15) அற்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை
இன்னொரு காரணத்தினாலும் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு இருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.
ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருந்தான்?
இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.
எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தூதராக மனிதரையா அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவதுதான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.
“நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று கூறினர்.
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
“நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!”
“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.
“இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
“இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?” என்றனர்.
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
“மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும்” என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.
மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.
மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.
இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாகத் திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது.
தம்மை இறைத்தூதர்கள் என்று நிரூபிப்பதற்காக எல்லாதூதர்களுக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அந்த அற்புதங்களை வைத்துத் தான் அவர்கள் தூதர்கள் என்று நம்பப்பட்டனர்.
(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம்.
உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.
அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோதுமறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன்வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
“உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ”ஆம்” என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம்.
இறைத்தூதர்கள் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும் அற்புதம் வழங்கப்படாமல் எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் இவ்வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம்தான் ஒரு இறைத்தூதர் தன்னை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் அனுப்பப்படுகிறார்..
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத்தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.
இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
“நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத்தூதர் என்று நம்பினோம்; இன்று இவரது எதிரிகள் இவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆற்றல் மிக்கவர்கள்” என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
இவர் செய்தது சூனியக்காரன் செய்ததை விட சாதாரணமானதாக உள்ளதால் இவர் இறைத்தூதராக இருக்க முடியாது என்று அன்றைய மக்கள் சொல்லி இருப்பார்கள்.
“இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்’ என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
“எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத்தூதரை வீழ்த்தியதாகக் கூறூவது கட்டுக்கதை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இறைத்தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு மேலும் ஆதாரங்கள் உள்ளன.
மறைவான விஷயங்களை அல்லாஹ் சொல்லிவிட்டால் அதனை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மலக்குகள், வனவர்கள், ஜின்கள், ஷைத்தான்கள், சொர்க்கம், நரகம் மீண்டும் உயிர்ப்பித்தல் என அல்லாஹ் பல விஷயங்களைக் கூறுகின்றான்.
இதனை சோதனைக்கு உட்படுத்தாமல் அனைத்து முஸ்லிம்களும் நம்புகின்றோம். ஏனென்றால் இது சோதித்து அறியும் விஷயம் அல்ல. அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக நம்புகின்றோம்.
ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படும் சில விஷயங்களும் உள்ளன. அவற்றை சோதித்துப் பார்த்து அது உண்மையா? பொய்யா என்று நம்ப வேண்டும். குருட்டுத்தனமாக நம்பக் கூடாது.
உதாரணமாக வழுக்கையான ஒருவனுக்கு இந்த எண்ணையைத் தேய்த்தால் முடி வளர்ந்துவிடும் என்று சொன்னால் இதனை சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நாம் நம்ப வேண்டும்.
இணை கற்பித்தல் என்ற பிரச்சனை வரும்போது அதைச் சோதித்துப் பார்த்துத் தான் அறிய வேண்டும்.
சூனியக்காரனுக்கு சக்தி இருப்பதாகச் சொன்னால் இப்போதே இதனை சோதனைக்கு உட்படுத்தி பார்க்க முடியும். ஏனெனில் இணைவைத்தலுக்கு எதிராக அல்லாஹ் இந்த வழிமுறையைத் தான் நமக்குக் கற்றுத் தருகிறான்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?” என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்லாஹ்வைப் போல் ஒருவனுக்கு சக்தி உண்டா என்ற பிரச்சனை வந்தால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது தான் அல்லாஹ் கற்றுத் தரும் வழிமுறையாகும்.
சூனியக்காரனுக்கு ஆற்றல் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு என்று கேட்பதும் அவ்வாறு நிரூபிக்க இயலவில்லை என்று தெரியும்போது அது பொய் என்று அறிந்து கொள்வதும் இஸ்லாம் காட்டும் வழிமுறையாகும்.
சூனியம் வைக்கும் ஒருவனைக் காட்டுங்கள். நாங்கள் சொல்வதை அவன் செய்யட்டும் அல்லது அவன் தனக்கு என்ன சக்தி இருப்பதாகச் சொல்கின்றானோ அதனைச் செய்து காட்டட்டும் என்று கேட்டால் எவனும் முன்வருவதில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்.
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 7:191) ➚- 195
சிலைகளுக்கு கைகால்களை அமைத்து அந்தக் கைகளால் அவை மனிதனின் தேவைகளை நிறைவேற்றும் என்று சொல்கிறார்கள். இது எங்கள் நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள்.
இதை அல்லாஹ் ஏற்கவில்லை. அந்தக் கைகளால் எதையாவது பிடித்துக் காட்டட்டும். அந்தக் கால்களால் நடந்து காட்டட்டும் என்று கூறி இணைவைப்புக்கு எதிராக நாம் எடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.
சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்
இப்படியாக நாம் வாதம் வைத்தால் இவர்கள் எல்லாவற்றிலும் தர்க்கம் செய்து அறிவுப்பூர்வமாக பேசுகின்றார்கள் என்று வெட்கமில்லாமல் கூறுவார்கள்.
சூனியத்தை நம்புபவர்கள் அறிவு கெட்டவர்களாக இருந்து கொண்டு அறிவுப்பூர்வமாக பேசுகின்றவர்களை கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.
இஸ்லாத்தில் தர்க்கம் செய்து அறிவார்ந்த் முறையில் தான் பேச வேண்டும்.
இதோ ஹூது நபி விட்ட அறைகூவலைப் பாருங்கள்.
“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்” என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). “நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்: 11:54) ➚, 55
ஹூது நபி சொன்னது போல் நாங்கள் சொல்கிறோம். சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை. அப்படி இருந்தால் எனக்குச் செய்து காட்டு என்று அறைகூவல் விடுக்கிறோம்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
சிலைகளுக்கு ஆற்றல் உண்டு என்று சொன்னால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்க வேண்டும் அல்லாஹ் எவ்வளவு அழகாக மேற்கண்ட வசனங்களில் கற்றுத்தருகிறான் என்று சிந்தியுங்கள்.
இணைகற்பித்தல் என்ற பிரச்சனை வந்தால் அதற்கான தீர்வு அதை நிரூபித்துக் காட்டச் சொல்வது தான். சூனியமும் இணை கற்பித்தல் என்ற என்ற நிலையில் இருப்பதால் அதையும் சோதனைக்கு உட்படுத்துவது தான் சரியான வழிமுறை.
முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?
முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.
சூனியத்தின் மூலம் நாங்கள் எதையும் செய்வோம் எனக் கூறும் அனைவருக்கும் அனைத்து மதத்தவர்களுக்கும் நான் ஒரு அறைகூவல் விடுகிறேன்.
ஜைனுல் ஆபிதீனாகிய எனக்கு அவர்கள் சூனியம் செய்து காட்டட்டும். அவர்கள் கேட்கும் காலடி மண், போட்டு இருக்கும் சட்டை, தலைமுடி இன்னும் அவர்கள் எதை எல்லாம் கேட்கிறார்களோ அவை அனைத்தையும் தருகிறேன். எனக்கு அவர்கள் சூனியம் செய்து காட்டட்டும்.
என்னுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த நாளில் எந்த நேரத்தில் எனக்கு சூனியம் செய்யப் போகிறார்கள் என்பதை விளம்பரப்படுத்தட்டும். நாமும் அதை விளம்பரப்படுத்துகிறோம்.
சூனியத்தின் மூலம் என்னை சாகடிக்கப் போகிறார்களா?
அல்லது என்னை மனநோயாளியாக ஆக்கப் போகிறார்களா?
அல்லது எனது கைகால்களை முடக்கப் போகிறார்களா?
என்பதையும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடட்டும். அதையும் மக்களிடம் நாம் விளம்பரம் செய்வோம்.
அவர்கள் குறிப்பிடும் நாளில் குறிப்பிடும் நேரத்தில் குறிப்பிடும் இடத்தில் மேடை போட்டு நான் அமர்ந்து கொள்கிறேன். மக்களில் ஒரு பெருங்கூட்டம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கட்டும். அவர்கள் எனக்குச் செய்வதாக சொன்ன சூனியத்தைச் செய்து எனக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் நான் ஐம்பது லட்சம் ரூபாய் சன்மானம் தரத் தயார்.
எந்த மதத்தைச் சேர்ந்த சூனியக்காரர்களும் எனக்குச் செய்து இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். தொகை போதாது என்றால் இதைவிடவும் அதிகமாகக் கொடுக்க நான் தயார் என்பதை பகிரங்க அறைகூவலாக விடுக்கிறேன். இதுவே சூனியம் பொய் என்பதை நிரூபித்துக்காட்டும். இன்ஷா அல்லாஹ்
சூனியக்காரனின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போடுவதால் தங்கள் பிழைப்பைத் தொடர்வதற்கு இடையூறாக இருக்கும் எனக்கு சூனியம் செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
அப்படி சூனியம் செய்ய முன்வருபவனுக்கு தவ்ஹீத் ஜமாஅத்காரர்களால் எந்த அச்சுறுத்தலும் வராது என்பதற்கு நான் உத்தரவாதமும் தருகிறேன்.