட்ட விஷயத்தில் ஒன்றுபடுவதே இஜ்மா என்று வரைவிலக்கணம் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு ஒன்றுபட்டு சொல்லப்பட்ட கருத்தும் மார்க்க ஆதாரமே என்கிறார்கள்.

அதாவது, நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு நபித்தோழர்களோ அல்லது தாபியீன்களோ தபஉத் தாபியீன்களோ அல்லது அதற்கு பிறகு ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த அறிஞர்களோ ஏகோபித்து ஒரு முடிவைச் சொன்னால் அதுவும் மார்க்க ஆதாரமே என்பதே அவர்களின் கொள்கையாக உள்ளது.

இதை மத்ஹபுவாதிகளும், தர்கா, தரீக்காவாதிகளும் தங்களின் கொள்கையாக வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், தவ்ஹீத் பேசிய நாவுகளும் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறிய நபர்களும் இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரமே என்கிறார்கள்.

ஒரு படி மேலே சென்று, ஹதீஸை விட வலுவான ஆதாரம் இஜ்மா என்கிறார் ஒரு ஸலஃபி(!)

இஜ்மா எதற்காக?

வஹி மட்டுமே மார்க்கத்தின் மூல ஆதாரம். அதைத் தாண்டி மற்றொரு செய்தியோ எந்த மனிதரின் கருத்துக்களோ மார்க்க ஆதாரமாகாது என்று இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை எடுத்துரைத்து இஜ்மாவை மறுத்துரைக்கும் போது, இஜ்மாவை ஏன் ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அவரவர்கள் தாங்களே மார்க்கத்தை விளங்கினால் கருத்து வேறுபாடுகளும் சிந்தனை முரண்பாடுகளும் ஏற்படும். அதனால், அனைவரும் முன்னோர்களது கருத்தின் பக்கம் சாய்ந்துவிட்டால் முரண்பாடு ஏற்படாது என்பதே இவர்களின் வாதம்.

இது எவ்வாளவு அபத்தமான வாதம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த வாதத்தின் மூலம் இறைவனின் வார்த்தையை முரண்பாடுகளுடனே புரிய முடியும். முன்னோர்களின் கருத்துகளை இலகுவாகப் புரிய முடியும் என்றும், இறை வார்த்தையை முன்னோர்களின் துணை கொண்டு மட்டுமே புரிய இயலும் என்றும் கூறி, இறை வார்த்தையை விட முன்னோர் கருத்தை உயர்த்திப் பிடித்துவிடுகிறார்கள்.

மேலும், அவரவர்கள் சிந்திப்பதால் முரண்பாடுகளும் ஆளுக்கொரு சிந்தனைகளும் வரும் என்பது இஜ்மாவை ஆதாரமாக்குவதற்குக் காரணம் எனில் ஒவ்வொரு முன்னோரும் அவரவர்கள் சிந்தித்து அவர்களுக்கு மத்தியில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளார்களே அது ஏன்?

ஒரு இஜ்மாவை மறுத்து அடுத்த காலத்தில் மற்றொரு இஜ்மா ஏன் ஏற்பட்டது?

இப்படிப் பல கேள்விகளும் அபத்தங்களும் இவர்கள் சொல்லும் காரணத்தின் மூலம் நமக்கு ஏற்படுகிறது.

சரி, மார்க்கத்தைச் சிந்திக்க கூடாதா? கருத்து வேறுபாடுகள் குறித்து இறைவன் என்ன சொல்கிறான்? அதை எப்படிக் களையச் சொல்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

முன்னோர் விளங்கியது போல தான் விளங்க வேண்டுமா?

மார்க்கத்தை, அதன் அடிப்படையை, சட்டங்களை என்று அனைத்தையும் நமக்கு வஹியின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

நீங்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறே உங்களுக்கு விளக்குகிறான்.

(அல்குர்ஆன்: 2:242)

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்கு எவற்றைத் தடுத்துள்ளான் என்பதை எடுத்துரைக்கிறேன்” என்று (நபியே!) கூறுவீராக! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்! (அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்!) வறுமையின் காரணமாக உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாமே உங்களுக்கும், அவர்களுக்கும் உணவளிக்கிறோம். மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.

(அல்குர்ஆன்: 6:151)

இதுபோன்று திருக்குர்ஆன் முழுவதும் இன்னும் ஏராளமான வசனங்களில் ‘நீங்கள் விளங்குவதற்காக’ என்று மக்களை முன்னோக்கி இறைவன் பேசுகிறான்.

திருக்குர்ஆன் ஸஹாபாக்களுக்கும் முன்னோர்களுக்கும் மட்டும் அருளப்பட்டதல்ல. அகிலம் இருக்கும் வரையுள்ள அனைத்து மக்களுக்குமானது.

அப்படியிருக்கும் போது ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுக்குமான வேதத்தை நபித்தோழர்களும் முன்னோர்களும் விளங்குவதற்காக மட்டுமானது என்று சுருக்குவது எப்படிச் சரியாகும்?

எந்தவொரு குர்ஆன் வசனமாக இருந்தாலும் ஹதீஸாக இருந்தாலும் அதில் இருப்பதை வைத்து விளங்க வேண்டும். அதை விளங்க மூன்றாவதிற்குச் சென்றால் அது பல வழிகளை உண்டாக்கிவிடும்.

எந்தவொரு குர்ஆன் வசனத்தையும் ஹதீஸையும் குர்ஆன் நமக்குக் கற்றுத் தரும் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றம் இல்லாமல் தான் விளங்க வேண்டும்.

மேலும், ஒட்டுமொத்தக் குர்ஆனும் ஒரு அடிப்படையை கற்றுத்தரும். அதற்கு மாற்றமாக எந்தவொரு வசனத்தையும் விளங்கக்கூடாது.

அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் உம்மைக் குழப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால், அவர்களுடைய சில பாவச் செயல்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்கவே அல்லாஹ் விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் பாவிகளாகவே உள்ளனர்.

(அல்குர்ஆன்:)

ஆதாரங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

அல்லாஹ் அருளிய வஹிச் செய்தியை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். யாரின் விருப்பத்தையும் மார்க்கத்தில் பின்பற்றக் கூடாது. அவ்வாறு விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு குழப்பத்தையே மார்க்கத்தில் விளைவிக்கும். வஹியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.

இந்த அடிப்படையைப் புறந்தள்ளிவிட்டு, மார்க்கம் கற்றுத் தரும் வஹி மட்டுமே இஸ்லாம் என்ற அடிப்படைக்கு மாற்றமாக, முன்னோர் மேல் உள்ள பக்தியின் காரணத்தால் ஏதேனும் ஒரு ஆதாரத்தில் இதற்கு மொழி ரீதியாக முகாந்திரம் இருக்கிறது என்றோ அல்லது இப்படியும் விளங்கலாம், அப்படியும் விளங்கலாம் என்றோ தவறான விளக்கத்தை அளித்து மார்க்கத்தின் அடிப்படையுடன் மோதவிடுகின்றனர்.

இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்:)

எனவே, ஒரு குர்ஆன் வசனத்தையோ ஹதீஸையோ விளங்குவதாக இருந்தால் ஏனைய குர்ஆன் வசனங்களையும் ஹதீஸையும் வைத்து தான் விளங்க வேண்டும்.

எனவே, முரண்பாட்டைக் களைய இறைவன் கூறும் ஒரு வழியை விட்டு விட்டு, நாங்கள் ஒரு புது வழியை உருவாக்குகிறோம் என்று சென்ற காரணத்தால் தான் இத்தகைய தடுமாற்றத்திலும் வழிகேட்டிலும் இஜ்மாவை ஆதாரமாக்கும் நவீன ஸலஃபிகள் உட்பட பலரும் வீழ்ந்து கிடக்கின்றனர்.

இஜ்மாவிற்கு ஆதாரமா?

தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருக்கு மாறுசெய்து இறை நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுபவரை அவர் செல்லும் வழியிலேயே விட்டு விடுவோம். பின்னர் நரகத்தில் அவரை நுழையச் செய்வோம். சேருமிடத்தில் அது கெட்டது.

(அல்குர்ஆன்:)

இந்த வசனத்தில் முஃமின்களின் வழியல்லாத வழியைப் பின்பற்றினால் நரகம் என்று கூறப்படுவதை ஆதாரமாகக் காட்டி, முஃமின்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செல்லும் வழிதான் இஜ்மாவாகும். எனவே அதைப் பின்பற்றுவது கட்டாயம் என்று வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதப்படி நியாயமாக இவர்கள் எப்படி முடிவெடுக்க வேண்டும்? மூஃமின்கள் என்றால் அல்லாஹ்வையும் அவன் நம்பிக்கை கொள்ள சொன்ன அனைத்து விஷயங்களையும் உளப்பூர்வமாக நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குறிக்கும். உளப்பூர்வமாக நம்பிக்கை கொண்டதை மனிதர்கள் அறிய முடியாவிட்டாலும் வெளிப்படையை வைத்து மூஃமின்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

அப்படியான ஒவ்வொரு மூஃமினையும் இன்னபிற மூஃமின்கள் பின்பற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு முடிவெடுத்து மூஃமின்கள் ஒருவரையொருவர் பின்பற்றுவதுதான் இஜ்மா என்று கூறுவார்களா?

இறைநம்பிக்கையாளர்களின் வழி எது என்பதைப் பற்றி இதைக் குறிப்பிட்ட இறைவனின் விளக்கத்தை எடுப்பதை விட்டுவிட்டு தாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டு அதற்குத் தக்கவாறு தாங்களாகவே சுய விளக்கம் அளிப்பதால் தான் இத்தனை குழப்பங்கள் நிலவுகிறது.

மூஃமின்களின் வழி என்பது மூஃமின்களில் சிலர் சேர்ந்து தாமாக உருவாக்கிக் கொள்ளும் வழியல்ல.

மூஃமின்களின் வழி என்பதன் பொருள் மூஃமின்கள் செல்ல வேண்டிய வழி என்பது தான் குர்ஆனின் அடிப்படைக்கு ஏற்றக் கருத்தாகும்.

முஃமின்கள் வழி எது?

அவர்களுக்கிடையே தூதர் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அவர்கள் அழைக்கப்பட்டால் “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்று கூறுவதே இறைம்பிக்கையாளர்களின் பதிலாக இருக்கும். அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

(அல்குர்ஆன்: 24:53)

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவுசெய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.

(அல்குர்ஆன்: 33:36)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்களில் அதிகாரமுடையோருக்கும் (கட்டுப்படுங்கள்!) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோராக இருந்தால் ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளும் போது அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன்: 4:59)

மேற்படி வசனங்களில் மூஃமின்களின் வழி எது என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மூஃமின்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடப்பார்கள். வஹியை மட்டுமே பின்பற்றுவார்கள். குர்ஆன் ஹதீஸைத் தாண்டி சுயமாக முடிவு செய்ய மாட்டார்கள் என்று இறைவன் பேசுகிறான்.

குர்ஆன் ஹதீஸின்படி நடப்பது தான் மூஃமின்களின் வழியே தவிர மூஃமின்கள் தாங்களாகச் சேர்ந்து ஒரு வழியை உருவாக்கிச் செல்வது அல்ல.

எனவே, குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டுமே தவிர எந்த மூஃமினின் கருத்தும் மார்க்கமாகாது.

காரணத்துக்குப் பொருந்தாத களம்

சட்டம் எடுப்பதில் முரண்பாடு ஏற்படாமல் இருக்க இஜ்மாவைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறியவர்கள், இஜ்மாவிற்கு ஆதாரம் காட்டும் விஷயத்தில் கூட ஒன்றுபடவில்லை. முரண்பட்டே நிற்கின்றனர் என்பது தான் கள எதார்த்தம்.

ஏனெனில், முரண்பாட்டைக் களைய முன்னோர்களை பின்பற்றச் சென்றவர்கள் தங்கள் கொள்கைக்குப் பிரதான ஆதாரமாக எடுத்து வைக்கும் இந்த வசனத்திலேயே அவர்கள் ஒன்றுபடவில்லை என்பது தான் வேடிக்கையான விஷயம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள “மூஃமின்களின் வழி” என்பதில் உள்ள மூஃமின்கள் என்ற வார்த்தை ஸஹாபாக்களை மட்டுமே குறிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.

இல்லை! தாபியீன்களையும் குறிக்கும் என்று சிலர்.

இல்லை! தபஉத் தாபியீன்களையும் குறிக்கும் என்று சிலர்.

இல்லை! அவர்கள் மட்டுமல்ல, ஒவ்வாரு காலத்திலும் வாழ்ந்த அத்தனை நல்லறிஞர்களையும் குறிக்கும் என்று சிலர்.

ஸஹாபாக்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் தங்கள் பார்வையில் தாங்கள் தான் சரியான வழியில் செல்கிறார்கள் என்றால் மற்றவர்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்ல வேண்டும்.

மற்றவர்கள் தாங்கள் இருப்பது தான் நேர்வழி என்று கருதுகிறார்கள் என்றால் தங்களுக்குக் கிடைத்த நேர்வழி, ‘ஸஹாபாக்களின் கருத்து மட்டுமே இஜ்மா’ என்று கூறுவோருக்குக் கிடைக்கவில்லை, அவ்வாறு கூறுபவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு முரண்பாட்டின் மொத்த உருவமாக இருந்து கொண்டு இவர்கள் முரண்பாட்டைக் களையப் போகிறோம் என்று கூறுவதுதான் வேடிக்கையின் உச்சம்.