அனைத்துப் பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா?
தொழக் கூடாத பள்ளிகள் என்று குர்ஆனில் கூறப்பட்டதைக் காரணமாக வைத்து அனைத்துப் பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா?
பதில் :
காரணத்தை பார்த்து முடிவு செய்யவும்
குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏகஇறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒருபோதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
மேற்கண்ட வசனத்தில் இறைவனை மறுத்தல், பிறருக்குத் தீங்கிழைத்தல், முஸ்லிம்களிடையே பிரிவை ஏற்படுத்துவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிகளுக்குப் போகக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணைவைப்பு என்ற பெரும்பாவம் ஒரு பள்ளியில் அரங்கேறினால் இந்த ஒரு காரணம் இருந்தாலே அது பள்ளி என்ற அந்தஸ்தை இழந்து விடும். இந்த நான்கு குற்றங்களும் நடத்தப்படாத பள்ளிகள் எத்தனையோ தமிழகத்தில் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட பள்ளிகள் அல்ல. இவற்றுக்குச் சென்று தொழுதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.