ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஒளியில் அமல்களின் சிறப்புகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் 2000 ஆண்டுவாக்கில் அல்முபீன் என்ற மாத இதழில் தொடர் வெளியானது. இந்தத் தொடர் அப்போது எழுதப்பட்டதற்கு அடிப்படையான சில காரணங்கள் இருந்தன.

1. தப்லீக் ஜமாஅத்திலிருந்து அமல்களின் சிறப்புகள் என்ற நூல் பல பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் பலவீனமான ஹதீஸ்களின் கிடங்காக அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கின்ற, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு உலை வைக்கின்ற பெரியார்களின் கதைகள், கற்பனைகள் அந்த நூல்களில் நிரம்பி வழிந்தன.
அதனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அமல்களின் சிறப்புகளைக் கூறுகின்ற அமல்களின் சிறப்புகள் என்ற நூலாக்கம் காலத்தின் கட்டாயம் என்று உணரப்பட்டது.

2. தவ்ஹீது சகோதரர்கள் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீது புரட்சியின் காரணமாகத் தவ்ஹீது கொள்கையில் பெருவாரியாக ஈர்க்கப்பட்டனர். நடிக, நட்சத்திர சங்கங்களின் அங்கங்களாக இருந்த அவர்கள் தவ்ஹீத் கொள்கையைத் தாங்கிப் பிடிக்கின்ற, தூக்கி நிறுத்துகின்ற கொள்கைத் தங்கங்களாக மாறினர் என்றால் அது மிகப் பெரும் ஆச்சரியமாகும். உண்மையில் அது அல்லாஹ்வின் அற்புதமாகும். ஆனால் அவர்கள் உபரியான அமல்கள் விஷயத்தில் சற்றுப் பின்தங்கியிருந்தனர். அவர்களை அமல்களில் ஊக்கப்படுத்த இது ஓர் உந்து சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கிலும் இந்த தலைப்பில் தொடர் எழுதப்பட்டது.
இது போன்ற காரணங்களால் இந்தத் தொடர் எழுதப்பட்டது. அமல்கள் நாட்டம் கொண்ட மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்தது. இந்தக் கட்டத்தில் அல்முபீன் இதழ் 2002ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து விட்டது.

அதன் பின் ஏகத்துவம் மாத இதழ் வெளிவந்தது. அதில் இந்தத் தொடர் இடம்பெறவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் திருக்குர்ஆன் மாநாட்டிற்குப் பிறகு நமது ஜமாஅத், ‘அடுத்த இலக்கு அமல்கள்’ என்ற திசையை நோக்கி முழுமூச்சாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. அமல்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவாக இந்தத் தொடர் ஏகத்துவத்தில் இடம் பெறுவது சாலப்பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் “ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒளியில் அமல்களின் சிறப்புகள்” என்ற தொடர் ஏகத்துவத்தில் இம்மாதம் முதல் வெளிவரவுள்ளது.
இந்தத் தலைப்பைக் கண்டவுடன் தப்லீக் இயக்கத்தின் சார்பில் கதைகளையும் கற்பனைகளையும் தாங்கி ‘அமல்களின் சிறப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ள அந்த நூலைப் பற்றிய விமர்சனம் என்ற எண்ணம் தான் நமக்கு உருவாகும்.

அமல்களின் சிறப்புகள் என்ற அந்த நூலில் உள்ள கற்பனைகளை – கதைகளை, ஏகத்துவக் கொள்கையை இடித்துத் தரைமட்டமாக்கும் சங்கதிகளை அக்கு வேறாக ஆணிவேறாக அலசி விமர்சனம் செய்த நூல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.
இங்கே நாம் அமல்களின் சிறப்புகள் என்று தலைப்பிட்டதன் நோக்கம், உண்மையில் நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த அமல்களுக்கு என்னென்ன சிறப்பைக் கூறி ஆர்வமூட்டியுள்ளார்களோ அந்தச் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, ஆர்வமூட்டி, அந்த அமல்களைச் செய்ய வைப்பதும் அமல்களை விடுவதால் ஏற்படும் அபாயங்களையும் ஆபத்துக்களையும் எச்சரிக்கை செய்வதும் தான்.

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது கருத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தலைமுறை இன்று வளர்ந்து வருகிறது. தமிழத்தில் எல்லாப் பகுதிகளிலும் இந்த ஏகத்துவம் நூல் வடிவத்தில், ஆடியோ வீடியோ வடிவத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நாம் நமது கொள்கையில் உறுதியாகவும் இருக்கின்றோம். ஆனால் அமல்கள் விஷயத்தில் சற்று பலவீனமாக இருக்கிறோம்.

கடமையான தொழுகைகளைத் தவிர்த்து சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், இரவுத் தொழுகை போன்ற அமல்கள் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இப்படிச் சொல்லி விடமுடியாது என்றாலும் இந்தக் குறைபாடு இருப்பதை மறுப்பதற்கில்லை.
சிலர் ஜமாஅத் தொழுகைகளைப் பேணுவதில்லை. சிலர் வேலை காரணமாக சுபுஹ் தொழாமல் உறங்கி விட்டு, எப்போது விழிக்கின்றோமோ அப்போது இரண்டு ரக்அத் சுபுஹ் தொழுதால் போதும் என்று நினைக்கின்றனர். இது மிகப் பெரிய தவறு.

கூட்டம் நடத்துகிறோம்; கொள்கை விளக்கம் கூறுகிறோம்; ஆனால் அமல்களில் நாட்டம் காட்டாமல் இருக்கிறோம். நபிவழியில் நம் தொழுகை என்பதே நம் கொள்கை என்றுள்ள நம்மிடத்தில் நெஞ்சின் மீது கை கட்டுதல், விரலசைத்தல் இவ்விரண்டையும் தாண்டி அடுத்தக் கட்ட அமலுக்கு நாம் சென்றிருக்கிறோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஊது பத்தி, சாம்பிராணி சகிதமாக, பக்திப் பரவசத்துடன் கத்தம் பாத்திஹா, மவ்லிது ஓதிக் கொண்டிருந்த நம்முடைய குடும்பத்தில் அன்பாகவோ அல்லது நம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியோ இந்த ஷிர்க், பித்அத்துகளை நிறுத்தியிருக்கிறோம். ஏன்?
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன்: 66:6)

என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதால் தானே!
நம்மை நரகத்தை விட்டுக் காப்பாற்றியது போல் நம் குடும்பத்தையும் நரகத்தை விட்டுக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கம் தானே! இதே நோக்கத்தின் அடிப்படையில் நாமும் தொழுது நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் தொழச் செய்ய வேண்டாமா?
(நபியே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக!

(அல்குர்ஆன்: 20:132)
என்ற வசனத்தின் அடிப்படையில் நம்முடைய மனைவி மக்களை எந்த அளவுக்குத் தொழச் சொல்லி ஏவியிருக்கிறோம்? அதில் என்ன மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் தொழுகையில் அலட்சியம் காட்டினால் நம்முடைய மனைவி மக்கள் அனைவரும் அலட்சியம் காட்டுவர். அதற்கு நாமே காரணமாக அமைந்து விடக் கூடாது.

நம்முடைய மகன் மவ்லிது நேர்ச்சையை வாங்கிச் சாப்பிட்டு விட்டால் அந்தத் தீமையைக் கண்டவுடன் சீறிப்பாய்ந்து கண்டிக்கிறோம். ஆனால் அதே மகன் தொழுகையில் அலட்சியமாக இருக்கும் போது அதைக் கண்டிப்பது கிடையாது, கண்டு கொள்வதும் கிடையாது.
எனவே மெற்கண்ட வசனத்தின் அடிப்படையில் நம்முடைய குடும்பத்தாரை, குழந்தைகளைத் தொழுகையைக் கொண்டு ஏவுவதற்கு நாம் தவறிவிடக்கூடாது.
எத்தனையோ அடி உதைகள், அவமானங்கள், ஆபாச வார்த்தைகள் அத்தனையும் ஏற்றுக் கொண்டு தொழுகையில் நெஞ்சின் மீது கை கட்டுவதில், ஆட்காட்டி விரலை அசைப்பதில் விடாது பிடிப்பு கொண்டிருக்கிறோமே! அந்தப் பிடிப்பு மேற்கண்ட வசனத்தைச் செயல் படுத்துவதில் நமக்கு ஏற்படுவதில்லை. ஏன் இந்த பாரபட்சம்? குர்ஆன், ஹதீஸின் கட்டளைகளில் நாம் வேறுபாடு காட்டாது சமச்சீராகப் பின்பற்றும் நிலையைப் பேண வேண்டும். இது போன்ற அமல்களில் நாமும் ஆர்வம் கொண்டு நம்முடைய குடும்பத்தையும் ஆர்வமூட்ட வேண்டும்.
நம்பிக்கையும் நற்செயல்களும்
அல்லாஹ் குர்ஆனில் ஈமானைப் பற்றிக் குறிப்பிட்ட உடனேயே அதைத் தொடர்ந்து நற்செயல்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றான்.
‘‘நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன’’ என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
(அல்குர்ஆன்: 2:25)

என்ற வசனத்தை மாதிரிக்காகக் காட்டலாம். இது போன்று குர்ஆனில் ஈமானைத் தொடர்ந்து நற்செயல்கள் இடம் பிடிக்கும் ஏராளமான வசனங்கள் இடம் பெறுகின்றன. ‘ஆமனூ வ அமிலுஸ் ஸாலிஹாத்’ (இறைநம்பிக்கை கொண்டு அமல்கள் செய்து) என்று ஈமானைக் குறிப்பிடுகின்ற இடங்களில் எல்லாம் அமல்களையும் சேர்த்தே கூறுகின்றான். இதிலிருந்து விதிவிலக்கு பெறுவோர் யாரையும் நாம் பார்க்க முடியாது.
அமல் செய்யாமல் சுவனம் சென்றவர்கள் என்று ஒரு பட்டியலைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் ஈமான் கொண்ட மாத்திரத்தில் கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இதற்கு உதாரணமாக, மூஸா நபி (ஸல்) அவர்களை எதிர்த்து நின்று பின்னர் ஈமான் கொண்ட மந்திரவாதிகளைக் குறிப்பிடலாம்.
“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?’’ என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!’’ என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்’’ என்று நாம் கூறினோம்.
“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்’’ (என்றும் கூறினோம்.) உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’’ என்றனர்.
“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’’ என்று அவன் கூறினான்.
(அல்குர்ஆன்: 20:65-71)

இது குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டும் உதாரணமாகும். ஹதீஸ்களிலிருந்து ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:
நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ (ரலி)
(புகாரி: 2808)

இப்படி ஈமான் கொண்ட மாத்திரத்தில் கொல்லப்படுவோர் தான் எந்த வித அமல்களும் செய்யாமல் சுவனம் சென்று விடுகின்றார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னது போன்று, குறைவான அமல் நிறைவான கூலி பெற்றுவிடுகின்றார்கள். மற்றவர்கள் உயிர் உள்ளவரை அமல் செய்கின்றார்கள். இறைத்தூதர்களுக்கு சுவனம் உறுதி என்றாலும் அவர்கள் அமல் செய்யாமல் இருந்ததில்லை.
நபி (ஸல்) அவர்கள் முன்பின் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் மரணமடைகின்ற வரை அமல்களை விடவில்லை. தனக்குத் தான் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதே! தனக்குத் தான் சுவனம் நிச்சயமாகி விட்டதே! என்று எண்ணி அமல்கள் செய்வதை விட்டும் அவர்கள் அலட்சியமாக இருக்கவில்லை.
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
(புகாரி: 1130, 4836)

நபி (ஸல்) அவர்கள் மட்டும் இவ்வாறு அமல் செய்யவில்லை. இதற்கு முன் வந்த நபிமார்களும் அமல்கள் செய்வதில் பின்தங்காமல் இருந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று, ஒருநாள் விட்டு விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
(புகாரி: 3420)

நபி தாவூத் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சியாளர், அதிபதி. அவர்களும் அமல்கள் செய்வதில் பின்தங்கவில்லை. ஒட்டுமொத்த நபிமார்களும் அப்படித் தான் இருந்துள்ளார்கள்.
இதைப் பின்வரும் வசனம் தெளிவாக விளக்குகின்றது.
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
(அல்குர்ஆன்: 21:90)

நாமெல்லாம் தவ்ஹீதுவாதிகள், நமக்கு சுவனம் நிச்சயம் என்ற நம்பிக்கை காரணமாக சிலர் அமல்கள் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கின்றனர்.
இதற்கு ஒரு சில ஹதீஸ்களும் அவர்களுக்கு ஆதாரமாகத் தெரிகின்றன.
‘என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது, என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?’ எனக் கேட்டேன். ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்’ என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(புகாரி: 1237, 5827)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா!” (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!” என்று கூறினார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்” என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!” என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.

நான், “உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, “திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்” என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள் தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்’’ என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 52)

மேற்கண்ட புகாரி ஹதீஸ்களும் முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் இந்த ஹதீஸும் வெறுமனே லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லி விட்டால் சுவனம் சென்று விடலாம் என்று தான் சொல்வது போல் இருக்கின்றது. நபி (ஸல்)அவர்களின் ‘மக்கள் அலட்சியமாக இருந்து விடுவார்கள்’ என்ற கருத்தும் அதைத் தான் தெரிவிக்கின்றது.
ஆனால் புகாரியில் வரும் ஒரு ஹதீஸில் ‘உளப்பூர்வமாக’ என்ற வார்த்தையும், முஸ்லிம் ஹதீஸில் ‘உள்ளத்தால் உறுதிக் கொண்ட நிலையில்’ என்ற வார்த்தையும் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று வெறுமனே சொன்னால் போதாது என்பதை உணர்த்துகின்றது.
ஒரே வாகனத்தின் மீது முஆது(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். ‘இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என்று முஆத் (ரலி) கூறினார். ‘முஆதே!’ என்று என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். ‘இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என மீண்டும் முஆத் (ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது.

பிறகு ‘தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!’ என்று முஆத் கேட்டதற்கு ‘அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(புகாரி: 128)

‘உனக்குப் பின்னால் ஒரு மாடு முட்ட வருகின்றது’ என்று யாராவது நம்மிடம் கூறினால், உடனேயே அந்த வார்த்தை உள்ளத்தில் நம்பிக்கையையும் ஓர் உந்துதலையும் ஏற்படுத்துகிறது. அதனால் ஓடத் துவங்கி விடுகிறோம். மாடு வருகின்றதா என்று நின்று நிதானித்து ஓடுவது கிடையாது. இது போல் மறுமை என்ற நம்பிக்கை நம் உள்ளங்களில் உடனடியாக மாறுதல்களை ஏற்படுத்தவேண்டும். அவை வணக்கங்களாகப் பரிணமிக்க வேண்டும்.

ஆம்! உளப்பூர்வமாக ஒருவர் நம்பிவிட்டால் அது செயல்பாட்டளவில் வெளி வந்து விடும். உள்ளத்தால் நம்பியவர்கள் அமல்களில் அலட்சியம் காட்டமாட்டார்கள். இந்தக் கருத்தைத் தான் இந்த ஹதீஸ்களில் கூர்ந்து கவனிப்போர் விளங்க முடியும். இந்த நுணுக்கத்தை எல்லா மக்களும் விளங்குவதில்லை. அதனால் அமல்களில் அலட்சியம் ஏற்பட்டு விடுகின்றது.
உமர் (ரலி) இந்த அடிப்படையில் தான் மக்கள் அமல்கள் செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிடுகின்றார்கள். மொத்தத்தில் ஈமானுக்குப் பிறகு, அதாவது இறைநம்பிக்கை கொண்டவுடன் நல்லமல்கள் ஒவ்வொரு முஃமினுக்கும் கடமையாகும் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

‘அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார்’ என்று முஆத்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) ‘இந்த நல்ல செய்தியை நான் மக்களுக்குச் சொல்லலாமா?’ எனக் கேட்டார்கள். ‘வேண்டாம் அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள் என நான் அஞ்சுகிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(புகாரி: 129)

இதிலும் நபி (ஸல்) அவர்கள் இதை மக்களிடம் சொல்லவேண்டாம் என்று முஆத் பின் ஜபல் (ரலி)யிடம் தெரிவிப்பதை நாம் பார்க்க முடிகின்றது.
நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி(ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’ இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். உடனே மக்கள், ‘அல்லாஹவின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதிலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகிறவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கிவைப்போம்’ எனும் (அல்குர்ஆன்: 92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(புகாரி: 4945)

இந்த ஹதீஸிலும் விதியைக் காரணம் காட்டி நபித் தோழர்கள் அமல் செய்யாமல் இருப்பதற்கு அனுமதி கேட்கின்ற போது அமல்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதைத் தான் நாம் பார்க்க முடிகின்றது.

மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான்.

அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் கனமிழந்து விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.
அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2563

இது போன்ற ஹதீஸ்கள் கலிமா மட்டும் சொல்லி விட்டு சுவனம் சென்று விடலாம் என்பது போல் அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஹதீஸ்களை நமக்குப் போதிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அன்னாரிடமிருந்து இந்த ஹதீஸ்களை நமக்கு அறிவிக்கும் நபித்தோழர்களும் கலிமா சொல்லி விட்டு, எந்த அமலையும் செய்யாமல் இருந்ததில்லை.
அதிலும் குறிப்பாக நபித் தோழர்களில் பலர் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களாக இருந்தனர்.
சுவனத்தைக் கொண்டு நற்செய்திச் சொல்லப்பட்டவர்கள் என்று பத்து நபித்தோழர்கள் உள்ளனர்.
அபூபக்ர் சுவனத்தில், உமர் சுவனத்தில், அலீ சுவனத்தில், உஸ்மான் சுவனத்தில், தல்ஹா சுவனத்தில், ஜுபைர் சுவனத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சுவனத்தில், சஃது பின் அபீ வக்காஸ் சுவனத்தில், சயீத் பின் ஜைத் சுவனத்தில், அபூஉபைதத்துல் ஜர்ராஹ் சுவனத்தில் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்
(அஹ்மத்: 1085)

அடுத்து பத்ர் போரில் கலந்துக் கொண்ட நபித் தோழர்களுக்கு சுவனம் என்று இந்த வட்டம் விரிகின்றது.
உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்!’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்’ என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்’ என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘இவர் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்’ என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’… அல்லது ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்’… என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள்.
(புகாரி: 3983)

பைஅத்துர் ரிள்வானில் கலந்து கொண்டவர்களுக்கும் சுவனம் என்று இந்த வட்டம் இன்னும் விரிந்து செல்கின்றது.
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.
(அல்குர்ஆன்: 48:18)
சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட இந்த அத்தனை நிகழ்ச்சியிலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அமல் செய்யாமல் இருந்தார்களா? என்றால் இல்லை.

அபூபக்ர் (ரலி)யும் அமல்களும்

‘ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(புகாரி: 1897)

‘இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், ‘இன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களில் நீங்களும் ஒருவர் தாம் என்று நம்புகிறேன்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(புகாரி: 2841)

தொழுகை, ஜிஹாத், நோன்பு, தர்மம் என்று அத்தனை தலைவாசல்களிலும் அழைக்கப்படும் பாக்கியமிக்கவராக அபூபக்ர் (ரலி) திகழ்வதை இந்த ஹதீஸ் நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(முஸ்லிம்: 1865)

இந்த ஹதீஸும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சுவனவாசி என்ற சுபச்செய்தி கூறுவதுடன் அவர்களின் பலகட்ட அமல்களை எடுத்துக் கூடுகின்றது.
உமர் (ரலி)யின் அமல்கள்
அபூபக்ர் (ரலி)க்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் உமர் (ரலி) அவர்கள். அவர்களுக்கு சுவனம் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் பின்வரும் ஹதீஸ் சான்று பகர்கின்றது.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(புகாரி: 3242)

சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உமர் (ரலி) அவர்கள் நல்லமல்கள் செய்வதில் அலட்சியமாகவோ அசட்டையாகவோ இல்லை. கடமையான தொழுகைகளைக் காற்றாட விட்டதில்லை. அவர்கள் சுபுஹ் தொழுகையின் ஜமாஅத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது ஓர் யூதனால் கொல்லப்பட்டு ஷஹீத் ஆகின்றார்கள்.
பார்க்க:(புகாரி: 3700)

பிலால் (ரலி)யின் பிரத்தியேக அமல்

பிலால் (ரலி) ஆரம்ப கால முஸ்லிம். தியாகத்தின் மறுபதிப்பு என்பதை நாம் அறிவோம் அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்தவர்கள். உமைய்யத் பின் கலஃப், பத்ருப் போரில் கொல்லப்படுவதற்கு அவர்கள் தான் காரணமாக அமைந்தார்கள். (பார்க்க:(புகாரி: 2301)
அந்த பிலால் (ரலி) அவர்கள் அமலில் பின் தங்கிவிடவில்லை.
ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால் (ரலி) அவர்களிடம் ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(புகாரி: 1149)

இந்த ஹதீஸ் பிலால் (ரலி)யின் அமலுக்கு சாட்சி கூறி நிற்கின்றது.
இவை எல்லாம் நபித் தோழர்கள் சுவனவாசிகள் என்ற சுபச் செய்தி சொல்லப்பட்ட பிறகும் அமல்களில் அவர்கள் சோடை போகவில்லை. அந்த அமல்களில் விரைந்து செல்கின்ற நல்லடியார்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது.
கலிமாச் சொல்லி விட்டு அமல்கள் செய்யாமல் தவ்ஹீத் கொள்கை நம்மைக் காத்துவிடும் என்று நம்பிக் கொண்டு அமல்கள் ஏதும் செய்யாமல் இல்லை. அமல்களில் அவர்கள் தணியாத ஆர்வமும் ஆசையும் கொண்டிருந்தனர் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் அறிய முடிகின்றது.
அக்கரை சேர்க்கும் அழகான அமல்கள்
நாளை மறுமையில் ஒருவர் சுவனத்திற்குச் செல்லவேண்டுமென்றால் நரகத்தின் மேல் போடப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்தே தீர வேண்டும்.
உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை.
(அல்குர்ஆன்: 19:71)

அந்தப் பாலத்தை ஒருவர் கடக்க வேண்டுமென்றால் அவரது அமல் தான் அவரை அக்கரையில் கொண்டு போய் சேர்க்கின்றது. இதை முஸ்லிமில் இடம்பெறுகின்ற ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாளில்) மனிதர்களை ஒன்றுகூட்டுவான். அங்கு இறை நம்பிக்கையாளர்களும் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அருகில் சொர்க்கம் கொண்டு வரப்படும். உடனே அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “எங்கள் தந்தையே! எங்களுக்காகச் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும்படி கூறுங்கள்” என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் “உங்கள் தந்தை ஆதம் செய்த தவறுதானே உங்களைச் சொர்க்கத்திலிருந்தே வெளியேற்றியது! அ(வ்வாறு சொர்க்கத்தைத் திறக்குமாறு கூறுவ)தற்கு நான் உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் என் புதல்வரும் அல்லாஹ்வின் உற்ற நண்பருமான இப்ராஹீம் அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

(அவ்வாறே மக்களும் செல்ல) இப்ராஹீம் (அலை) அவர்கள், “நான் அதற்கு உரியவன் அல்லன். நான் உற்ற நண்பனாக இருந்ததெல்லாம் (வானவர் ஜிப்ரீல் தூதுவராக இருந்த) பின்னணியில் தான்; அந்தப் பின்னணியில் தான். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ் (நேரடியாக) உரையாடிய மூசா (அலை) அவர்களை நாடிச் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் “நான் அதற்கு உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய ஆவியுமான ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
(அவ்வாறே மக்களும் செல்ல) ஈசா (அலை) அவர்கள், “நான் அதற்கு உரியவன் அல்லன்” என்று கூறுவார்கள். பின்னர் மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள்.
உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்தபந்த உறவும் அனுப்பிவைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள “ஸிராத்” எனும்) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம் இடமாக நின்றுகொள்ளும்.

அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்துசெல்வார்கள். -இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, நான் (அபூஹுரைரா-ரலி), “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மின்னலைப் போன்று கடந்துசெல்வது என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மின்னல் எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டுத் திரும்புகிறதென்று நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கேட்டார்கள்.- பிறகு காற்று வீசுவதைப் போன்றும், பறவை பறப்பதைப் போன்றும், மனிதர்கள் விரைந்து ஓடுவதைப் போன்றும் இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு அவர்களின் (நற்)செயல்கள் ஓடும். உங்கள் நபியோ அந்தப் பாலத்தின் மீது நின்றுகொண்டு, “இறைவா! காப்பாற்று! காப்பாற்று!” என்று கூறிக்கொண்டிருப்பார்கள். இறுதியில் அடியார்களின் செயல்கள் செயலிழந்துபோகும்; அப்போது ஒருவர் வருவார். அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்தபடியே (அதைக் கடந்து) செல்வார். அந்தப் பாலத்தின் இரு ஓரங்களிலும் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். சிலரைப் பிடிக்கும்படி அவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும். சிலர் காயப்படுத்தப்பட்டுத் தப்பிவிடுவர்; சிலர் நரகநெருப்பில் தள்ளப்படுவர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நரகத்தின் ஆழமானது, எழுபது ஆண்டுகள் தொலைதூரம் கொண்டதாகும்.
(முஸ்லிம்: 329)
இந்த ஹதீஸ் அமல்கள் இருந்தால் தான் சுவனம் செல்ல முடியும் என்பதை உணர்த்துகின்றது. அதில் அமல்களில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

சுவனத்தை நோக்கி விரையுங்கள்

அமல்களின்றி சுவனம் இல்லை என்பதை சென்ற இதழில் தெளிவாகப் புரிந்து கொண்டோம். எப்போது அமல்கள் இல்லாமல் சுவனம் இல்லை என்று விளங்கிக் கொண்டோமோ அப்போதிலிருந்து அந்தச் சுவனத்தை அடைய நாம் ஆர்வமும் ஆசையும் கொள்ள வேண்டும், அதற்காக விரையவும் வேண்டும். காரணம் இது நபிமார்கள் மற்ற நல்ல மனிதர்களின் நற்பண்புகளாகும்.
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
(அல்குர்ஆன்: 21:90)

தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குவோரும், தமது இறைவனின் வசனங்களை நம்புவோரும், தமது இறைவனுக்கு இணை கற்பிக்காதோரும், தமது இறைவனிடம் திரும்பிச் செல்லவிருப்பதை உள்ளத்தால் அஞ்சி, வழங்குவதை வழங்குவோரும் ஆகிய இவர்களே நன்மைகளை விரைந்து அடைகின்றனர். அவர்களே அவற்றுக்கு முந்துபவர்கள்.
(அல்குர்ஆன்: 23:61)
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 3:133)
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
(அல்குர்ஆன்: 57:21)

இந்த வசனங்களில் அல்லாஹ் பாவ மன்னிப்பைப் பற்றியும் சொர்க்கத்தைப் பற்றியும் குறிப்பிடும் போது விரையுங்கள், முந்துங்கள் என்று கூறுகிறான்.
பொதுவாக மனித மனம் ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விடுவதால் நன்மையைச் செய்வதற்கு மெதுவாகவும் தீமை செய்வதற்கு வேகமாகவும் உட்படும்.

உதாரணமாக, தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டு விடும். ஆனால் நம்முடைய மனம் இகாமத்துக்கு 20 நிமிடங்கள் இருக்கிறதே! மெதுவாகப் போவோம் என்று கூறும். இப்படியே நம்மைக் காலம் கடக்கச் செய்து நாம் ஜமாஅத்தையே தவற விட்டுவிடுவோம்.
‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார் களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 615),(முஸ்லிம்: 661)

இந்த நன்மைகளை எல்லாம் நம்முடைய மனதில் ஷைத்தான் ஊடுருவி தடுத்து விடுகின்றான். அதே சமயம் தொழுகை முடிந்ததும் செய்யவேண்டிய தஸ்பீஹ்கள், திக்ர்கள், துஆக்கள் ஆகியவற்றை ஓதவிடாது தடுத்து நம்மைப் பள்ளியை விட்டு வெளியே துரத்தி விடுகின்றான். என்ன உட்கார்ந்திருக்கிறாயே! தொழுகை முடிந்து விட்டதே! கிளம்பவில்லையா? கிளம்பு, கிளம்பு என்று நமது மனம் நம்மைக் கிளப்பி விடுகின்றது! எதற்காக? பாவமான பேச்சுக்களைப் பேசவும், பயனளிக்காத செய்திகளை விவாதம் செய்யவும், இன்னும் இது போன்ற தீமைகளில் ஈடுபடவும் தொழுது முடித்தவுடன் தூசி தட்டி விட்டு, துண்டை உதறி விட்டு வெளியே கிளம்பி விடுகிறோம்.
இது போல் பாவமான காரியங்களின் பால் நமது மனம் பறந்து விரைந்து செல்வதால், அதற்கு நேர் மாற்றமாக அல்லாஹ் நம்மை நோக்கி, பாவ மன்னிப்பு, சொர்க்கத்தின் பக்கம் விரைந்து செல்லுங்கள் என்று கூறுகிறான். மேற்கண்ட வசனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அடைய தங்களது வாழ்க்கையை நபித்தோழர்கள் அர்ப்பணித்தார்கள். தங்களது உயிர்களைக் காணிக்கையாக்கினார்கள்.
விரையுங்கள் என்பதற்கு விரிவுரை எழுதிய தோழர்!

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதரும் அவர்களது தோழர்களும் பத்ருக் களத்திற்கு இணை வைப்பவர்களை விட முந்திச் சென்றுவிட்டார்கள். இணை வைப்பவர்களும் வந்து விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் அங்கு வருவதற்கு முன்பாக உங்களில் எவரும் எந்தக் காரியத்திலும் இறங்கி விட வேண்டாம்’ என்று உத்தரவிட்டார்கள்.
இணை வைப்பவர்கள் (போர் புரிய) நெருங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சுவனத்தின் பக்கம் செல்லுங்கள். அதனுடைய விசாலம் வானங்கள் பூமியை ஒத்ததாகும்’ என்று கூறினார்கள்.
உமைர் பின் அல் ஹுமாம் என்ற அன்சாரித் தோழர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் விசாலம் வானங்கள் பூமியின் விசாலத்திற்கு இணையானதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அதற்கு அவர் ஓஹோ என்றார்.
“நீ ஓஹோ, ஓஹோ என்று கூறுவதன் காரணம் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சுவனவாசியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே தவிர நான் அவ்வாறு கூறவில்லை” என்று பதிலளித்தார். ‘நீ சுவனவாதி தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் தன் பையிலிருந்த பேரீத்தம் பழங்களை வெளியே எடுத்து அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர், “நான் இந்தப் பழங்களை சாப்பிட்டு முடிக்கும் வரை உயிர் வாழ்ந்தேன் என்றால் நிச்சயமாக அது நீண்ட வாழ்க்கை தான்” என்று கூறி தன்னிடம் இருந்த பேரீத்தங்கனிகளை தூக்கி வீசினார். பிறகு போராடி கொல்லப்பட்டார்.
(முஸ்லிம்: 3520)

எனக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொன்ன பிறகும் இந்த பேரீத்தம்பழங்களைச் சாப்பிடுவதற்காக நான் கால தாமதம் செய்தால் இந்த உலகத்தில் ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவேன் என்று அந்த நபித் தோழர் சொல்வது உண்மையில் சிந்திக்கத் தக்க வைர வரிகளாகும். பேரீத்தம் பழங்கள் சாப்பிடுவதற்கு மிஞ்சி மிஞ்சி போனால் எவ்வளவு நேரம் ஆகிவிடும்? நாம் கிரில் சிக்கன்கள் சாப்பிடுகின்ற அளவுக்கு நேரத்தை இந்தப் பேரீத்தம்பழங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு சில நிமிடத்துளிகளைத் தான் எடுத்துக் கொள்கின்றன.
அந்த சில நிமிடத்துளிகளை இவ்வுலகில் எடுத்துக் கொண்டு நான் காலதாமதம் செய்வது இந்த உலகத்தில் ஒரு நீண்ட நெடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்குச் சமமாகும் என்று அந்த நபித் தோழர் கூறுவதும், பின்னர் போர்க்களத்தில் மின்னல் வேகத்தில் புகுந்து கொல்லப்படுவதும் “விரையுங்கள்” என்ற வசனத்தின் பொருளை ஹுமைர் பின் ஹும்மாம் எப்படி விளங்கி, சுவனத்தின் ருசியைச் சுவைத்திருக்கின்றார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
உயிரை அர்ப்பணிக்கும் விஷயத்திலிருந்து அற்பமான மயிர் விஷயம் வரை நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நபித் தோழர்கள் பேணியிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தொழுகைக்குப் பிறகு சொல்லப்படும் சுப்ஹானல்லாஹ்வையும் நபித்தோழர்கள் அலட்சியப்படுத்துவது இல்லை! தன் கொள்கைக்காக, கொள்கையைக் காக்க போர்க்களத்தில் கொல்லப்படும் ஷஹாதத்தையும் நபித் தோழர்கள் அலட்சியப்படுத்துவதில்லை.
“யார் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹு அக்பர் என்று 33 தடவையும் முடிவில் நுறாவதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று கூறுகின்றாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருப்பினும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 939)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற இந்த ஹதீஸில் உள்ள அமலை நம்மில் எத்தனை பேர்கள் செயல் படுத்துகின்றோம்? தொழுது முடித்து, அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றோமே தவிர யாரும் அமைதியாக இருந்து இந்த திக்ருகளைச் செய்வது கிடையாது. தொழுது முடித்தவுடன் பெண்கள் தான் நபி (ஸல்) காலத்தில் விரைந்து சென்றதைப் பார்க்க முடிகின்றது. ஆண்கள் விரைந்து சென்றதைப் பார்க்க முடியவில்லை. அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் விரைந்து செல்ல வேண்டும். இந்த தஸ்பீஹ் விஷயத்தில் நபித் தோழர்களின் நடைமுறையைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, பெரும் செல்வந்தர்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிலையான அருட்கொடைகளையும் தங்கள் செல்வத்தின் மூலம் தட்டிச் செல்கின்றனர். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கின்றனர். பொருளாதாரம் என்ற பாக்கியம் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் அவர்கள் ஹஜ் செய்கின்றார்கள். உம்ரா செய்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றார்கள், தான தர்மங்கள் வழங்குகிறார்கள் என்று முறையிட்டனர். நபி (ஸல்) அவர்கள், உங்களை முந்தி விட்டவர்களை அடைந்திடவும் உங்களுக்கு பின் உள்ளவர்களை முந்தி விடவும் ஒரு வழியை கற்றுத் தரவா? நீங்கள் செய்த மாதிரி எவரேனும் செய்தாலே தவிர உங்களை விட எவரும் சிறந்தவராகி விட முடியாது என்று சொன்னதும் அவர்கள், “ஆம் அல்லாஹ்வின் தூதரே! கற்றுத் தாருங்கள்’’ என்று கேட்டனர். நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் 33 தடவை சுப்ஹானல்லாஹ் என்றும் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும் 33 தடவை அல்லாஹு அக்பர் என்றும் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 843),(முஸ்லிம்: 936)

ஏழை முஹாஜிர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பொருள் வசதி படைத்த எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்வதைச் செவியுற்று அவர்களும் அது போல் செய்கின்றனர்’’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் நாடியவர்களுக்கு அவன் வழங்குகிறான்” என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்: 936)

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! பாருங்கள்! ஏழை நபித் தோழர்கள் செல்வந்தர்களைப் போன்று நன்மைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று கவலைப் படுகிறார்கள். பணக்கார நபித் தோழர்களோ ஏழை நபித் தோழர்கள் செய்கின்ற தஸ்பீஹ்களையும் விட்டு வைக்காமல் செய்கின்றார்கள்.

இன்று காசு பணம் உள்ள, வசதி படைத்த சீமான்கள் தான் செல்போன்களைக் கைகளில் தவழ விட்டுக் கொண்டு இந்த அமல்களை நழுவவிட்டு விடுகிறார்கள் என்பதைக் கண்டு வருகிறோம். நபித்தோழர்கள் சுப்ஹானல்லாஹ் சொல்லும் இந்த நன்மையைக் கூட கொள்ளையடிக்கத் தவறவில்லை. இந்த அமல்களை அலட்சியம் செய்யவில்லை. ஆனால் நாமோ இதுவெல்லாம் சின்ன அமல் என்று விட்டுவிடுகிறோம். இத்தனைக்கிடையில் நாம் என்ன பெரிய அமல்களைச் செய்து விட்டோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்குப் பின் செய்யப்படும் தஸ்பீஹ்கள், ஹஜ், உம்ரா, ஜிஹாத், தான தர்மங்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு ஒப்பானவையாகத் திகழ்கின்றன என்பதை இந்த ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

உளூவின் சிறப்புகள்
ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள்

இதுவரை நாம் மேற்கண்ட விளக்கத்தில் நபித் தோழர்கள், அமல்களில் சிறியது பெரியது என எதையும் வேறுபடுத்திப் பார்க்காமல் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு அமலுக்குரிய சிறப்பையும், அதற்கு அல்லாஹ் வழங்கும் பரிசையும் தட்டிச் செல்வதற்காக, பந்தயக் குதிரையென களத்தில் பாய்ந்து சென்றதைப் பார்த்தோம். அந்த நிலை நம்மிடம் வர வேண்டும்.
நபித் தோழர்களைப் போன்று நன்மைகளைக் கொள்ளை கொள்வதில் நம்மிடம் போட்டி மனப்பான்மை வரவும் வளரவும் வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு அமலுக்குரிய சிறப்பையும் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில் அமல்களின் சிறப்புக்களின் வரிசையில் முதலாவதாக உளூவின் சிறப்பைப் பார்ப்போம்.
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவி (மஸஹ் செய்து) கொள்ளுங்கள். உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை (கழுவிக் கொள்ளுங்கள்)
(அல்குர்ஆன்: 5:6)

இந்த வசனத்தில் தொழுகைக்காக உளூச் செய்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
எனவே தொழுகை எனும் வணக்கத்தை உளூவின்றி செய்யக் கூடாது. உளூவின்றி செய்தால் தொழுகை நிறைவேறாது. அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டும் போது ஒவ்வொரு உறுப்பையும் மூன்று தடவை கழுவிக் காட்டியிருக்கிறார்கள்.
உஸ்மான் (ரலி) உளூச் செய்யும் போது தம் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிப் பின்னர் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தி தமது முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தனது வலது கையை மூட்டு வரை மூன்று கழுவினார். பின்னர் இடது கையை மூட்டு வரை மூன்று முறை கழுவினார். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார். பின்னர் வலது காலை மூன்று முறையும் இடது காலை மூன்று முறையும் கழுவினார். “நான் உளூச் செய்தது போல் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ததை நான் பார்த்து இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
(புகாரி: 140)

உளூவின் போது உதிரும் பாவங்கள்

மேலே இடம்பெற்ற ஹதீஸில் கடமையாக்கப்பட்ட உளூவை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் விளக்குகின்றது. உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற முஸ்லிமில் இடம் பெறுகின்ற மற்றொரு ஹதீஸ், ஒவ்வொரு உறுப்பைக் கழுகின்ற போதும் அந்தந்த உறுப்புகளின் பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன என்று தெரிவிக்கின்றது.

ஒரு முஸ்லிமான அல்லது இறைநம்பிக்கை கொண்ட அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 412)

சிறு பாவங்களுக்கு உளூ ஒரு பரிகாரம்

உஸ்மான் (ரலி), உளூச் செய்யும்போது ‘‘நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டு, ‘‘ஒரு மனிதன் அழகிய முறையில் உளூ செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன்’’ என்றார்கள். இதை ஹும்ரான் அறிவித்தார்.
அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது ‘நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்’ (அல்குர்ஆன்: 02:159) என்ற வசனமாகும்’ என உர்வா கூறினார்.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)யின் அடிமை ஹும்ரான்
(புகாரி: 160)

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
‘‘அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக உளூ செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான் பின் அபான்
(முஸ்லிம்: 391)

இந்த ஹதீஸ்கள் உளூவின் மூலம் பாவங்கள் உதிர்கின்றன என்றும் சிறு சிறுபாவங்களுக்கு அது பரிகாரமாகின்றது என்றும் தெரிவிக்கின்றன.
நனையாத உறுப்பும் நரகத்தின் நெருப்பும்
நாம் செய்கின்ற உளூவை நிறைவாகச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றார்கள். அந்த ஹதீஸ்களை இப்போது பார்ப்போம்:
‘நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களை விட்டும் பின்தங்கிவிட்டார்கள். நாங்கள் அஸர் நேரத்தை அடைந்தபோது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூ செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களில் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். அப்போது, ‘இத்தகைய குதிங்கால்களை நரகம் தீண்டட்டும்’ என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபி(ஸல்) கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
(புகாரி: 163, 165),(முஸ்லிம்: 405)

தகுதியை உயர்த்தும் தரமிக்க உளூ

ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 421)

உளுவின் காரணமாக ஒளிரும் முகங்கள்

ஆதம் நபி முதல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அனைவரது சமுதாயங்களும் நிறைந்து நிற்கின்ற மறுமை நாளில், நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தை அடையாளங்காண அரியதொரு அடையாளமாக அமைவது நாம் செய்கின்ற உளூ தான்.
இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது,
தொழுகைக்காக உளூ செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள் வரை நீட்டிக் கழுவினார்கள்.
நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது என்ன உளூ?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு உளூ செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்’’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹாஸிம்
(முஸ்லிம்: 420)

இந்த ஹதீஸின் மூலம் உளூவின் சிறப்பையும் அது மறுமையில் நமக்கு அடையாளமாகத் திகழ்வதையும் விளங்கிக் கொள்ளலாம். அதனால் அந்த உளூவை நாம் நிறைவாகச் செய்யவேண்டும்.
நாளை மறுமையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் ‘குர்ரன் முஹஜ்ஜிலீன்’ அதாவது முகம் கைகால்கள் ஒளிமயமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்பதைப் பின்வரும் புகாரி ஹதீஸ் விவரிக்கின்றது.
பள்ளிவாசலின் மேல்புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில், உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்
அறிவிப்பவர்: நுஐம் அல் முஜ்மிர்
(புகாரி: 136)

மறுமை நாளில் ஒளிமயமானவர்களாக வருவார்கள் என்று அல்லாஹ் கூறும் வசனங்களுக்கு இந்த ஹதீஸ் விளக்கமாகவும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றது.
நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை நீர் காணும் நாள்! இன்று சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன்: 57:12)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவர்.
(அல்குர்ஆன்: 66:8)

எனவே, நாம் செய்யக் கூடிய உளூ நாளைக்கு ஒளிவீசச் செய்யும் ஒளிச் சுடர் என்று நம்பியவர்களாக உளூவை நிறைவாகவும் நிதானமாகவும் செய்யவேண்டும்.
ஜமாஅத்தைப் பிடிக்க வேண்டும் என்ற அவசர கோலத்தில் ஹவுஸ் தண்ணீரை மேனியில் அள்ளித் தெளித்து அரை குறையாக உளூச் செய்து விட்டுச் செல்லும் எத்தனையோ சகோதரர்களைப் பார்க்கின்றோம். அப்படி அவசரமாக தண்ணீரை அள்ளி முகத்திலும் கைகளிலும் அடித்து விட்டுச் செல்லும் அந்த சகோதரர்களை மார்க்கப் பிடிப்பு குறைந்தவர்கள் என்றே நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் உளூவை நிறைவாகச் செய்யும் போது கிடைக்கும் “பாவங்களை அழித்து நன்மையை உயர்த்துதல்’’ என்ற பரிசையும் இவர்கள் இழந்து விடுகிறார்கள்.

இன்று உளூ செய்பவர்களில் ஒரு சாரார் தலையில் மூன்று தடவை மஸஹ் செய்வதைப் பார்க்கிறோம். அவ்வாறு மஸஹ் செய்யும் போது தலை முழுவதும் மஸஹ் செய்வது கிடையாது. நெற்றிப் பொட்டையும் தண்ணீரையும் மாறி மாறி மின்னல் வேகத்தில் ஒரு சம்பிரதாயத்துக்கு தொட்டுத் தொட்டு முடித்து விடுகின்றனர்.
ஒரு சிலர் தலையிலும் காதுகளிலும் மஸஹ் செய்து விட்டு பிடரியில் தன் இரு கைகளாலும் கராத்தே போன்று வெட்டிக் கொள்கின்றனர். இது போன்ற உளூவெல்லாம் இறைத் தூதர் காட்டிய முறையில் இல்லை. எனவே மேலே நபி (ஸல்) அவர்கள் கூறியபடி பாவ மன்னிப்பு இன்னும் மேலதிகமான நன்மைகள் இதற்கு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.
மேற்கண்ட(புகாரி: 160)வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தான் செய்வது போல் உளூச் செய்தால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகக் குறிப்பிடுகின்றார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வது போல் நாமும் செய்ய வேண்டும். அதனால் இதைக் கவனத்தில் வைத்து நாம் உளூவை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்வோமாக!

குறிப்பு:
மேற்கண்ட(புகாரி: 136)வது ஹதீஸில் இடம்பெறும், ‘உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’

(’’فمن استطاع منكم أن يطيل غرته فليفعل‘‘)

என்ற வாசகத்தைப் பற்றி நாம் ஒரு விளக்கத்தை இங்கே பார்க்க வேண்டும்
இதே ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் (10360)இடம் பெறுகின்றது. அதில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான நுஐம் அல்முஜ்மிர், ‘இது நபி (ஸல்) அவர்களின் செய்தியா? அல்லது அபூஹுரைரா (ரலி)யின் செய்தியா? என்று எனக்கு தெரியாது’ என்று தெரிவிக்கின்றார்.
இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் இதன் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார். அத்துடன், ‘இந்த ஹதீஸை பத்துக்கும் மேற்ப்பட்ட நபித் தோழர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடைய அறிவிப்பிலும் அது போல் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்ற அறிவிப்பிலும் இந்தக் கருத்து இடம் பெறவில்லை. இது நுஐம் அல்முஜிரிமிடந்து வருகின்ற அறிவிப்பில் மட்டுமே இடம் பெறுகின்றது. அல்லாஹ் மிக அறிந்தவன்’ என்றும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.
‘‘கூடுதலாகக் கூறப்பட்ட இந்தச் செய்தி அபூஹுரைராவின் சொந்தக் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல! ஹதீஸில் இது இடையில் நுழைந்து விட்டது. அபூஹுரைரா (ரலி)யிடமிருந்து அறிவிக்கின்ற நுஐம் அல்முஜ்மிர் என்ற அறிவிப்பாளர் அறிவிக்கின்ற அறிவிப்பில் மட்டுமே இது இடம் பெறுகின்றது. மற்றவர்களின் அறிவிப்பில் இது இடம் பெறவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹதீஸ் கலை ஹாபிழ்கள் இதைத் தெளிவுபடுத்தி உள்ளனர்’’ என்று ஹாதில் அர்வாஹ் என்ற நூலில் ஹாபிழ் இப்னுல் கய்யூம் ( ரஹ்) அவர்கள் தெரிவிப்பதாக அறிஞர் அல்பானி அவர்கள் இர்வாவுல் கலீல் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்.

உளூவின் துஆவும் உறுதியாகும் சுவனமும்

இன்று நம்மில் பலர், சிறு சிறு அமல்களை அலட்சியம் செய்வதைப் பார்க்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது செய்த அறிவுரையில் ‘‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஊரில் தன்னை ஒரு போதும் மக்கள் வழிபட மாட்டார்கள் என்று ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். அதே சமயம் நீங்கள் அற்பமாகக் கருதி விடுகின்ற உங்கள் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு கிடைக்கின்றது. அதன் மூலம் அவன் திருப்தியடைகின்றான்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ்
நூல்: திர்மிதி 2085

இதைக் கவனத்தில் கொண்டால் நாம் சிறு சிறு அமல்களை விட மாட்டோம். அதில் பேணுதல் காட்டுவோம்.
உளூவின் துஆ சிறிய அமலாக இருந்தாலும் அதற்குச் சுவனம் கிடைக்கின்றது என்பதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு,

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி மொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
(முஸ்லிம்: 397)

சிறிய அமல்கள் மூலம் அல்லாஹ் நமக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான். எனவே இவற்றில் நாம் அலட்சியம் காட்டாமல் அமல்களைத் தொடர்வோமாக!

உளூவினால் கிடைக்கும் உடனடியான பலன்கள்

ஒருவர் உறக்கத்தை விட்டு எழுந்தவுடன் மீண்டும் உறங்கவேண்டும் என்ற சோர்வூட்டும் எண்ணம் உள்ளிருந்து பிறந்து கொண்டிருக்கும். மீண்டும் படுக்கைக்குப் போய் விடுவோமா என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கும். சொக்குப்பொடி போட்டு இரு கண்களையும் ஏற சொருக வைத்து சொக்குகின்ற தூக்கப்பிடியில் நம்மைச் சிக்க வைக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு முடிவு கட்டுவது நாம் செய்கின்ற உளூதான்.
உங்களில் ஒருவர் உறங்கும் போது அவரது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் ‘இரவு இன்னும் இருக்கின்றது, உறங்கு’ என்று கூறுகின்றான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூ செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மனஅமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராக காலைப் பொழுதை அடைகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 1142, 3269)(முஸ்லிம்: 1295)

ஷைத்தானின் இரண்டாம் முடிச்சை அவிழ்க்கும் அற்புத இயந்திரம் உளூவாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக்குகின்றது. உளூ செய்தவுடன் உடலில் ஒரு புத்துணர்ச்சியையும் அமல்கள் செய்யச் சரியான சத்துணர்ச்சியையும் பெற்று விடுகிறோம். இது நாம் நேரடியாகக் காணும் உளூவின் பயன்பாடு மற்றும் சிறப்பாகும். இந்த உளூவைச் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் மறுமையில் கிடைக்கப் போகும் பயனும் சிறப்பும் என்னவென்று இனி காண்போம்.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு “நான் உளூ செய்வதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
(புகாரி: 160, 164, 1934, 6433),
(முஸ்லிம்: 331, 332, 333, 336)

இந்த ஹதீஸ் உளூச் செய்த உடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று காட்டுகின்றது. அது கடமையான தொழுகையாகக் கூட இருக்கலாம். அல்லது உளூச் செய்தவுடன் நாம் தொழக்கூடிய லுஹரின் முன் சுன்னத் அல்லது பஜ்ரின் முன் சுன்னத் போன்ற ஏதேனும் ஒரு தொழுகையாகக் கூட அது இருக்கலாம்.
ஆனால் பிலால் (ரலி) அவர்கள் நம்மிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றார்கள். அவர்கள் கடமையான மற்றும் அறியப்பட்ட நபிலான தொழுகை நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உளூச் செய்யும் போதெல்லாம் அவர்கள் இரு ரக்அத்கள் தொழத் தவறியதில்லை.

ஒரு ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி) இடம் “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) “இரவிலோ பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் நான் செய்யும் செயல்களில் சிறந்த செயல்’’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 1149),(முஸ்லிம்: 4497)

நாம் ஒருவரின் செருப்போசையை வைத்து அவர் இன்னார் தான் என்று அடையாளங்கண்டு கொள்கின்றோம் என்றால் அந்த அளவுக்கு அவர் நம்மிடம் அடிக்கடி வந்து சென்றிருக்க வேண்டும். நிச்சயமாக பிலால் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அடிக்கடி பள்ளிக்கும் வீட்டுக்கும் வந்து சென்றவர்கள் என்பதில் நமக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு பிலால் (ரலி)யின் இந்த அமலை நேரடியாக அறிவித்திருக்கலாம். சுவனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பிலாலின் செருப்போசையைச் செவியுற வைத்து, பிலால் செய்த அமல் என்ன? நபி (ஸல்) அவர்களை பிலால் (ரலி)யிடம் சஸ்பென்ஸாகக் கேட்க வைக்கின்றான். பிலால் (ரலி) இன்ன அமல் தான் என்று பதில் சொல்கின்றார். இவ்வாறு அல்லாஹ் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இந்த அமலுக்கான பரிசை அறிவிப்பதன் நோக்கம் பிலால் (ரலி)யைப் போன்று மற்றவர்கள் இதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகத் தான்.

எனவே, உளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்கள் தொழுகின்றோம் எனில் அந்த அமல் நம்மை பிலால் (ரலி)யைப் போன்று சுவனத்திற்குச் சொந்தக்காரராக்கி விடுகின்றது. உளூச் செய்த பின் நாம் செய்கின்ற இந்தச் சிறிய அமல் பெரிய சுவனத்தைப் பெற்றுத் தருகின்றது. நபிவழிப்படி நடக்கும் கூட்டம் நாங்கள் என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேரிடம் இந்த அமல் உள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இங்கே நாம் இன்னோர் எச்சரிக்கையையும் கவனிக்கத் தவறி விடக்கூடாது. உளூவின் சிறப்பைப் பற்றி கூறக்கூடிய ஹதீஸில் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் பாவங்கள் கரைந்து விடுகின்றன. சுவனம் கிடைத்து விடுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நாம் சூதாடலாம், விபச்சாரம் செய்யலாம், வட்டி வாங்கலாம், கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம், மது அருந்தலாம்! என்ன செய்தாலும் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.

யார் நான் உளூச் செய்தது போல் செய்து, பள்ளிக்கு வந்து இரு ரக்அத்கள் தொழுது அமர்ந்திருந்தால் அவரது முந்தைய பாவம் மன்னிக்கப்பட்டு விடும். நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் வேறொரு இடத்தில் பதிவாகியுள்ளது.
(மதீனாவிலுள்ள) ‘மகாயித்’ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக உளூ செய்தார்கள். பிறகு ‘நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக உளூ செய்யக் கண்டேன்’ என்று கூறிவிட்டு, ‘யார் இதைப் போன்று (முழுமையாக) உளூ செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி) விடாதீர்கள்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான் இப்னு அபான்(ரஹ்)
(புகாரி: 6433)

தொழுகையின் மூலம் மன்னிக்கப்படுவது சிறு பாவங்கள் தான். பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்றும் அந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கின்றார். இது தொடர்பாக நாம் மேலே தெரிவித்த எச்சரிக்கை நம்முடைய தன்னிச்சையான எச்சரிக்கையல்ல! நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாகும். அந்த எச்சரிக்கையை நாம் பேணிக் கொள்வோமாக!

பல் துலக்குதல்

பல் துலக்குதல், உளூச் செய்வதுடன் ஒட்டிய செயல் என்பதால் இச்செயலை வலியுறுத்துகின்ற ஹதீஸ்களை இங்கு காண்பது பொருத்தமாக அமையும். அந்த அடிப்படையில் பல்துலக்குதல் சம்பந்தமான ஹதீஸ்களைப் பார்ப்போம். நபி வழியைப் பின்பற்றுவோம் என்று மத்ஹபுகளை எல்லாம் விட்டெறிந்து விட்ட நாம் இதுபோன்ற நபிவழியை நடைமுறையில் கொண்டு வரவேண்டும்.

அமல்களின் சிறப்புகள் என்ற இந்த தலைப்பின் கீழ் அமல்களின் சிறப்புகளை மட்டும் சொல்வது நோக்கமல்ல. சிறுசிறு நபிவழிகளை எடுத்துக் காட்டி, அவற்றைச் செயல்படுத்தி, நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியவர்களாக வேண்டும் என்பது தான் நமது தலையாய நோக்கமாகும்.

எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 887, 7240)(முஸ்லிம்: 370)

பல்துலக்குவது தொடர்பாக நான் உங்களுக்கு அதிகமாக வலிறுத்தியிருக்கின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 888)

இந்த ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கும்படி வலியுறுத்தியுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. பல் துலக்குவது ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூவைப் போல் கடமை என்ற இடத்தைப் பிடிக்க இருந்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் எனில், இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

துலக்கல் தரும் தூய்மை

பல் துலக்குவது வாய்க்குத் தூய்மையாகும்! இறைவனுக்குத் திருப்தியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 5

இந்த ஹதீஸ் பல்துலக்குவது இறை திருப்தியைப் பெற்றுத் தருவதாகத் தெரிவிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் இன்னொருவரை விட மூத்தவராக இருந்தார். மூத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்விருவரில் பெரியவருக்கு பற்குச்சியைக் கொடுப்பீராக என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(அபூதாவூத்: 46)

இந்த ஹதீஸில் பல்குச்சியை யாருக்கு வழங்க வேண்டும் என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கின்ற அளவுக்குப் பல் துலக்குதல் அல்லாஹ்விடம் மாபெரும் மரியாதையையும், மதிப்பையும் பெற்றுத் திகழ்கின்றது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம். அல்லாஹ்விடமும் அவனது தூதர் (ஸல்) அவர்களிடமும் பெற்ற மரியாதையை நம்மிடத்தில் இது பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
உளூச் செய்யும் முன் பல் துலக்கும் நேரங்கள்
நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
(புகாரி: 1136),(முஸ்லிம்: 374)

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவு உறங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும் பல் துலக்கி உளூ செய்தார்கள். அப்போது அவர்கள் ஆல இம்ரானின் 190ஆம் வசனத்திலிருந்து அந்த அத்தியாயம் முடியும் வரை ஓதினார்கள் என முஹம்மது பின் அலீ அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெறுகின்றது.
இதில் காலை எழுந்ததும் உளூச் செய்யும் முன் நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள் என்று அறிகின்றோம்.

பல் துலக்கும் குச்சிக்கு இரவிலேயே ஏற்பாடு

ஸஃத் பின் ஹிஷாம் பின் ஆமிர் என்பார் ஆயிஷா (ரலி) யைச் சந்தித்து, வித்ரு தொழுகையைப் பற்றி வினவிய போது, “நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்காக பல்குச்சியையும் உளூச் செய்வதற்குரிய தண்ணீரையும் (இரவில்) தயாராக வைத்திருப்போம். இரவில் அல்லாஹ் அவர்களை எப்போது எழுப்ப வேண்டும் என்று நாடியுள்ளானோ அந்த நேரத்தில் அவர்களை எழுப்புவான். அவர்கள் எழுந்ததும், பல்துலக்கி, உளூச் செய்து பிறகு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள்’’ என்று பதிலளிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
(முஸ்லிம்: 1233)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் எழுந்ததும் முதன் முதலில் ஆற்றுகின்ற நல்ல காரியம் பல்துலக்குவது தான் என்று இந்த ஹதீஸ் நமக்கு தெரிவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் நுழைந்ததும் முதலில் எதைச் செய்யத் துவங்குவார்கள் என்று நான் ஆயிஷா (ரலி) யிடம் வினவினேன். அதற்கு, (முதன்முதலில்) பல்துலக்குவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானி
(முஸ்லிம்: 371)

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி பல் துலக்கியுள்ளார்கள் என்று காட்டுகின்றது.
மரணவேளையிலும் பல் துலக்கிய மாநபி (ஸல்)
(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானிடம், அவர் பல்துலக்கும் ஈரமான(பேரீச்சங்)குச்சி இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் ‘தம் கையை’ அல்லது ‘தம் விரலை’ உயர்த்திப் பிறகு, (“இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’’ என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு முடித்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 4449)

அதிகாலை எழுந்ததும் ஐந்து வேளை தொழுகையின் போதும் வீட்டிற்குள் நுழைந்ததும் பல் துலக்கிய ரசூல் (ஸல்) அவர்கள் தன் ஆயுள் முடியும் தருவாயிலும் அதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருக்கின்றோம். இன்றைய அறிவியல் மருத்துவம் உலகம் பல் துலக்குவதைப் பற்றி அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. உறங்குவதற்கு முன் பல்துலக்குவதற்கு ஊக்கமூட்டுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் பல்துலக்கியதையும் அதற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் இந்த ஹதீஸ்கள் நன்றாகத் தெளிவுபடுத்துகின்றன. அத்துடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுமுன் உளூ செய்து விட்டு உறங்கியதையும் ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?
அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் அறிவியல் ரீதியான உள்ளர்த்தங்களைக் கொண்ட வகையில் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.

மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன.
வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது. இதற்கு கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது.
நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.

இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்!

வாய் துர்நாற்றம்

பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது.
அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.
இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கமும் அறிவியலும் வலியுறுத்துகின்ற பல்துலக்கலைத் தான் நாம் அலட்சியம் செய்து வருகின்றோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இருக்கும் இந்த நாற்றத்தைப் போக்குவதற்கு மார்க்கம் பல்துலக்க ஆர்வமூட்டிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் பீடி, சிகரட், சுருட்டு குடித்து விட்டு அந்த நாற்றத்துடன் பல சகோதரர்கள் தொழ வருவது தான்.

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!