அழைப்புப்பணியின் அவசியம்
அழைப்புப்பணியின் அவசியம்
அகிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் ஏக நாயன் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஓரே மார்க்கம் புனித இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான். முதல் மனிதரும் தூதருமான ஆதம் (அலை) தொடங்கி இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை இந்த பூமியில் மக்களை அழைத்தது இந்த சத்திய மார்க்கத்தை நோக்கித் தான்.
எல்லா இறைத்தூதர்களின் பிரதான பணியாக இந்த ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைக்கும் அழைப்புப்பணியே இருந்தது என்பதை இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
‘என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!’ என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.
இஸ்லாத்தின் ஆணிவேரான “வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை” என்ற ஏகத்துவ முழக்கத்தை எத்தி வைப்பது தான் அழைப்புப்பணியின் பிரதான கொள்கையாகும். மேலும் அல்லாஹ் மனித குலத்திற்க்கு வழங்கியுள்ள நன்நெறி வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களது வாழ்க்கையை சீர்படுத்துவதை நோக்கமாக கொண்டு தான் அனைத்து இறைத்தூதர்களும் அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு இறைத்தூதரும் தம்முடைய சமுதாயத்தில் நிலவிய அனாச்சாரங்களையும், அட்டூழியங்களையும் எதிர்த்து செயலாற்றினர். குறிப்பாக படைத்த ரப்புல் ஆலமீனுக்கு இணை கற்பிக்கும் மாபாதக செயலை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தனர்.
இந்த சத்தியப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தயவு தாட்சணியமின்றி எடுத்துரைத்த ஓரே காரணத்திற்காக சொல்லொண்ணா துன்பங்களையும் இந்த இறைத்தூதர்கள் அனுபவித்தனர். நபிமார்களின் வரலாறுகள் அவைகளை நமக்கு சாட்சி பகர்கின்றன.
நாட்டை விட்டு விரட்டியடிக்கப்படுதல், சிறைவாசம், நெருப்புக் குண்டத்தில் வீசப்படுதல், சித்திரவதை, கொல்லப்படுதல் என்று என்னற்ற துன்பங்களை இந்த சத்தியத்தை எடுத்துச் சொல்லும் பணியில் இறைத்தூதர்கள் சகித்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் நாம் காணலாம்.
அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக இந்த துன்பங்களையெல்லாம் இறைத்தூதர்கள் சகித்து சத்தியச் செய்தியினை மக்களுக்கு கொண்டு சென்றனர்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர். அவர்களுக்கு பின் வேறு இறைத்தூதர் வரப்போவது இல்லை. மாறாக இறைத்தூதர்கள் செய்த அந்த மகத்தான அழைப்புப் பணியை செய்யும் கடமையை அல்லாஹ் முஸ்லீம்களான நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தியுள்ளான்.
ஒவ்வொருவரும் தம்முடைய சக்திக்கு ஏற்ப அவரது நாவாலோ, கரத்தாலோ, உடலாலோ, பொருளாலோ எந்த முறையில் தமக்கு சாத்தியமோ அந்த முறையில் அழைப்புப்பணி செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது.
உத்தம தூதர் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிப் பேருரையில் மக்களை நோக்கி பின்வருமாறு கூறி நம் மீது இந்த பணியை கடமையாக்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இது அல்லாஹ்வின் தூதர் நம் ஓவ்வொருவர் மீதும் சுமத்திவிட்டுச் சென்ற “அமானிதம்” ஆகும். நான் உனக்கு நேர்வழி காட்டினேனே, அதை கொண்டு நீ என்ன செய்தாய்? எத்தனை மக்களுக்கு இந்த சத்திய ஜோதியை கொண்டு போய் சேர்த்தாய் என்று அல்லாஹ் மறுமை நாளில் விசாரிக்கும் போது பதில் சொல்ல நாம் தயாராக வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் அந்த கட்டளையை ஏற்று தன்னலம் பாராமல் உழைத்த சஹாபாக்கள் மற்றும் நல்லோர்களின் அழைப்புப்பணி மற்றும் தியாகம் காரணமாக நாமெல்லாம் இன்று இந்த தூய மார்க்கத்தினை ஏற்றிருக்கிறோம். முஸ்லீம்கள் எனும் அழகிய அடைமொழிக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் இஸ்லாம் என்ற இந்த வெகுமதியை அறியாமல் என்னற்ற மூட நம்பிக்கைகளிலும், பாவத்திலும் பெரும்பாவமான இறைவனுக்கு இணைக்கற்பிக்கும் காரியத்திலும் மூழ்கி இருக்கக் கூடிய மக்கள் ஏராளமானோர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த சத்திய பிரச்சாரத்தினை எத்தி வைத்து கொடிய நரகத்திலிருந்து பாதுகாக்கும் பணியை நாம் ஓவ்வொருவரும் செய்ய வேண்டும்.
சத்தியத்தை அவர்களுக்கு எடுத்து வைக்கும் இந்தப் பணியை நாம் செய்யாமல் போனால், மறுமை நாளில் அல்லாஹ் அவர்களை விசாரிக்கும் போது “இன்னின்ன முஸ்லீம்கள் எங்களோடு வாழ்ந்து வந்தார்கள், ஆனால் அவர்கள் ஒரு போதும் எங்களுக்கு உன்னைப் பற்றி எச்சரிக்கவுமில்லை, உனது மார்க்கத்தை எங்களுக்கு ஏவவுமில்லை” என்று நம்மை குற்றம் சுமத்தும் நிலைக்கு ஆளாவோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாறாக நாம் அவர்களுக்கு இந்த சத்தியத்தை ஏவி அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினால் பல்மடங்கான நற்கூலியை நாம் அல்லாஹ்விடத்தில் மறுமையில் பெற்றுக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவரின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்து விடாது.
அறிவிப்பவர்: அபூஹுதரரா (ரலி)
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
அழைப்புப்பணி என்பது அவசியமான ஓர் பணியாகும். அது மார்க்கம் நம்மீது சுமத்தியுள்ள கடமை மட்டுமல்லாமல் நாம் நம்முடைய வாழ்க்கையின் தவறுகள் மற்றும் பாவமான காரியங்களிலிருந்து மீள்வதற்க்கும், மேலும் நாம் வாழும் மனித சமூகத்தை தீமையிலிருந்து பாதுகாக்கும் உண்ணத பணியாகவும் இருக்கின்றது.
ஒவ்வொருவரும் தமது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும். நேரடியாக ஈடுபட இயலாதவர்கள் இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறலாம்.
இந்த பணிக்காக தம்மை அர்ப்பணித்து அல்லாஹ்வின் பாதையில் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் தான் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
அழைப்புப்பணி என்றவுடன் பெரும்பாலோர் அது மக்களுக்கு “பயான் செய்வது” மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கின்றனர். எங்களுக்கு சரிவர பயான் செய்யத் தெரியாது எனவே நாங்கள் தாஃவா செய்வதில்லை, அது ஆலிம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர்.
மாறாக அழைப்புப்பணி என்பது ஓவ்வொருவராலும் செய்ய முடிந்த பரந்து விரிந்த காரியங்களை கொண்டதாகும். பயான் செய்வது மாத்திரமல்லாமல், நாம் அறிந்திருக்கும் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது, தனி நபர்களை சந்தித்து மார்க்கத்தை எத்தி வைப்பது,
நற்காரியங்களை முன்னின்று செய்வது, தீமைகளை கானும் போது அவற்றை தடுப்பது, பொருளாதாரத்தை கொண்டு தாஃவா செய்பவர்களை ஊக்கப்படுத்துவது என்று பல்வேறு வடிவங்களில் அனைவராலும் அழைப்புப்பணி செய்ய இயலும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
திருமறை குர்ஆனின் மொழியாக்கத்தை நம்மிடையே வாழும் மாற்றுமத சகோதரர்களுக்கு கொடுப்பது, அதன் மூலம் இந்த சத்திய ஜோதியை நோக்கி அவர்களது கவனத்தை ஈர்ப்பது, பெருமானார் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சொல்லும் புத்தகங்கள், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான நோட்டீஸ்கள் வினியோகிப்பது,
குருந்தகடுகள் வினியோகிப்பது, இரத்த தானம், வாழ்வாதார உதவிகள், மனித நேய உதவிகள் செய்வது என்று என்னற்ற பணிகளை நம்மால் செய்ய முடியும். அதன் மூலம் பிற மத சகோதரர்களின் உள்ளத்தில் இஸ்லாத்தை பற்றிய அறிவின்மையை அகற்றி இந்த சத்தியம் அவர்களின் உள்ளத்தை வென்றெடுக்கவும், இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய நன்மதிப்பை உயர்த்தவும் உதவும்.
எனக்கு நேரமில்லை, பேச்சாற்றல் இல்லை, ஆர்வமில்லை என்று ஒதுங்கி விடாமல் நம்மால் ஆன பங்களிப்பை இந்த மகத்தான பணியில் செலுத்தி ஈருலக நன்மையை அள்ளிக் கொள்வோமாக.
மேலும் நம்முடைய இந்த அழைப்புப்பணியில் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டினால் அந்த மூலம் கிடைக்கும் நன்மை அளப்பரியது என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் மூலமாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நாம் அனைவரும் இந்த மகத்தான பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் மூலம் மறுமையில் நமக்கு கிடைக்கவிருக்கும் கணக்கில்லா நன்மைகளுக்காகவும் விரைந்து இந்த பணியில் நம்மையும் ஓர் அங்கத்தினராக சேர்த்து கொண்டு நன்மைகளை கொள்ளையடிக்க முயற்ச்சிப்போமாக!