அந்த 72 கூட்டத்தினர் யார்? -2

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

எது சுவனப் பாதை?

நானும் என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள் தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை அவர்களின் மரணத்திற்குப் பிறகு இருக்க வில்லை. மாற்றங்கள் ஏற்பட்டன. நபித் தோழர்கள் காலம் என்று அந்த செய்தியில் கூறப்படிருந்தால் அவர்கள் காலத்தில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு ஆளாளுக்கு வெட்டிக் கொண்டு பிரச்சினைகள் ஏற்பட்டது என்கிற போது எப்படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று எண்ணத்தோன்றும். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இடம் தரவில்லை.

இன்று என்ற ஒரு வாசகத்தை அவர்கள் பயன்படுத்தி நானும் என் தோழர்களும் நான் உயிர் வாழும் காலத்தில் எப்படி தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்தோமோ அந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். நபித் தோழர்கள் என்னுடைய மறைவிற்குப் பிறகு மார்க்கம் என்று ஒன்றைச் செய்தாலும் அதை நாம் பின்பற்றிச் செய்தால் நமக்குப் பிரச்சினை ஏற்பட்டு விடும்.
யாரெல்லாம் அந்த ஒரு கூட்டத்தில் இருப்பதற்கு ஆசைப் படுகிறார்களோ அவர்கள் நபியவர்களும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்களும் அன்று எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்தார்களோ அந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் தான் அந்த ஒரு கூட்டத்தினர் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் வாழும் போது நபித் தோழர்கள் நபியவர்களின் அனுமதியோடு செய்தது நாம் இன்று செய்யும் வணக்க வழிபாடுகளில் இருந்ததா? அது அக்காலத்தில் இருந்தது என்றால் அதைக் கடைப்பிடித்தால் அந்த ஒரு கூட்டத்தில் சேருவோம். அக்காலத்தில் அந்த வணக்க வழிபாடுகள் இல்லையென்றால் அது 72 கூட்டத்தில் சேர்ந்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எவையெல்லாம் வணக்க வழிபாடுகளாக காணப்படவில்லையோ அதையெல்லாம் செய்யக் கூடியவர்கள் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை எந்த விதமான ஆராய்ச்சிகளும் இன்றி விளங்கிக் கொள்ள முடியும்.
மக்களுக்கு கூற வேண்டிய செய்தியை உரிய நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் அரபா பெருவெளியில் இறுதிப் பேருரை ஆற்றியது சான்றாகும். நபியவர்கள் மக்களுக்கு தெளிவு படுத்தாமல் சென்று விட்டார்கள் என்று யாராவது சொல்வார்களானால் நிச்சயமாக அதில் ஏதாவது ஒன்றை இருட்டடிப்பு செய்திருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் விளக்காமல் சென்றுள்ளார்கள் என்பதற்குரிய சான்றுகளை அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை வைப்போரிடம் மக்கள் மத்தியில் அதைத் தெளிவுபடுத்துங்கள் என்று அழைப்புவிடுத்தால் புறமுதுகு காட்டி ஒடுவதையும் நான் இன்று பார்த்து வருகிறோம்.
தர்ஹா என்ற ஒரு வழிபாடு இன்று பல நாடுகளில் இருக்கின்றன. இது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது இந்த வழிபாடு இருந்துள்ளதா? அதற்கான ஏதாவது சான்றுகள் உள்ளதா என்று தேடிப்பார்த்தால் அப்படியான எந்த ஒரு சான்றையும் பார்க்க முடியவில்லை அப்படியென்றால் அவர்கள் 72 கூட்டத்தில் சேர்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் கொடி மரம் இருந்ததா? இல்லையென்றால் அதுவும் 72 கூட்டத்தில் சேரும்.
நேர்வழி எது என்று கண்டு பிடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய தெளிவான வார்த்தையின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். நானும் அதை செய்திருக்க வேண்டும் என்னுடைய தோழர்களும் அதை செய்திருக்க வேண்டும் அதுவும் நான் வாழும் காலத்தில் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தான் அந்த சுவனத்திற்குச் செல்லும் கூட்டத்தில் சேறும்.

இன்று முஸ்லீம்கள் மத்தியில் காணப்படும் தரீக்கா, மத்ஹபுகள், பைஅத், மௌலீது கத்தம் பாத்திஹா, சமாதி வழிபாடு, தர்கா, பெரியார்கள் பெயரில் வணக்கம், தயாத்து, தட்டு, இஸ்மு, அஸ்மா என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து விதமான செயல்களையும் செய்யக் கூடியவர்கள் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தில் அடங்குவர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை ஆதரிக்கக்கூடிய ஆலிம்களிடம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததா? அல்லது அவர்களின் மறைவுக்குப் பிறகு தோன்றியதா? என்று கேட்டால் பிற்காலத்தில் தான் தோன்றிது என்று பதில் அளிப்பார்கள். மத்ஹபுகளோ, இமாம்களோ நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு தோன்றியவர்கள் தான்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத ஒன்றைச் செய்பவர்கள் அந்த ஒரு கூட்டத்தில் அடங்க மாட்டார்கள். அதனால் எவன் ஒருவன் தன்னுடைய மார்க்க – வணக்கவழிபாடுகளை அல்லாஹ் சொன்னால் கொண்டு வா நபி (ஸல்) அவர்கள் சொன்னால் கொண்டு வா என்று யாரல்லாம் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த ஒரு கூட்டம். இதன் மூலம் யார் அந்த ஒரு கூட்டத்தினர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி விளங்க முடிகிறது.

ஒவ்வொருவரும் நாங்கள் தான் அந்த ஒரு கூட்டம் என்று சொல்லிக் கொள்வார்கள். அல்லாஹ்வும் இவர்கள் இவ்வாறு கூறுவதை திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.

ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர். (அல்குர்ஆன்: 30:32)

அவர்கள் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு அது சரியென்று தென்படும். இது பற்றி நாம் இங்கு விளக்க வரவில்லை. நாம் இருப்பது சரியா தவறா என்பதைப் பார்க்க வேண்டியதில்லை.
நானும் என்னுடைய தோழர்களும் இன்றைக்கு எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்தான் அந்த ஒரு கூட்டம் என்பதற்கு என்ன விளக்கம்? இதை இக்கூட்டத்திற்கு வெளியே இருந்தோ உள்ளே இருந்தோ சிந்தித்தாலும் நம்மை எதிர்த்துக் கொண்டு சிந்தித்தாலும் இந்த வார்த்தைக்குரியவர்கள் யார்? என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.

எந்தக் கட்டத்திலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் அவர் சொன்னார், இவர் சொன்னார், இந்த அறிஞர் சொன்னார் என்று கூறாமல் இதைச் சொன்னால் பிரச்சினை ஏற்பட்டு விடும் இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள், ஊர் நீக்கம் செய்வார்கள் என்று சொல்வார்கள். எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடாது என்று யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் உறுதியாக நின்று சத்தியத்தைக் கூறுபவர்கள். அவர்கள்தான் அந்த ஒரு கூட்டத்தில் அடங்குவர்.

நமது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் தராவீஹ் என்ற பிரச்சினையை நாம் கூற ஆரம்பித்ததும் இதை எல்லாம் இப்போது சொல்லாதீர்கள். நீங்கள் இதை இப்போது கூறினால் பெரிய கர்பலா நாட்டில் நடக்கும் என்று கூறி சத்தியத்தை மறைக்க சொன்னவர்களும் உள்ளனர்.
நாங்கள் அன்று ஐந்து, பத்துப் பேர்களாக தவ்ஹீதவாதிகள் இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்துக்கள் தொழ வில்லை என்பதை நாம் ஆய்வு செய்து பார்த்து விட்டு யாருக்கும் அஞ்சாமல் சத்தியத்தை போட்டு உடைத்து மக்களுக்கு உண்மையை விளக்கினோம். இன்றைக்கு இருக்கும் மக்களுக்கு இலகுவாகத் தெரியும். இருபது வருடங்களுக்கு முன்னர் கொஞ்சம் நமது சிந்தனைகளைக் கொண்டு சென்று பார்த்தால் அந்த வார்த்தையைக் கூறினால் கபிர் என்று மார்க்கத்தீர்ப்புச் சொல்லக் கூடிய காலத்தில் எவ்வளவு அச்சுறுத்தல் செய்தார்கள். ஆனாலும் நாம் தைரியமாகச் சொன்னோம். அதனால் ஏற்பட்ட எல்ல விளைவுகளையும் தாங்கினோம். தாங்கியதற்குரிய காரணம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததா? இல்லையா? என்ற ஒரு கேள்விதான். இல்லை என்றால் யாருக்கும் பயப்படாமல் சத்தியத்தைச் சொன்னோம் இருந்தாலும் அதை மக்கள் மத்தயில் போட்டு உடைத்தோம்.

தராவீஹ் தொழுகை என்பது ஒரு வணக்கம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தால் எங்களுக்கு கூறுங்கள் நாங்களும் செய்கிறோம் என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் தான் உருவாக்கப்பட்டது என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை இதில் உறுதியாக யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நாம் அவ்வாறு அதில் இல்லையென்று சொன்னால் எக்கூட்டத்தில் இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். நாம் இக்கொள்கையில் இருந்தால் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். இக்கொள்கையில் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததைச் செய்கிறோம். நன்றாகத் தெரிகிறது அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தில் சேர்ந்து விடுவோம்.
அந்த ஒரு கூட்டத்தில் நாம் இருப்பதாக இருந்தால் இவ்வாறுதான் நடக்க வேண்டும். இதை விளங்க வேண்டும் நாம் அனைவரும் மறுமைக்குத்தான் பாடுபடுகிறோம். சுவனத்திற்குச் செல்வதற்குத்தான் இந்த மார்க்கத்தில் இருக்கிறோமா அல்லது நாம் அனைவர்களும் அரசியல் கட்சி நடத்துகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்பக்கம் அதிக மக்கள் இருக்கிறார்கள் யாரிடம் அதிக பணம் இருக்கிறது? யாரிடம் அதிகமான பள்ளிவாசல்கள் இருக்கிறது? யாரிடம் பெரிய பெரிய ஆலிம்கள் இருக்கிறார்கள்? என்பதற்குத்தான் ஒரு மார்க்கத்தில் இருக்கிறோமா அல்லது நமது வழி பாட்டு முறைகள் மூலம் சுவனத்திற்குச் செல்வதற்கு இருக்கிறோமா? சுவனத்திற்குச் செல்வதற்கு இருக்கிறோம் என்றால் அதற்குரிய பாதையைத்தான் சிந்திக்க வேண்டும்.