18) ஃபலக் விளக்கவுரை-4

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

06) முடிச்சுகளில் ஊதும் பெண்கள் ஏன்றால் யார்?

அடுத்ததாக, ஸிஹ்ர் – சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும்.
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:(புகாரி: 2766, 6857)(முஸ்லிம்: 451)

 

முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்-சூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும். ஒன்றிலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றைச் செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியெனில் சூனியத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்றாலே வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இன்று மக்கள் அப்படியில்லை. அதனால்தான் நபியவர்கள் இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக இதனை எச்சரிக்கிறார்கள். இன்னொரு இடத்தில் இரண்டு பாவங்களை மட்டும் குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லும் போது இணைவைத்தலையும் சூனியத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்தி சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 5764)
அப்படியெனில் மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பயங்கரமான குற்றம் என்று சொல்லித் தரப்பட்ட விசயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு மக்களை வழி கெடுக்கின்றனர். அறியாத மக்கள் வயிற்று வலிக்காகவும் காய்ச்சலுக்காகவும் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு மார்க்க அறிஞர்களிடத்தில் வரும்போது அவர்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்லாமல், உனக்கு அவர் சூனியம் வைத்து விட்டார் இவர் சூனியம் வைத்து விட்டார் என்றெல்லாம் இல்லாத சூனியத்தை வைத்து மக்களைப் பயங்காட்டி ஏமாற்றி, அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடுவது, சம்பந்தம் செய்த குடும்பங்களிலும் சண்டையை மூட்டிவிட்டு குடும்பங்களை சூனியத்தின் பெயரால் பிரிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினைகள் நடப்பது என்பது எல்லோரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். இது அதிசயம் ஒன்றுமில்லை. இரண்டு மனிதர்களின் உள்ளங்கள் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது எந்தக் காலத்திலும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி எல்லா விசயத்திலும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் தகப்பனும் பிள்ளையுமாக இருந்தாலும் சரியே. அது போன்று கணவன் மனைவிக்கும் அப்படித்தான். விதிவிலக்கெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி முடிவெடுத்தாலும் ஒருவரின் கருத்து ஒருநேரம் மிகைத்தும் ஒருவரின் கருத்து சிலநேரம் மிகைக்காமலும் இருக்கத்தான் செய்யும் என்கிற இந்த சாதாரண விசயத்தைக்கூட புரிந்து கொள்ளாத சிலர், சூனியத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற இந்த மோசடிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். மனைவி, கணவன் என்னைச் சரியாகக் கவனிக்காமல் இருக்கிறார் என்றும் கணவன் மனைவியைப் பற்றி மனைவி எனக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லுவார்கள். உடனே அந்தப் பெண்ணிடம் உனக்கு மாமியார் வீட்டில் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று இல்லாத சண்டையை மூட்டிவிட்டு பெரியளவுக்கு குடும்பங்களில் பிரிவினையை உண்டுபண்ணி விடுவார்கள். நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பேச்சுக்காக சூனியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்திகள் குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதால் அவைகள் பலவீனமான செய்தி என்று சொல்லி நாம் அந்தச் செய்திகளை மறுக்கிறோம். இருந்தாலும் ஒரு வாதத்திற்காக நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அவர்கள் சொல்லுவதைப் போன்று வைத்துக் கொள்வோம்.

நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை அந்த ஹதீஸில் உள்ளபடி எப்படி அறிந்து கொண்டார்கள். அந்த ஹதீஸில் நபியவர்களின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு மலக்குமார்கள் அமர்ந்து கொண்டு பேசியபோதுதான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றனர். அதன்படி ஆராய்ந்தால், ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி இறைவனால் மலக்குமார்களின் மூலமாகத்தான் அறிவிக்கப்பட்டது என்பதை அறிவுடைய யாரும் ஏற்றுக் கொள்வார்கள். மறுக்க மாட்டார்கள். விசயம் இவ்வாறு இருக்க, இன்று சமுதாயத்தில் மதரஸாக்களில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற போலித்தனமான உலமாக்கள் என்ற பெயரில் இருந்து கொண்டு, வயிற்று வலிக்காக வருகிற நபரிடம் சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?. மலக்கு வந்தல்லவா சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே!. தனக்கு என்ன நடக்கிறது என்பதே நபியவர்களுக்குத் தெரியாமல் குழம்பி இருந்ததாகத்தான் சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகளில் உள்ளது. அந்தச் செய்தி சரியில்லை என்பதுதான் உண்மை.

இருப்பினும் அதைச் சரியென்று வைத்துக் கொண்டு பேசினாலும், அந்தச் செய்திகளில் உள்ள தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஐம்பது நாட்களாக எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்றும் நபியவர்கள் சொன்னதாகவும் அதில் இருக்கிறது. பிறகு தான் இரண்டு வானவர்களில் ஒருவர் நபியவர்களின் தலைமாட்டிலும் இன்னொருவர் கால்மாட்டிலும் உட்கார்ந்து கொண்டு பேசியதின் மூலம் தனக்கு சூனியம் வைக்கப்பட்டது நபியவர்களுக்குத் தெரிகிறது என்று பதிவாகியுள்ளது. வஹீயின் மூலமாக அல்லாஹ்வோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நபியவர்களுக்கே தனக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வானவர்கள் சொன்ன பிறகுதான் நபியவர்களுக்கே சூனியம் வைக்கப்பட்டதென அறிந்து கொண்டார்கள் என்றால் இன்று மந்திரவாதி என்பவர்கள் எப்படி ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்கள். அதுவும் இவர்தான் வைத்தார் என்று எப்படி கண்டுபிடித்தார்கள். லபீத் இப்னு அஃஸம் என்பவன்தான், இந்தக் கிணற்றில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தான் என்பதையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே நபியவர்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை ஆராயும் போது அந்த ஹதீஸ்கள் சரியென்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்கிற பித்தலாட்டத்திற்கு ஆதாரம் அதில் இல்லவே இல்லை. இந்த ஹதீஸை சரியென்று நம்புபவர்களுக்குத்தான் இதை நாம் சொல்கிறோம். நம்மைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் சூனியத்தின் மூலம் ஒரு கேடும் செய்ய முடியாது என்பதுதான். அடுத்து, நபிமார்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து மலக்குமார்களின் மூலமாக வஹீ வருவதால் அவர்களுக்கு தெரிகிற வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றாவது நம்பலாம்.

ஆனால் நபிமார்கள் அல்லாத நம்மைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எதுவும் வராது என்பதினால் அதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. எனவே அல்லாஹ்விடம் பொதுவாக பிரார்த்தனை செய்துவிட்டுப் போவதுதான் சரியான வழிமுறையாகும். அதனால் இந்த ஸிஹ்ர்-சூனியத்தை வைத்துக் கொண்டு வஸியம் பண்ணி விட்டார்கள், அதுபண்ணி விட்டார்கள் இது பண்ணி விட்டார்கள், மருந்து கொடுத்து விட்டார்கள், முகம் மாத்து பண்ணிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுவதை நாம் நம்பக்கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். அதற்கடுத்ததாக, சூனியம் சம்பந்தமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அந்த சூராவின் வாசகத்திற்கான அர்த்தம். இந்த சூரத்துல் ஃபலக் என்ற அத்தியாயத்தில் சிலவற்றிலிருந்து அல்லாஹ் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான். பிறகு இருட்டின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். அதன் தொடர்ச்சியாகத்தான், وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ – முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்தும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபியே சொல்வீராக என்று அல்லாஹ் சொல்லுகிறான்.) இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதுகிற பெண்கள் என்று உள்ளதால் இதுதான் ஸிஹ்ர்-சூனியம் என்று சொல்லி நம்மை நம்ப வைக்கப் பார்ப்பார்கள். இந்த சூராவும் இதற்கு அடுத்தாக உள்ள சூரத்துந் நாஸ் என்ற இரண்டு அத்தியாமும், நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுப்பதற்குத்தான் இறங்கியது என்றும். ஒரு நூலில் 12 முடிச்சுகளைப் போட்டுத்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தனர். எனவேதான் இந்த இரண்டு அத்தியாயங்களில் 12 வசனங்கள் உள்ளன என்றும்.

ஒவ்வொரு வசனத்தை ஓதும்போதும் ஒவ்வொரு முடிச்சு அவிழ்ந்து நபியவர்கள் குணமடைந்தார்கள் என்றும் ஒரு கதையை எழுதி வைத்துள்ளனர்.
இப்போது இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று வருகிறது. ஆனால் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் சூனியம் வைத்தது ஆண் என்று வருகிறது. இது முரண்பாடானதுதான். நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக கதை விடுகின்ற போலிகள் சொல்வதைப் போன்று வைத்துக் கொண்டால் நபியவர்களுக்கு சூனியம் வைத்தது பெண்களாக இருந்தால்தான் இந்த வசனம் நபியவர்களுக்கு சூனியம் பற்றிப் பேசுகிறது என்று சொல்லலாம். உண்மையில் புகாரி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஹதீஸில் இருக்கும் செய்தி என்னவெனில், லபீத் பின் அஃஸம் என்ற யூதன்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்ததாக உள்ளது. (பார்க்க(புகாரி: 3268).

அந்த ஹதீஸ்கள் சரியில்லை என்று நாம் சொல்லி விட்டோம். ஒரு வாதத்திற்கு சரியென்று வைத்துக் கொண்டால்கூட, அதற்காகத்தான் இந்த ஆயத்து இறங்கியிருக்குமானால் அது பொய்தான். ஏனெனில் நபியவர்கள் காலத்தில் யூதர்களிலுள்ள ஆண்கள்தான் சூனியம் வைத்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களில் எந்தப் பெண்ணும் சூனியம் வைக்கவில்லை. அதுபோன்று நபியவர்களுக்கு சூனியம் வைத்ததும் ஆண்கள்தாம். பொதுவாக ஸிஹ்ர்-சூனியம் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு திரிந்ததும் ஆண்கள்தாம். இன்னும் சொல்லப் போனால் யூதர்களைப் பொறுத்த அளவுக்கு பெண்களில் யாரும் வேதத்தையும் மந்திரங்களையும் ஓதவோ தொடவோ கூடாது என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாம் வந்த பிறகுதான் வேதங்களை பெண்களும் தொடலாம், தொடர்பு கொள்ளலாம், ஓதிக்கொள்ளலாம், வேதத்திலுள்ள சத்தியக் கொள்கையையும் எடுத்துச் சொல்லலாம் என்று பெண்களுக்கும் உரிமை கொடுத்தது. இஸ்லாத்திற்கு முந்தியுள்ள பிற எல்லா சமுதாயங்களிலுமே வேதங்களை பெண்கள் படிக்கக் கூடாது. தொடவே கூடாதென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றளவும்கூட நமது நாட்டிலுள்ள சிலர் மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என்று சொல்லி வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பதற்கு முன்னோடிகளே யூதர்கள்தாம். யூதர்கள் மாதவிடாய்ப் பெண்களை வீட்டைவிட்டே வெளியேற்றி விடுவார்கள்.

எனவே பெண்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று விதி செய்த சமுதாயத்தில் ஒரு பெண் நபியவர்களுக்கு சூனியம் வைத்திருக்க முடியாது. ஆனால் இங்கே இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்று வருகிறது. ஆனால் ஆண்கள்தான் சூனியம் செய்யும் வேலைகளை செய்துள்ளனர் என்பதை அறியும்போது, இந்த வசனம் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதைப் பற்றிப் பேசவே இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் இப்படி நபியவர்களுக்கு 12 முடிச்சுப் போட்டுத்தான் சூனியம் வைத்தார்கள் என்ற செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் தலாயிலுந் நுபுவ்வத் என்ற புத்தகத்தில் அறிவிக்கிறார்கள். அந்த அறிவிப்புகள் எதுவுமே சரியில்லாதவை என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹ‚ல் பாரியில் சொல்லுகிறார்கள். இப்னு கதீர் அவர்களும் கூட 4 வது பாகம் 575 ஆவது பக்கத்தில் சொல்லுகிறார்கள். அது போன்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், இது சம்பந்தமாக வருகிற எந்த அறிவிப்பும் சரியானதாக இல்லை என்று தனது தல்ஹீஸுல் ஹபீர் என்ற நூலில் 4 வது பாகம் 40 ஆவது பக்கத்தில் சொல்லுகிறார். எனவே முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்ற இந்த ஆயத்து, ஸிஹ்ர்-சூனியத்தைப் பற்றி பேசுகிற வசனம் இல்லை.

சூனியம் செய்வதற்கும் வித்தை செய்வதற்கும் இந்த வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஸிஹ்ர்-சூனியத்தினால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் சூனியம் என்பதே கிடையாது என்றும் நிரூபித்த பிறகு அதிலிருந்து ஏன் பாதுகாப்புத் தேடச் சொல்ல வேண்டும். ஏதேனும் நடந்தால்தான் பாதுகாப்புத் தேடுவது நியாயம். சூனியத்தினால் எதுவுமே நடக்காது என்கிற போது பாதுகாப்புத் தேடுவது என்பது அர்த்தமற்றது. அது தேவையுமில்லை. அப்படியெனில், முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்று குர்ஆனில் இருந்தும் ஹதீஸில் இருந்துமே ஆய்வு செய்து விடலாம். முதலில் முடிச்சுகளில் ஊதுதல், முடிச்சு போன்ற வார்த்தைகள் எந்த அர்த்தத்தில் குர்ஆனில் ஹதீஸில் பயன்படுத்தப்படுகிறது என்று ஆராய்ந்தால், அது ஒரு இலக்கிய அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

நம் நாட்டில் கூட அப்படித்தான் பயன்படுத்தப்படுகிறது. முடிச்சவக்கி, முடிச்சு அவிழ்க்கிற பயல் என்றால் முடிச்சு போட்டு அவிழ்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அர்த்தமில்லை. அந்தக் காலங்களில் பணப்பை என்கிற மணிப்பர்ஸ் போன்றவைகளெல்லாம் கிடையாது. ஒரு துணியை பை போன்று தைத்து பையின் மேல்பகுதியில் கயிறால் முடிச்சுப்போட்டு வைத்துக் கொள்வார்கள். எங்களது ஊரிலெல்லாம் அதற்கு பசுக்குட்டி என்பார்கள். அதற்கு சுருக்குப் பை என்றும் சொல்லுவார்கள். அந்த சுருக்குப் பையிலுள்ள முடிச்சியை அவிழ்த்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். இன்றைக்கு பிக்பாக்கட் என்று சொல்கிறார்களே அதுதான். இந்த பிக்பாக்கட்டின் பழைய வார்த்தைதான் முடிச்சவிக்கி என்பது. முடிச்சு அவிழ்ப்பது என்பதற்கு நேரடி அர்த்தம் அப்படியே விளங்குகிறது. ஆனால் நடைமுறையில் முடிச்சவிக்கி என்றால் திருடனுக்குச் சொல்லப்படும் வார்த்தையாகும். ஆக சில சொற்களுக்கு நேரடி அர்த்தம் கொள்வோம். சில சொற்களுக்கு இலக்கிய அர்த்தம் வைத்துக் கொள்வோம். உதாரணமாக கம்பி எண்ணுகிறான் என்று சொல்லுகிறோம் அப்படியென்றால் இரும்புக் கடையில் வேலை செய்கிறார் என்றல்லவா அர்த்தம் செய்ய வேண்டும். யாராவது அப்படி அர்த்தம் கொள்ளுகிறோமா? இல்லை. கம்பியை எண்ணுகிறான் என்ற அர்த்தமும் கொடுப்பது இல்லை. இரும்புக் கடையில் வேலை பார்ப்பவரும் கம்பியை எண்ணித்தான் வியாபாரம் செய்கிறார். இருப்பினும் நாம் கம்பி எண்ணுகிறான் என்ற வார்த்தையை ஜெயிலில் (சிறைச்சாலை) இருப்பவர்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம். ஜெயிலில் இருப்பவர் வெளியில் வர இயலாது.

உள்ளேயும் எந்த வேலையும் இருக்காது. அவனுக்கு முன்னால் இரும்புக் கம்பிகளாலான கதவுதான் இருக்கும். வேறுவழியில்லாமல் கம்பியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால்தான் கம்பி எண்ணுகிறான் என்ற வார்த்தையை ஜெயிலில் இருப்பவனுக்குப் பயன்படுத்துகிறோம். எனவே கம்பி எண்ணுதல் எப்படி ஜெயிலில் இருப்பவனுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அது போன்றே முடிச்சுகளில் ஊதுதல் என்கிற வார்த்தைக்கும் நடைமுறையில் இலக்கியமாக பயன்படுத்துகிற அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு வாதத்திற்காக கேட்கிறோம். ஒருவன் ஒரு நூலிலோ கயிற்றிலோ முடிச்சுப் போட்டு ஊதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனால் முடிச்சியில் ஊதுவதற்கு நாம் ஏன் பாதுகாப்புத் தேடவேண்டும்? நன்றாக சிந்தித்துப் பார்த்தால் அப்படியே நேரடி அர்த்தம் கொடுப்பதினால் எந்த பொருளையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியெனில் அல்லாஹ் தஆலா வேறு ஏதோ ஒரு விசயத்தைச் சொல்ல வருகிறான் என்பது தெரிகிறதல்லவா. இதுபோன்று குர்ஆனில் நிறைய விசயங்களுக்கு அல்லாஹ் பயன்படுத்துகிறான். அதுபோன்று ஹதீஸிலும் இருக்கிறது. ஏன் நம் எல்லோருடைய பேச்சுக்களிலும்கூட இப்படி இலக்கியமாகப் பேசுவது இருக்கத்தான் செய்கிறது. மனிதர்கள் பேசுகிற பேச்சுகளிலெல்லாம் இருக்கிறது. பழமொழிகள்கூட இந்த அடிப்படையில்தான் சொல்லுகின்றோம். உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் நன்றாக தொடர்ச்சியாக பள்ளிக்கூடத்திற்கு வந்த ஒரு மாணவன் பின்னால் சரியாக வராமல் பள்ளியைப் புறக் கணித்தால் அவனைப் பார்த்து, “வரவர மாமியா கழுதை போல ஆனாளாம்” என்று பேசுவோம். அப்படியெனில் மாமியார் கழுதையாகப் போனார் என்றா அர்த்தம். அதுவெல்லாம் கிடையாது. நன்றாக இருந்தவன் கெட்டுவிட்டான் என்று அர்த்தம். அவ்வளவுதான். அதனுடைய நேரடி அர்த்தத்தை எல்லாம் கவனிக்க மாட்டோம். இப்படி பயன்படுத்துவது எல்லாருடைய பேச்சுகளிலும் இருப்பதைப் போன்று குர்ஆன் ஹதீஸிலும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த முடிச்சுகளில் ஊதும் பெண்களிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதைப் புரிந்து கொள்வதற்கு குர்ஆனிலிருந்தே இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் ஒரு பிரார்த்தனை செய்கிறார்கள். அதாவது மூஸா நபிக்கு சரியாக பேச்சு வராது. அதனால்தான் மூஸா நபியுடன் அவர்களின் தம்பி ஹாரூனையும் நபியாக அனுப்பி மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய சொன்னான். மூஸா நபியவர்கள் விரிவாக பேச மாட்டார்கள். சுருக்கமாக ஹாரூன் நபியிடம் சொல்லி விடுவார்கள். அவர் விரிவாக விளக்கி தங்கு தடையின்றி பேசுகிற சொல் திறமை பெற்றவர். “என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்). “உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். (அல்குர்ஆன்: 28:34, 28:35) எதனால் அல்லாஹ் ஹாரூனையும் நபியாக்கினான் என்றால் மூஸா நபி அல்லாஹ்விடம் ஒரு துஆ (பிரார்த்தனை) செய்தார்கள். “என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! (அல்குர்ஆன்: 20:25) …32) இந்த வசனத்தில் மூஸா நபியவர்கள் தனது நாக்கிலுள்ள முடிச்சியை அவிழ்த்துவிடு என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அப்படியெனில் மூஸா நபியின் நாக்கு ரொம்ப பெரியதாக இருந்தது என்றும் அல்லாஹ் மூஸா நபியின் நாக்கை இழுத்து பிடித்து முடிச்சு போட்டு வைத்திருந்தான் என்றும் விளங்க முடியுமா?, அப்படி அர்த்தம் செய்வது முட்டாள்தனமானது. தனக்கு ஏற்பட்டுள்ள திக்குவாயை அல்லது கொன்னலைத்தான் நாவிலுள்ள முடிச்சு என்கிறார்கள்.

திக்குவாய் என்றால் ஒரு வார்த்தையைப் பேசமுடியாமல் திணறுவதற்குத்தான் சொல்லப்படும். அதைத்தான் நாவின் முடிச்சு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். யாருடைய நாக்கிலாவது முடிச்சு போட முடியுமா? முடிச்சுப் போடுகிற அளவிற்கெல்லாம் யாருடைய நாக்கும் இல்லை. நாவில் ஏற்படுகிற சிக்கல் என்று அர்த்தம். சிக்கல் என்ற வார்த்தையைக் கூட இலக்கியமாகத்தான் பயன்படுத்துகிறோம். சிக்கல் என்றால் தைக்கிற நூலின் முதல்பகுதி எது கடைசி பகுதி எது என்று தெரியாமல் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலந்து விடுவதற்குப் பயன்படுத்துகிற வார்த்தை. ஆனாலும் இந்த சிக்கல் என்ற வார்த்தையை நமது வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் தலையில் கையை வைத்துக் கொண்டு “நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன்”, “நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறீர்கள்” என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். அப்படியெனில் நூலை வைத்து பின்னிவிட்டீர்களா என்று யாரும் கேட்க மாட்டார்கள். சிக்கல் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம் செய்ய வேண்டியதாயிற்று. யாரும் அப்படியே நேரடி அர்த்தத்தைக் கருதுவதுமில்லை.

இதுபோன்றுதான் மூஸா நபி பிராத்தனையாகக் கேட்ட வசனத்தில் வருகிற வார்த்தையையும், சூரத்துல் ஃபலக்கில் வருகிற வசனத்தின் வார்த்தையையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மூஸா நபி துஆ கேட்ட வசனத்தில் வருகிற வார்த்தையான உக்தத் (عُقْدَةٌ) என்பது ஒருமை. முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதில் வருகிற வார்த்தையான உகத் (عُقَدٌ) என்பது பன்மை. எனவே உக்தத்(عُقْدَةٌ) என்றால் முடிச்சு, உகத் (عُقَدٌ) என்றால் முடிச்சுகள் என்று பொருள் வரும். சூரத்துல் ஃபலக்கில் வரக்கூடிய வார்த்தையின் ஒருமையைத் தான் மூஸா நபியவர்கள் பயன்படுத்துகிறார்கள். நாவின் முடிச்சியை அவிழ்த்து விடு என்றால் சிரமத்தை கஷ்டத்தை நீக்கிவிடு என்று அர்த்தம். சிக்கலை தீர்த்துவிடு, பிரச்சினை இல்லாமல் ஆக்கு என்று அர்த்தம். மேலே சொன்னதைப் போன்று சரியாகச் சொல்வதாக இருந்தால் அந்தத் திக்குவாயைப் போக்கிவிடு என்று அர்த்தம். (பார்க்க(அல்குர்ஆன்: 20:27) அப்படியெனில் சூரத்துல் ஃபலக்கில் வருகிற உகத் என்ற வார்த்தைக்கு கயிற்றில் முடிச்சுப்போட்டு தாயத்து தகடுகள் போடுகிறார்களே அதற்கு நமது கவனம் போய்விடக்கூடாது. அதனால்தான் ஒருகேடும் வராதே. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் முடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அந்த இடத்தில் உக்தத்துந் நிக்காஹ் (عُقْدَةُ النِّكَاحِ) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். இதிலும் உக்தத் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

மேலும் 2:237 என்ற வசனத்தில் இறைவன் இதே உக்தத் (عُقْدَةٌ) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். …

أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ

…2:237  “…நிக்காஹ் என்ற முடிச்சு யார் கைவசம் இருக்கிறதோ அவன் விட்டுத்தர வேண்டும்…” என்று அல்லாஹ் சொல்லுகிறான். முடிச்சு யார் கையில் இருக்கிறதோ என்றால் கணவன் அல்லது மனைவி கையில் இருக்கிறது என்று அர்த்தம். அப்படியென்றால் மஹர் தொகையின் மூலம் திருமணம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஒரு ஆணும் பெண்ணுமாகிய கணவன் மனைவியரிடத்தில் தான் ஒப்பந்தம் இருக்க முடியும். சம்பந்தமில்லாதவர்களுக்கு இதைச் சொல்ல இயலாது. அவர்கள் விட்டுத் தந்தால் அதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று விளங்க வேண்டும். இந்த இடத்திலும் நிக்காஹ் என்ற முடிச்சு என்பதைக் குறிக்க உக்தத் (عُقْدَةٌ) என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அப்படியென்றால் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு முடிச்சு போட்டுக் கொண்டார்கள் என்றா அர்த்தம்? இரண்டு பேரும் தாலிகட்டிக் கொண்டார்களா? அதுவெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. அவள் யாரோ இவன் யாரோ என்று இருந்தார்கள். நிக்காஹ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் இருவரும் கணவன் மனைவியாக இணைந்து விட்டார்கள். எனவே இரண்டு கயிறுகளை முடிச்சுப் போட்டு சேர்ப்பதைப் போன்று இருவரையும் ஒப்பந்தத்தின் மூலம் இணைப்பதினால் அல்லாஹ் உக்தத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். அதே போன்று மறுமணத்தைப் பற்றி 2:235 அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். பெண்கள் இத்தாவில் இருக்கிறார்கள்.

கணவர் இறந்தவுடன் நான்கு மாதம் பத்து நாட்களோ அல்லது குழந்தை வயிற்றில் இருந்தால் பிரசவிக்கும் வரையோ இத்தாவில் இருப்பார்கள். அந்த நேரத்தில் கல்யாணமும் செய்துகொள்ளக் கூடாது. கல்யாணப் பேச்சுகளை பேசி முடிவு செய்துவிடவோ கூடாது. அதைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். …

وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ

… 2:235  – (இத்தா என்ற) தவணை முடியும் வரை நிக்காஹ் என்ற முடிவை நீங்கள் உறுதி செய்து விடாதீர்கள். இந்த இடத்தில் உக்தத் என்பதற்கு முடிவு, ஒப்பந்தம் (ஆஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற்) என்று அர்த்தம். ஆக எதற்காக நான் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்ல வருகிறேன் என்றால், இந்த ஆயத்துக்களை விளக்குவதற்காக சொல்ல வரவில்லை. முடிச்சு என்று சொன்னவுடன் நிஜமாக முடிச்சு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மேற்சொன்ன வசனங்களில் எதிலுமே நிஜமான முடிச்சுகள் கிடையாது. கல்யாணத்தில் நிஜ முடிச்சு இல்லை. மறுமண ஒப்பந்தத்தில் நிஜ முடிச்சு கிடையாது. மூஸா நபியின் நாக்கைப் பற்றிப் பேசுகிற வசனத்திலும் நிஜ முடிச்சு கிடையாது. இப்போது நாம் உக்தத் முடிச்சியிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறோம். அப்படியெனில் இது என்னவாக இருக்கும். இதற்கு புகாரியில் 1142,3269 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் இதே வார்த்தையைப் பயன்படுத்தி நபியவர்கள் நமக்குச் சொன்ன செய்தியில் இது என்ன என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.

இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1142, 3269)ஆக முடிச்சுகள் என்றால் ஷைத்தான்கள் நம்மை நல்லகாரியங்களைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக முடிச்சுபோட்டு நம்மைக் கட்டிவைக்கிறான் என்று அர்த்தம். இப்படி ஷைத்தான் நம்மை நல்ல காரியங்களில் இருந்து தடுத்து வைப்பதிலிருந்து அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடவேண்டும். இந்த விசயத்தில் எந்தளவுக்கு தயாரிப்பாகவும் விவரமாகவும் இருந்தாலும் புரண்டு விடுகிறோம். அதனால் தினமும் தூங்கும்போது இந்த அத்தியாயங்களை ஓதவேண்டும். அதனால்தான் நபியவர்கள் இந்த மூன்று அத்தியாயங்களையும் இரவில் ஓதச் சொன்னார்கள். அப்படியெனில் சுப்ஹ் தொழுகைக்கு நாம் என்ன ஏற்பாடுகளை செய்திருந்தாலும் நம்மை எழுந்திரிக்க விடாமல் இருப்பதற்காக நம் தலைமாட்டில் ஒரு ஷைத்தான் இருக்கிறான். அவனிடமிருந்து நாம் வெற்றிபெற வேண்டுமானால் நம்மீது நம்பிக்கை வைத்துவிடாமல் நமக்கு மேலே ஏழு வானங்களைத் தாண்டியுள்ள அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்விடமே பாதுகாப்பைத் தேடவேண்டும். எனவே அலாரத்தின் மீதும் பக்கத்தில் உள்ளவர்களின் மீதும் நம்பிக்கை வைப்பதைவிட படைத்தவன் மீது கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டும். யாஅல்லாஹ்! நீ என்னை எழுப்பிவிடு! என்று அல்லாஹ்வைச் சார்ந்து இருக்க நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதுவரை பார்த்த இந்த அத்தியாயத்தின் வசனங்களை கோர்த்து மீண்டும் ஒருமுறை அர்த்தம் செய்து பாருங்கள். நபியே நீங்கள் சொல்லுங்கள். வைகறைப் பொழுதின் இறைவனிடமிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்குகளிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அவன் படைத்தவை என்னென்னவெல்லாம் இருக்கிறது என்ற பட்டியலை முன்னாலே நாம் பார்த்து விட்டோம்.

அவன் படைத்தவற்றின் அனைத்தின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அர்த்தம். இரவு சூழ்ந்து கொள்ளும் போது ஏற்படும் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். இதில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. ஒன்று சந்திரகிரகணம் ஏற்படும் போது நடக்கவிருக்கின்ற பேராபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவது. மற்றொன்று, பொதுவாக இரவு ஆரம்பிக்கும் போது ஏற்படும் தீங்கு. இருட்டு என்று இருப்பதினால் பேய்பிசாசு என்றெல்லாம் இல்லாததை இருப்பதாக நினைத்து மனிதன் அஞ்சுகிறான். அதனால் இரவின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவது. முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான்களின் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். இந்த வசனத்தில் வருகிற ஷைத்தானைக் குறிப்பதற்காகத்தான் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி குர்ஆனில் ஷைத்தான்களைப் பற்றி பயன்படுத்துகிற இடங்களில் பெண்பால் வார்த்தைப் பிரயோகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

قُلْ أَنَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ
يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ(71 ) الأنعام 6 وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ(210) 26 هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ(221) 26

(அல்குர்ஆனின் 6:71, 26:210, 26:221) ஆகிய வசனங்களில் ஷைத்தான்களைக் குறிப்பதற்காக பெண்பால் வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான். எனவே ஷைத்தான்களைக் குறிக்க பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்படுவதினால் இங்கேயும் அல்லாஹ் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்று பயன்படுத்துகிறான். அதாவது நம்மை தொழுகைக்கு எழுந்திருக்க விடாமல் நம்மைத் தடுக்கிற ஷைத்தான்களின் தீங்கிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக என்று விளங்க வேண்டும். அதனால்தான் நாம் அந்த அத்தியாயங்களை இரவில் பாதுகாப்புத் தேடுவதற்குப் பயன்படுத்துகிறோம். மேலும் தூங்கி எழுந்திருப்பதற்கும் அதில் பாதுகாப்புத் தேடுவதைத்தான் புகாரியின் 1142,3269 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ஹதீஸ்களிலும் நாம் பார்க்கிறோம். இதுதான் ஸிஹ்ர்-சூனியத்தைப் பற்றிச் சொல்வதற்கு அடிப்படையாக இருந்த வசனம்.