அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்
அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி – வஹீ மட்டுமே என்று ஆணித்தரமாக மக்களிடம் பதிய வைத்தது. அந்தப் பிரச்சாரத்திலிருந்து எள்ளளவு கூட, இம்மியளவு கூட மாறவில்லை. சவூதி சம்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட மதனிகளுடன் சேர்ந்து அழைப்புப் பணி செய்யும் போதும் சரி! அவர்களை விட்டுப் பிரிந்து பணியாற்றும் போதும் சரி! குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியெனப்பட்டதையே மக்களிடம் எழுத்துரீதியாகவும், பேச்சுரீதியாகவும் பிரச்சாரம் செய்து வந்தோம்.
ஹாரூத், மாரூத் மலக்குகள் அல்ல! மாறாக அவர்கள் ஷைத்தான்கள் தான் என்ற விளக்கத்தை 1992ல் அல்ஜன்னத் இதழிலேயே எழுதி விட்டோம். ஸிஹ்ர் – சூனியம் தொடர்பான ஹதீஸ்களை அப்போதே விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டோம்.
இன்னும் சொல்லப் போனால் புகாரியில் இடம்பெறுகின்ற, மூஸா நபி மலக்குல் மவ்த்தைத் தாக்கிய சம்பவம், மூஸா நபி நிர்வாணமாக ஓடிய சம்பவம் போன்ற ஹதீஸ்கள் நெருடலானவை என்ற ஆய்வுப் பார்வையை சங்கரன்பந்தலில் தவ்ஹீது சிந்தனை துளிர்விடும் காலத்திலேயே துவக்கிவிட்டோம். தீன் விளக்கப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் மாதாந்திரக் கூட்டத்திற்கு வந்த ஆலிம்களிடம் இதை அலச ஆரம்பித்தோம்.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், சவூதி சார்பு சிந்தனை என்ற கட்டுப்பாட்டில் நாம் நிற்கவில்லை. பொருளாதார ரீதியாக சவூதி சம்பளம் வாங்குகின்ற மதனிகளைப் போன்று நில புல வசதிகள் அப்போதும் இப்போதும் நம்மிடம் கிடையாது. அப்போது அதள பாதாளத்தில் கிடந்த நேரம். அரபு நாட்டிலிருந்து சம்பளம் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் கைகழுவிவிட்டோம். காரணம், சுய மரியாதையை இழக்க வேண்டிய நிலை வந்து விடும் என்பது ஒருபுறமிருக்க சுய சிந்தனையையும் இழக்க நேரிடும்; சவூதி அரேபியாவுக்கு அறிவை அடகு வைக்க வேண்டிய அவல நிலை ஏற்படும் என்பதற்காகத் தான்.
பொருளாதார ரீதியிலான கிடிக்குப்பிடிகள், நிதி அடிப்படையிலான நெருக்கடிகள் ஏதுமின்றி சுயமாகச் சிந்தித்தோம். அதன் வெளிப்பாடு தான் அந்நிய தாக்கம் இல்லாமல் சுதந்திரமாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னோம்.
ஏகத்துவ சிந்தனையில் இருக்கின்றோம் என்று சொல்கின்ற மதனிகள், சவூதி சம்பளத்தைச் சார்ந்து நிற்பவர்கள் குர்ஆன் ஹதீசுக்கு அடுத்தபடியாக எடுத்து வைக்கும் ஆதாரம் சவூதி தான்.
சவூதி ஆலிம்கள் அப்படிச் சொல்லவில்லை, சவூதியில் இப்படி நடைமுறை இல்லை என்று வெளிப்படையாகவே சொல்வதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களை நோக்கி நாம் எழுப்புகின்ற கேள்வி, இரவுத் தொழுகை 11 அல்லது 13 என்று தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருகின்றது. அதை இதுவரைக்கும் சவூதி செயல்படுத்தாதது ஏன்?
அடுத்து, கப்ருகளை உடைக்க வேண்டும் என்று தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தும் அவர்களது கப்ரின் மேல் கம்பீரமாக நிற்கின்ற குப்பா என்ற குவிமாடம் உடைக்கப்படாதது ஏன்?
இரவுத் தொழுகை விஷயத்தில் அப்துல்லாஹ் பின் பாஸ் போன்ற சவூதி அறிஞர்கள் 11 அல்லது 13 ரக்அத் தொழுவது தான் சிறந்தது என்று சொன்னாலும் 20 ரக்அத் நிலைபாட்டை ஸஹாபாக்களைக் காரணம் காட்டி ஆதரிக்கின்றார்கள். எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்ற ஹதீசுக்கு மாற்றமாக இந்த 20 ரக்அத் இரவுத் தொழுகை அமைந்திருக்கின்றது. இதற்கு சவூதி சார்புச் சிந்தனை கொண்ட ஆலிம்கள் ஒருபோதும் சரியான பதிலைத் தரமுடியாது.
சவூதி அறிஞர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் கப்ரின் மீது எழுப்பப்பட்டுள்ள குவிமாடத்தைச் சரிகாணவில்லை, அதை நியாயப்படுத்தவில்லை என்பதை நாம் பாராட்டுகின்றோம்.
சவூதி அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களிடம், “மதீனாவில் நபி (ஸல்) அவர்களது கப்ரின் மீதுள்ள குப்பா ஏன் நீக்கப்படாமல் இருக்கின்றது?” என்று கேட்கப்பட்ட போது, “ஸஊது குடும்பத்தினர் குழப்பத்திற்குப் பயந்து அதை இடிக்காமல் விட்டு விட்டனர்” என்று தனது ஃபத்வாவில் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 1330)
இந்த ஹதீசுக்கு நேர்மாற்றமான ஒரு நிலைப்பாடு, இன்னும் பல ஹதீஸ்களில் சாபத்துடன் சேர்ந்து வந்திருக்கின்ற தடை மஸ்ஜிதுந்நபவியில் தொடர்கின்றதே! சாக்குகள் சொல்லலாம்! சமாதானங்கள் சொல்லலாம்! ஆனால் ஹதீசுடன் நேராக முரண்படுகின்றதே?
இப்போது சவூதி சார்புச் சிந்தனையாளர்கள் இதையும் நியாயப்படுத்திப் பேசுவார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அந்த நெருக்கடி இல்லை; நிர்ப்பந்தம் ஏதுமில்லை.
சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான நிலைபாட்டைச் சொல்லும் போது சவூதி சார்பற்ற சிந்தனையாளர்கள் இவ்விஷயத்தில் சுயமாகச் சிந்திப்பார்கள்.
சவூதி ஆலிம்களிடம் சூனியம் தொடர்பான நமது நிலைபாட்டை நாம் நேரடியாகத் தெரிவித்தால் அவர்கள் கூட குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சிந்தித்து அதை ஏற்றுக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சவூதி ஆலிம்களைச் சந்திக்கும் வாய்ப்பும் சந்திப்புகளும் நமக்குக் கிடையாது.
ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நீங்கள் கஃபாவின் மீது சத்தியமாக எனக் கூறுகிறீர்கள். இதன் மூலம் இணை வைக்கிறீர்கள்‘ என்று கூறினார். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் “கஃபாவின் இறைவன் மீது ஆணையாக‘ என்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ஹுதைலா (ரலி), நூல்: நஸயீ 3713
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர் ஒருவர் சொன்ன நியாயத்தை ஏற்று, தவறை உணர்ந்து மாற்று உத்தரவைப் போட்டதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.
என்னிடம் யூதப்பெண் ஒருவர் “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக் குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் “யூதர்கள்தாம் (சவக் குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்” என்றார்கள்.
சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “நீ அறிவாயா? சவக் குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக் குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(முஸ்லிம்: 1025)
ஆரம்பத்தில் மறுத்த ரசூல் (ஸல்) அவர்கள், பின்னர் வஹீ அருளப்பட்டு, கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடும்படி கட்டளையிடுகின்றார்கள். இந்த அடிப்படையில் சூனியம் தொடர்பான நியாயமான வாதங்களை ஏற்பவர்கள் சவூதியில் இருக்கலாம்.
நம்முடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால் அவர்களிடம் எடுத்து வைக்கலாம். ஏற்றால் சரி! ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்போதும் போல் ஜமாஅத் பணி தொடரும்.
ஆனால் சவூதி சார்பு சிந்தனையாளர்களிடம், இங்குள்ள மதனிகளிடம் உண்மையை ஏற்றுக் கொள்ளும் இந்தத் தன்மையை ஒருபோதும் பார்க்க இயலாது. அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.
“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:142) ➚
யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். (அல்குர்ஆன்: 33:37) ➚
மக்களைப் பயப்படாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் என்று இந்த வசனங்களில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.
அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன். (அல்குர்ஆன்: 33:39) ➚
இந்த வசனத்தில் தூதுச் செய்தியைச் சமர்ப்பிப்பதில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சக் கூடாது என்று கட்டளையிடுகின்றான்.
இந்த ஜமாஅத் இறைச்செய்தியை எடுத்துச் சொல்வதில் யாருக்கும் அஞ்சாது. எனவே தான் புகாரியில் பலவீனமான ஹதீஸா? என்று பூதாகரமாகப் பார்ப்பவர்களைக் கண்டு பயப்படவில்லை. இது விஷயத்தில் அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய வஹீயை மட்டுமே இந்த ஜமாஅத் பின்பற்றுகின்றது. அல்லாஹ்வைத் தவிர எந்த சக்திக்கும் அஞ்சாது என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.