16) ஃபலக் விளக்கவுரை-2
மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது.
“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலி ன் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டுவந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 5:110) ➚
“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது “இது தெளிவான சூனியம்” எனக் கூறினர். (அல்குர்ஆன்: 61:6) ➚ ஈஸா நபியவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நிஜமாகவே செய்யப்பட்டவை தான். ஆனாலும் இது உண்மை அல்ல; இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று அம்மக்கள் கருதினார்கள். இவர் ஸிஹ்ர் செய்கிறார் என்ற சொல் மூலம் அவர்கள் இதைத் தான் கருதினார்கள். ஸிஹ்ர் என்றால் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றுதல் தான். உண்மையாக எந்த அதிசயத்தையும் செய்வது அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். முஹம்மது நபியவர்கள் தமது சமூகத்தில் தம்மைத் தூதர் என்று அறிமுகப்படுத்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சான்றுகளைக் காட்டியவுடன் அப்போது அவர்களின் சமூகம் அவர்களுக்கு எதிராகச் சொன்ன பதில் ஸிஹ்ர் என்றும் ஸாஹிர் (சூனியக்காரர்) என்பதுவும் தான். அதாவது நபியை சூனியக்காரர் என்றும் நபி கொண்டுவந்ததை சூனியம் என்றும் சொன்னதாக இறைவன் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். “இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள். (அல்குர்ஆன்: 6:7) ➚ “மக்களை எச்சரிப்பீராக” என்றும், “நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக” என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்” என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 10:2) ➚ அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். (அல்குர்ஆன்: 21:3) ➚
நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? “இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே” என்று கூறுகின்றனர். “அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்” எனவும் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 28:48) ➚
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் “இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனிதராகவே இருக்கிறார்” எனக் கூறுகின்றனர். “இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறுதான்” எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 34:43) ➚ இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 37:15) ➚
அவர்களிலி ருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். “இவர் பொய்யர், சூனியக்காரர்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர். (அல்குர்ஆன்: 38:4) ➚
அவர்களிடம் உண்மை வந்த போது “இது சூனியம், இதை நாங்கள் மறுப்பவர்கள்” எனக் கூறினர். (அல்குர்ஆன்: 43:30) ➚ இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் “இது தெளிவான சூனியம்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 46:7) ➚
அவர்கள் சான்றைக் கண்டால் “இது தொடர்ந்து நடக்கும் சூனியம்” எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். (அல்குர்ஆன்: 54:2) ➚
இதுபோன்ற வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சூனியக்காரர் என்றும் நபியவர்கள் கொண்டு வந்ததை சூனியம் என்றும் மக்கத்து காஃபிர்கள் சொன்னார்கள் என்று இறைவன் திருமறையில் சொல்லுகிறான். பொய் என்றும் உண்மையில்லை என்றும் கற்பனை என்றும் சொல்லும் இடத்தில் ஸிஹ்ர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதில் இருந்தும் ஸிஹ்ர் என்றால் நபிகள் நாயகம் காலத்தில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை அறியலாம். நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் கடைசி நேரமானபோது ஒரு தூக்கம் தூங்கினோம். பயணிக்கு அதை விட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்தத் தூக்கத்திலிருந்து) எங்களை (காலை நேர) சூரிய வெப்பம்தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னாராவார். அதற்கடுத்து இன்னார். அதற்கடுத்து இன்னார். நான்காவதாக உறக்கத்தி லிருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி அவர்களாவார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண்விழிக்காதவரை அவர்களை உறக்கத்திலி ருந்து யாரும் எழுப்பமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச்செய்தி ஏதேனும் வருகிறதா?) என்று எங்களுக்குத் தெரியாது (அல்லவா?) (எனவேதான் அவர்களை யாரும் எழுப்ப மாட்டார்கள்). உறக்கத்திலிருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு ஏற்பட்டுவிட்ட (அதிகாலைத் தொழுகை தவறிப்போன துயர) நிலைமையைப் பார்த்தபோது (எல்லோரையும் எழுப்ப) அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று உரத்த குரலில் “தக்பீர்’ சொன்னார்கள். லி உமர் (ரலி) அவர்கள் நெஞ்சுரம் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.லி எனவே தொடர்ந்து உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுடைய சப்தத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும் உறக்கத்திலி ருந்து விழித்தெழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,” “பரவாயில்லை’ அல்லது “எந்தப் பாதிப்புமில்லை’ இங்கிருந்து புறப்படுங்கள்!” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலி ருந்து இறங்கினார்கள். உளூ செய்வதற்காக தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூ செய்தார்கள். (சுப்ஹுத்) தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்பு விடுவிக்கப்பட்டபின் மக்களுக்கு (நேரம் தவறிவிட்ட அந்த தொழுகையை) நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள். அவர், “எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்துகொள்ளுங்கள். அது போதும் உங்களுக்கு” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது அவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்படுவதாக முறையிட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இன்னாரை அழைத்தார்கள். (அவருடன்) அலீ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “நீங்கள் இருவரும் சென்று தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப் பாருங்கள்!” என்றார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்த போது தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்ட படி) தமது ஒட்டகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கி விட்டனர்” (எங்கள் ஆண்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.) என்று கூறினாள். “அப்படியானால் நீ நட!” என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் “எங்கே?’ என்று கேட்டாள். அவர்கள் இருவரும் “அல்லாஹ்வின் தூதரிடம்’ என்று கூறினர். “மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?” என்று அப்பெண் கேட்டாள். “நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில்தான்; நட” என்று கூறிவிட்டு அப்பெண்ணை அவர்களிருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர். மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத்திலிருந்து இறங்குமாறு கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச்சொல்லி அவ்விரு தோல்பைகளின் வாய்வழியாக தண்ணீரை பாத்திரத்தினுள் நிரப்பினார்கள். பிறகு அந்த தோல்பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, தண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய்களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே “தண்ணீர் பருகுங்கள்; பிறர் பருகுவதற்காக எடுத்துக்கொள்ளுங்கள்!” என அறிவிக்கப்பட்டது. அவ்வாறே அவர்களும் தண்ணீர் பருகினர். சிலர் பருகினர். சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக் கொண்டனர். இதில் பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கே கடைசியாக ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி (இந்தத் தண்ணீரை எடுத்துச்) சென்று, உங்கள் மீது ஊற்றிக்(குளித்துக்) கொள்ளுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தனது தண்ணீரை என்(னென்)ன செய்யப்படுகிறது என்று பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தண்ணீர் எடுத்து முடிந்தபோது அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிட கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல்பையிலி ருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது) அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருட்களை) திரட்டுங்கள்!” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங்கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (தாரளமான) உணவுப் பண்டங்களை திரட்டி(க் கொண்டுவந்து), அதை ஒரு துணியிலிட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்திலமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர். பிறகு அப்பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள், “தெரிந்துகொள்! உனது தண்ணீரிலிருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கியதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்கு தண்ணீர் பருகச் செய்தான்” என்று கூறி னார்கள். பிறகு அப்பெண் தன்வீட்டாரிடம் நேரம் பிந்திப்போனபோது அவர்கள், “இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழிந்து வருகிறாய்?” என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண், “ஓர் அதிசயம் (என்னை சீக்கிரமாக வரவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டது.) இரு ஆடவர்கள் என்னைச் சந்தித்து “மதம் மாறியவர்’ என்று கூறப்படுகிறதே அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார்” என்று கூறிவிட்டு, அப்பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையேயுள்ளவர்களில் மிக வசீகரமான ஒரு மனிதராக அவர் இருந்தார்’ அல்லது “உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்’ என்று கூறினாள். அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணைவைப்பவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே போர் நடந்தபோது அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே ஒரு நாள் அப்பெண் தம் கூட்டத்தாரிடம், “இந்த மக்கள் வேண்டுமென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகி றார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு அபிப்ராயம் உண்டா?” என்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)(புகாரி: 344, 3571)“அஸ்து ஷனூஆ’ எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்று கறுப்புக்காக ஓதிப் பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் “முஹம்மத் ஒரு மனநோயாளி’ என்று கூறுவதை அவர் செவியுற் றார். “நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்” என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, “முஹம்மதே! காற்று கறுப்புக்காக நான் ஓதிப்பார்த்து வருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்தி விட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறுஇறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) ளிமாத், “நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறி னார்கள். இதைக் கேட்ட ளிமாத், “நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டார்கள். அப்போது “உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் “என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)” என்று கூறினார். பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், “இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?” என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், “(ஆம்) நான் ஒரு குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்” என்றார். அதற்கு “அதைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)” என்று கூறினார். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(முஸ்லிம்: 1576)
அனைத்து நபியின் சமூகமும் நபிமார்களின் அற்புதங்களை நம்ப மறுத்ததற்குக் காரணமாக கூறுவது ஸிஹ்ர் என்ற காரணத்தைத் தான். அதாவது இவர் எந்த அற்புதமும் செய்யவில்லை. ஏதோ வித்தை செய்து காட்டுகிறார் என்பதை தான் ஸிஹ்ர் என்ற சொல் மூலம் தெரிவித்தார்கள். இஸ்லாத்தை மறுக்கும் காஃபிர்களுக்கே சூனியம் என்ற வார்த்தையை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது விளங்கியிருக்கும் போது குர்ஆனைக் கற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமூகம் சூனியத்திற்கு தவறான விளக்கம் கொடுப்பதை நம்மால் சகித்துக் கொள்ளவே முடியாது. எல்லா நபிமார்களும் செய்த அற்புதங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மை. அதில் எந்தப் பொய்யுமோ கற்பனையுமோ மதிமயக்கமோ கிடையாது என்று உறுதியாக நாம் நம்பவேண்டும். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 51:52) ➚ நாம், இன்னும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர்லிசூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிற விஷயத்திற்குள் நுழையவே இல்லை. பிறகு எதற்கு இதையெல்லாம் சொல்லுகிறோம் என்றால், சூனியம் சம்பந்தமாக நாம் அலசி ஆராய்கிறபோது எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் முழுவதுமாக பார்த்துவிடுவது நல்லது. அதாவது சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நம் ஆய்வின் முடிவுகள் சரியாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பீடிகையை நாம் கொடுக்கி றோம். ஸிஹ்ர் என்றால் கற்பனை, பொய், மாயை என்பது தான். அதில் எள்ளளவும் உண்மை இல்லை ஸிஹ்ர் சம்பந்தமாக இதுவரை பார்த்த பொதுவான தகவலின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம்.
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள் : “சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்” என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களைத் தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ்கள் வருமாறு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். “எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா” என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர்.
அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். “இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?” என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று மற்றவர் விடையளித்தார். “இவருக்குச் சூனியம் செய்தவர் யார்” என்று முதலாமவர் கேட்டார். “லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான்” என்று இரண்டாமவர் கூறினார். “எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் “சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று விடையளித்தார். “எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று முதலாமவர் கேட்டார். “தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது” என்று இரண்டாமவர் கூறினார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். “அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.
பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (புகாரி: 3268) தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. (புகாரி: 5765)
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக (அஹ்மத்: 23211) வது ஹதீஸ் கூறுகிறது. “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது” என்று இவர்கள் வாதிடுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும். பாதுகாக்கப்பட்ட இறை வேதம் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது” என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப் படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும். தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ லி இறை வேதம்லிசந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் “இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்” என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும். எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் “இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ?” என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும். இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். “திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும்” என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். “இது இறைவேதமாக இருக்காது” என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான். இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம். திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ, அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது. “வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது” என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர். ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர். செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். “முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?” என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அதை அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை. எனவே அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள். ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது “இவர் சூனியம் செய்கிறார்” என்று சில வேளை விமர்சனம் செய்தனர். வேறு சில வேளைகளில் “இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும்” என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. “நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்” என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 26:153)
“நீர் சூனியம் செய்யப்பட்டவர்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 26:185) தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான். (அல்குர்ஆன்: 17:101)
மற்ற நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். (அல்குர்ஆன்: 17:47)
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். (அல்குர்ஆன்: 25:8) “நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்” என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன. “இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்கமாட்டான். இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான். ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான். “இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா?” என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும். பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை. மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது. (அல்குர்ஆன்: 25:9) உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது. (அல்குர்ஆன்: 17:48)
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்” என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான். திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன?
அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம். திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஒட்டு மொத்தமாக ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் “குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள்’ என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம். ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே! திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது. நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல.
குர்ஆனைப் பொருத்தவரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர். குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர். ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிக பட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர்தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது. ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் முறையாகும். “ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது” என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்துவிடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பதுதான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.