இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா?

கேள்வி-பதில்: தொழுகை

கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா?

பதில்:

கூடும்.

ஒரு நன்மையை இழந்து விடுகின்றோம்

கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. தனியாகத் தொழுதாலும் பாங்கு, இகாமத் சொல்லியே தொழ வேண்டும். ஆனால் அதே சமயம் அவை தொழுகையின் ஒரு அம்சம் அல்ல! மறந்த நிலையில் இகாமத் சொல்லாமல் தொழுது விட்டால் தொழுகை கூடும்.

தொழுகையின் திறவுகோல் உளூ எனும் அங்கத் தூய்மையாகும். (தொழுகையில் இல்லாத ஏனைய செயல்களை) தடையாக ஆக்குவது (அல்லாஹு அக்பர் எனக் கூறும்) முதல் தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) அனுமதிப்பது, (தொழுகையை நிறைவு செய்ய கொடுக்கும்) ஸலாம் ஆகும்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)(திர்மிதீ: 3) ,(இப்னு மாஜா: 271) ,(அஹ்மத்: 957)

இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து ஸலாம் கொடுப்பது வரையில் தான் என்பதை அறிய முடிகின்றது. எனவே இகாமத் சொல்லாமல் தொழுது விட்டாலும் தொழுகை நிறைவேறி விடும். இகாமத் சொல்லாவிட்டால் கடமையான தொழுகைக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய ஒரு சுன்னத்தின் நன்மையை இழந்து விடுகின்றோம் என்பது தானே தவிர தொழுகை கூடாது என்று கூற முடியாது.