அமானிதம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் அமானிதத்தோடு தான் வாழ்கின்றனர். ஆனால், அதனை பெரும்பாலோனோர் மதிப்பதே இல்லை. அதனை பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும். அமானிதத்தை எவ்வாறு பேண வேண்டும் என்று பின் வரும் ஹதீஸ்களில் காண்போம்.

அமானிதம் பாழ்படும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன்(ரலி),(புகாரி: 2651)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்” என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, ”அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),(அபூதாவூத்: 3779)

நிலத்தை வாங்கியதில் நேர்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீல்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ”என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார்.

நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ”நிலத்தை அதிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ”உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?” என்று கேட்டார்.

அவ்விருவரில் ஒருவர், ”எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ”எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ”அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்” எனத் தீர்ப்பளித்தார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 3472)

நம்பகத்தன்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான் பார்த்து விட்டேன்.
இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும்.

அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முதல் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) கால் தீக்கங்கை உருட்டி விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.

நம்பிக்கையின்மை

பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். ”இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார்” என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி ”அவருடைய அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? அவருடைய வீரம் தான் என்ன?” என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),(புகாரி: 6497)

சிலர் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற அமானிதங்களை முறையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பவிஷயங்களிலோ அல்லது வியாபார விஷயங்களிலோ நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள்.

நபிகளார் மறுத்த ஜனாஸா தொழுகை

கடனாக வாங்கும் தொகை, ஒரு அமானிதம். கடன் வாங்கி நிறைவேற்றாமல் மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை. அந்தக் கடனுக்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்ற பின்பு தான் தொழ வைத்தார்கள். இந்த அளவிற்கு அமானிதத்தை ஒப்படைக்காமல் இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ”இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ”இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி)அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு!” என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா (ரலி),(புகாரி: 2295)

அமானிதத்தை பேணியவர் சுவர்க்கம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சவ்பான் (ரலி),(இப்னு மாஜா: 2403)

என்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். ”அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒருவரை வழியனுப்பும் போது) உங்களுடைய மார்க்கத்தையும், அமானிதத்தையும் இறுதி செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: சாம் பின் அப்தில்லாஹ்,(அஹ்மத்: 4295)

அழிவுகளுக்குக் காரணம்

ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். ”மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், ”நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை” என்றனர். வேறு சிலர், ”அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, ”மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள்.

உடனே (கேட்டவர்) ”அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்” என்றார். அப்போது ”அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்கள். அதற்கவர், ”அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” எனக் கேட்டார். அதற்கு, ”எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 59)

இறைநம்பிக்கையும், மோசடியும்

திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அமானிதங்களைப் பேண வேண்டும் என வயுறுத்திக் கூறுகிறான். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால், நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! (அல்குர்ஆன்: 2:283)➚

ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக் காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்: 3:75)➚

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள். (அல்குர்ஆன்: 4:2)➚

அமானிதங்களை அதற்கு உரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:58)➚

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன்: 8:28)➚

தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். (அல்குர்ஆன்: 23:8)➚

நயவஞ்சகனின் அடையாளம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 33) ,(முஸ்லிம்: 89)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தங்களுடைய உயிரிலும், பொருட்களிலும் யாருடைய (தீமையை விட்டும்) பாதுகாப்பு அடைந்து உள்ளார்களோ அவனே இறை நம்பிக்கையாளன் ஆவான். பாவமான காரியங்களையும் குற்றங்களையும் எவர் வெறுத்து ஒதுக்குகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி),(இப்னு மாஜா: 3924)

ஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்காகக் குறிப்பிட்ட தொகையை தன்னிடம் தந்தால் வாங்கிய விலையை விட அதிகமாகக் கூறி அவரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பின்வரும் செய்தியை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தனக்காக ஒரு ஆட்டை வாங்குவதற்காக உர்வா (ரலி) அவர்களிடம் ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்று விட்டு, ஒரு தீனாரையும் ஒரு ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள் வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார்.
அறிவிப்பவர்: ஷபீப் பின் கர்கதா,(புகாரி: 3642)

இறைத்தூதரின் பண்புகள்

(ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு நான் அளித்த பதிலைக் கேட்டு விட்டு அவர் கூறியதாவது:) ”உம்மிடம் ‘முஹம்மத் எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?’ என்று நான் கேட்டேன். அதற்கு நீர் ‘அவர் தொழுகையைத் தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைபிடிக்கும் படியும், ஒப்பந்தத்தையும் வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளை இடுகிறார்’ என்று சொன்னீர். இது தான் ஒரு இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூசுஃப்யான் (ரலி),(புகாரி: 2681)

நபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதைப் போல் எவரும் பேண மாட்டார்கள் என்பது அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு, தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரைப் பொய்யராகச் சித்தரித்துக் காட்டுவதற்காக, ‘மோசடி செய்து விடுவார்’ என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட சொல்லாமல் மோசடி செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல முடிந்தது.

அல்லாஹ்விற்கு அதிகம் அஞ்சுபவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தன. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்குக் கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தன.
அப்போது நான் (நபியவர்களிடம்) ”தாங்கள் அந்த யூதரிடம் ஆளனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை தருவதாகக் கூறி) இரண்டு துணிகளை வாங்கிக் கொள்ளலாமே!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்)னார்கள்.

அதற்கு அவன், ”முஹம்மத் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத் தான் அவர் நாடுகிறார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நான் அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப்பவன் என்றும் அவர் அறிந்து கொண்டு பொய் சொல்கிறார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(திர்மிதீ: 1134)

ஜகாத் பொருளின் மேலிருந்த அமானிதப்பற்று

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தான் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ”என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா (ரலி),(புகாரி: 851)

அமானிதத்தைப் பேணுவது தர்மம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி),(அஹ்மத்: 18836)

அலட்சியமாக்கப்படும் அமானிதங்கள்

மறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன்: 17:36)➚

ரகசியமாகச் சொல்லப்பட்ட செய்தியும் அமானிதமே!

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், ”எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை” என்று கூறி விட்டார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 3623)

நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வருவதற்குத் தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், ”தாமதமானதற்கான காரணம் என்ன?” என்று என் தாயார் வினவினார். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்” என்று பதிலளித்தேன். ”அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். ”அது ரகசியமாகும்” என்றேன். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே!” என்று கூறினார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(முஸ்லிம்: 4533)

கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் இல்லற வாழ்க்கை அமானிதம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் தன் மனைவியுடன் இணைந்து, அவளும் அவனுடன் இணைந்து விட்ட பின்பு அவளுடைய இரகசியத்தை (கணவன்) பரப்புவது மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய அமானிதமாகும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),(முஸ்லிம்: 2832)

பொறுப்புகளும் அமானிதம்

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி புரியாவிட்டால் இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ”அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, ”அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),(முஸ்லிம்: 3729)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
(அஹ்மத்: 22030)

மார்க்க நெறிமுறைகளும் அமானிதம்

‘ஜுஹைனா’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ”என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர் தானே நிறைவேற்றுவாய்! அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 1852, 6699)

வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 33:72)➚

நம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(அபூதாவூத்: 2936)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, ‘இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),(புகாரி: 6177)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) ”உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது” என்று கூறினார். அதற்கு அவர்கள், ”மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள்..
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 164)

திவாலாகிப் போனவன் யார் ?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ”முஃப்ஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ”யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்ஸ் (திவாலானவன்)” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”என்னுடைய சமுதாயத்தில் முஃப்ஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான்.

(உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய தீமைகளிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 4678)

அமானிதத்தைப் பேணாமல் தடுக்கப்பட்ட முறையில் உண்பவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு இறைவனிடம் சற்றும் மதிப்பிருக்காது. அந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் அசுத்தமானவைகளாகத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன்: 2:168)➚

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
(அல்குர்ஆன்: 2:172)➚

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன்: 5:88)➚

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!
(அல்குர்ஆன்: 16:114)➚

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு, தூதர்களே! நல்ல பொருள்களிருந்தே நீங்கள் உண்ணுங்கள். நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன்: 23:51)➚

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் இருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன்: 2:172)➚

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். ”அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, ”எனது இறைவனே! எனது இறைவனே!” என்று அழைக்கின்றான்.

அவனது ஆடை, அவனது உணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 1844)

பாலத்தைக் கடப்பதில் சிரமம்

அமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும் போது அவர்களைக் கடக்க விடாமல் இந்த அமானிதம் தடுக்கும்.

(மறுமையில்) மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும், இரத்த பந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம், இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 329)

எனவே, அமானிதம் என்று சொல்லக்கூடிய அனைத்து காரியங்களிலும்நபிகளார் காட்டி தந்த முறைப்படி நடக்க வேண்டும். மேற்கூறப்பட்ட அணைத்து விஷயங்களையும், ஆராய்ந்து அதன் படி நடக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.