அந்நாளில் அர்ஷின் நிழல் யாருக்கு?

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

அந்நாளில் சுட்டெரிக்கும் சூரியனை அல்லாஹ் நமக்கு அருகாமையில் வைத்துவிடுவான் அப்போது எந்த நிழலுமே இருக்காது மனிதன் தப்பிக்க அவனுக்கு இருக்கும் ஒரே போக்கிடம் அர்ஷ் எனும் அல்லாஹ்வின் சிம்மாசனத்தின் நிழல்தான். எனவே அந்த மறுமை நாளில் அர்ஷின் நிழலைப் பெறும் தகுதி யாருக்கு உள்ளது என்ற பட்டியலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

سَمِعْتُ رسولَ الله ﷺ يَقُولُ:
تُدْنَى الشَّمْسُ يَومَ القِيَامَةِ مِنَ الخَلْقِ حتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيل، قَالَ سُلَيمُ بْنُ عَامرٍ الرَّاوي عَن المِقْدَاد: فَوَاللَّهِ مَا أَدْرِي مَا يَعْني بِالمِيلِ، أَمَسَافَةَ الأَرضِ أَمِ الميل الَّذي تُكْتَحَلُ بِهِ العَيْنُ؟ فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهمْ في العَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلى رُكْبَتَيْهِ، ومِنْهُمْ مَنْ يَكون إِلى حِقْوَيْهِ، ومِنْهُمْ مَنْ يُلْجِمُهُ العَرَقُ إِلجامًا، قال: وَأَشَارَ رَسُولُ اللَّه ﷺ إِلى فِيه. رواه مسلم.

“மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும். சூரியனுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும். (அதன் வெப்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ, அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை இடுப்பு வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை வாய் வரை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது வாயின் பக்கம் கையால் சமிக்கை செய்து காட்டி கூறுவார்கள்”.

அறிவிப்பாளர்: மிக்தாத் (ரலி)

(முஸ்லிம்: 5497)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

“” سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ. وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا، حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ

அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1.நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 660, 1423, 6806)

 

நீதி மிக்க ஆட்சியாளர்.

ஆட்சியாளராக இருந்தாலும் சரி, நீதிபதியாக இருந்தாலும் சரி மக்களுக்கு பொறுப்பாளர் என்ற முறையில் பாரபட்சம் பார்க்காமல் நீதியை நிலைநாட்ட வேண்டும் அப்படி நிலைநாட்டினால் அர்ஷின் நிழலைப்பொறலாம். இதை வலியுறுத்தும் வகையில் திருக்குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள்!
(வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:135)

 

இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்

இளமைப் பருவத்தை சரியான முறையில் இறைவழிபாட்டில் கழிக்கவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. நம்பிக்கை எனும் ஈமான் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தொழுகை மற்றும் இதற வணக்க வழிபாடுகளும் முக்கியம் என்பதை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். எனவே அப்படிபட்ட இளைஞர்கள் அர்ஷின் நிழலைப் பெறுவார்கள்.

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.
(அல்குர்ஆன்: 4:57)

 

பள்ளிவாசல்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் நேரம் கிடைத்தல் எப்போதாவது பள்ளிக்கு செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள் அதுவும் மாதத்திற்கு ஒரு முறையோ சிலர் வருடத்திற்கு ஒரு முறையோ ஆனால் அப்படி இருக்காமல் அதிகம் பள்ளிவாசலோடு தொடர்பு வைத்தால் நாம் அர்ஷின் நிழலைப் பெறலாம்.

مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ، أَوْ رَاحَ، أَعَدَّ اللهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلًا، كُلَّمَا غَدَا، أَوْ رَاحَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது
விருந்தை)த் தயார் செய்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 1187)

தொழுகைக்காக ஒவ்வொரு முறை நாம் பள்ளியை நோக்கிச் செல்லும் போதும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைத் தயார் செய்கின்றான். சுப்ஹானல்லாஹ்! தொழுகை நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களையெல்லாம் பெற்றுத் தருகிறது.

 

அல்லாஹ்வுக்காகவே நட்பு கொள்ளவேண்டும்.

நட்பு என்பது மிக அவசியமான ஒன்று ஆனால் அந்த நட்பு மார்க்க வரம்புகளை மீறாமலும் இறைப்பொறுத்தத்தை பெறுவதற்காகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் பிரிந்துவிட வேண்டும். அத்தகைய நண்பர்களுக்கு அல்லாஹுவின் அழைப்பு மறுமையில் உண்டு.

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلاَلِى الْيَوْمَ أُظِلُّهُمْ فِى ظِلِّى يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 5015, 4655)

 

தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்.

அல்லாஹ்வை நினைவு கூறாதவர் முஸ்லிமாகவே இருக்க முடியாது ஆனால் அவனை தனிமையில் நினைவு கூறவேண்டும் அத்தகையோரின் சிறப்புகள் பற்றி திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ

தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.
(அல்குர்ஆன்: 35:18)

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏

இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன்: 36:11)

 

விபச்சாரத்திற்கு நெருங்காதவர்கள்

தவறான செயலுக்கு ஒரு பெண் அழைத்தால் அதில் ஈடுபடாமல் அல்லாஹ்விற்கு அஞ்சி விலகியிருந்தால் அா்ஷின் நிழலைப் பெறலாம். அப்பேற்பட்ட பாரதூரமான பாவத்திற்கு அருகில் கூட செல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌

வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!
(அல்குர்ஆன்: 6:151)

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً  ؕ وَسَآءَ سَبِيْلًا‏

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 17:32)

 

தர்மம் செய்தவர்

அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த எத்தனையோ நற்காரியங்களுக்கு கணக்கின்றி எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றான். அது போன்று தர்மத்திற்கும் எண்ணற்ற பலன்கள் உண்டு. இப்பலனை அறியாத மக்கள் தர்மம் செய்வதை விட்டும் தள்ளிச் சென்று நிற்கின்றனர். அந்த தர்மத்தைக்கூட சற்று இரகசியமாக விளம்பரம் பெருமை கலக்காமல் செய்தால் அர்ஷின் நிழலைப் பெறலாம்.

”தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். முத­ல் உமது வீட்டாரிடமிருந்து ஆரம்பம் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1426)

தேவைக்கு மிஞ்சியதில் தர்மம் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ள இந்த ஹதீஸை இன்றைய மக்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிக மோசமான நிலையே நமக்குக் கிடைக்கின்றது.

கோடீஸ்வரனாகவும் பல இலட்சங்களுக்குச் சொந்தக்காரனாகவும் இருப்பவர்கள் கூட தன் செல்வத்தை வறுமையில் வாடுபவர்களுக்குக் கொடுக்காமல் ஆடம்பரச் செலவு செய்கின்றனர். இப்படியா இஸ்லாம் கூறுகின்றது? பசியில் இருப்பவனைத் தேடிச் சென்று உதவி செய்யச் சொல்கின்றது.

”ஆதமின் மகனே! நீ மற்றவர்களுக்காகச் செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 5352)

 

கடனை தள்ளுபடி செய்தவர்
عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ أَنَّ أَبَا قَتَادَةَ كَانَ لَهُ عَلَى رَجُلٍ دَيْنٌ ، وَكَانَ يَأْتِيهِ يَتَقَاضَاهُ فَيَخْتَبِئُ مِنْهُ ، فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَخَرَجَ صَبِيٌّ فَسَأَلَهُ عَنْهُ فَقَالَ : نَعَمْ . هُوَ فِي الْبَيْتِ يَأْكُلُ خَزِيرَةً فَنَادَاهُ يَا فُلاَنُ ، اخْرُجْ فَقَدْ أُخْبِرْتُ أَنَّكَ هَاهُنَا فَخَرَجَ إِلَيْهِ فَقَالَ : مَا يُغَيِّبُكَ عَنِّي ؟ قَالَ : إِنِّي مُعْسِرٌ وَلَيْسَ عِنْدِي . قَالَ : آللَّهِ إِنَّكَ مُعْسِرٌ ؟ قَالَ : نَعَمْ . فَبَكَى أَبُو قَتَادَةَ ثُمَّ قَالَ
: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ نَفَّسَ عَنْ غَرِيمِهِ أَوْ مَحَا عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ

அபூகதாதா (ரலி)யிடம் ஒருவர் கடன் பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் செல்லும் போது அவர் ஒளிந்து கொள்வார். ஒரு நாள் (அவ்வாறு) வந்த போது சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்த போது “ஆம் வீட்டில் கஸீரா (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்” என்று சொன்னார். உடனே அபூகதாதா (ரலி) “இன்னாரே! வெளியே வந்து விடு. நீ அங்கு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்,
அவர் வெளியே வந்ததும் “நீ என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?” என்று கேட்டார். “என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்ட அபூகதாதா (ரலி) அழுதார்கள். பிறகு “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது பின் அல்குரளி
(அஹ்மத்: 22623)

கடன் பட்டவர் தான் அழ வேண்டும். ஆனால் மேற்கண்ட இந்த ஹதீஸில் கடன் கொடுத்தவரான அபூகதாதா (ரலி) அழுகின்றார்கள். இதை எங்கேனும் நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கிய தோழர்களின் கூட்டத்தில் உள்ள அபூகதாதா (ரலி) அவர்கள் கடன்பட்டவர் படும் கஷ்டத்தைக் கண்டு அழுகின்றார். இப்படி இந்தச் சமுதாயம் சஹாபாக்களின் வழியில் ஆக்கம் பெற்றிருக்க வேண்டும்.
இதே கருத்தில் முஸ்லிமிலும் ஹதீஸ் இடம் பெறுகின்றது.
ஹராமிய்யா கிளையைச் சார்ந்த இன்னார் மகன் இன்னாரிடம் எனக்குத் தரவேண்டிய பணப் பற்று உள்ளது. நான் அவருடைய குடும்பத்தாரிடம் சென்று ஸலாம் சொல்லி “அவர் இங்கிருக்கின்றாரா?” என்று கேட்டேன். வீட்டினர் “இல்லை” என்று பதிலளித்தனர்.

அப்போது வீட்டிலிருந்து விடலைப் பையன் ஒருவன் வெளியே என்னை நோக்கி வந்தான். நான் அவனிடம், “உன்னுடைய தந்தை எங்கிருக்கின்றார்?” என்று கேட்டேன். “உங்களுடைய சப்தம் கேட்டதும் என் தாயாரின் படுக்கை அறை கட்டிலுக்குச் சென்று விட்டார்” என்று பதில் சொன்னான். உடனே நான் (அவரை நோக்கி) “எங்கிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். வெளியே என்னிடம் வந்து விடு” என்று கூறினேன். உடனே அவர் வந்தார்.
“நீ என்னை விட்டு ஒளிய வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களிடத்தில் பொய் சொல்லவும் வாக்களித்து விட்டு உங்களுக்கு மாறு செய்வதையும் பயந்தேன். (அதனால் தான் ஒளிந்தேன். இந்த விஷயத்தில்) நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழராவீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ கஷ்டப்படுபவனா? என்று நான் கேட்டேன். அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கஷ்டப்படுபவன் தான் என்றார்.

அபுல் யஸார் (ரலி) யிடமிருந்து இதை அறிவிக்கும் உப்பாதா பின் ஸாமித் (ரலி) யின் மகன் தொடர்ந்து கூறுகின்றார்.
அவருடைய கணக்குச் சீட்டைக் கொண்டு வந்து அதைத் தன் கையால் அழித்து விட்டு (கடன்பட்டவரை நோக்கி) திருப்பிக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் எனக்கு (அதை) நிறைவேற்றிவிடு. “(கடன்பட்டு) கஷ்டப்படுபவருக்கு யார் அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலில் நிறுத்தி நிழலிடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லும் போது அவர்களை (தன் கண்களைச் சுட்டிக்காட்டி) என்னுடைய இரு கண்களின் பார்வை பார்த்தது. அவர்கள் சொன்னதை என்னுடைய செவிப்புலன் செவியுற்றது. அதை இந்த மனம் மனனம் செய்தது என்று நான் சான்று கூறுகின்றேன் என்று அபுல் யஸார் (ரலி) கூறினார்கள்.

(முஸ்லிம்: 5736)

எனவே மேலே குறிப்பிட்ட அனைத்து நன்மையான காரியங்களையும் கடைபிடித்து அர்ஷின் நிழழைப் பெறக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக!