அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும்.

இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர்.

இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

5886حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فُلَانًا رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், “அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரைரை வெளியேற்றினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).

நூல் : புகாரி (5886)

 

இது போன்று தீய நடத்தை கொண்ட அரவாணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) “அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி).

நூல் : புகாரி (4324)

ஆண்கள் எவ்வாறு பெண்களுடைய சபைக்கு செல்லக் கூடாதோ அதைப் போன்று அலிகளும் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.