15) ஃபலக் விளக்கவுரை-1
113 வது அத்தியாயத்தின் பெயர் ஃபலக் (அதிகாலை) என்பதாகும். இந்த அத்தியாயத்தின் மூலம் மனிதன் இறைவனிடம் எவ்வாறு பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தருகிறான். முதலில் இந்த அத்தியாயத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போம்.
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன்: 113:1, 113:2, 113:3, 113:4, 113:5) ➚
– குல் – என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. இதன் பொருள் சொல்வீராக என்பதாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இடப்படும் கட்டளையாக இருந்தாலும் இது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகும். எந்த விஷயம் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாக இருக்கிறதோ அவை தவிர மற்ற கட்டளைகள் நபியை நோக்கி சொல்லப்படுவது போல் இருந்தாலும் அது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குர்ஆன் நபிகளுக்காக மட்டும் அருளப்படவில்லை. أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
– அவூது பிரப்பில் ஃபலக் என்பதன் பொருள் அதிகாலையின் (வைகறைப் பொழுது) இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்பதாகும். இந்த வசனத்தில் இடம் பெறும் ஃபலக் என்ற வார்த்தைக்கு 1. அதிகாலை (வைகறைப் பொழுது) சுப்ஹ் 2. சந்திரன் ஆகிய இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்த அர்த்தம் வைத்துக் கொண்டாலும் தவறில்லை.
ஏனெனில் இரண்டுமே அரபிமொழி அகராதியிலுள்ள அர்த்தம் தான். விடியற்காலையின் அல்லது சந்திரனின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று இரண்டில் எதைச் சொன்னாலும் இரண்டுமே பொருத்தமானது தான். அதிகாலையும் வெளிச்சமாக இருக்கும். சந்திரனில் இருந்தும் வெளிச்சம் கிடைக்கும். பல தீமைகள் நமக்கு வெளிச்சம் இல்லாத்தால் இருட்டால் தான் ஏற்படுகிறது. எனவே தீமையில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு வெளிச்சத்தின் அல்லது சந்திரனின் இறைவன் என்ற சொல் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நம்மில் யார் யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாது. மீண்டும் மின்சாரம் வந்துவிட்டால் கண்டு பிடித்து விடலாம். அது போன்று தான் வெளிச்சமும். எனவே சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகிற வெளிச்சத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இறைவனிடம் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். அமாவாசை இருட்டாக இருந்தால் பிரயாணம் செய்ய இயலாது. அதனால் தான் இறைவனுக்கு ரப்புல் ஃபலக் என்று பெயர். எதிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்பதையும் இறைவன் கற்றுத் தருகிறான். مِنْ شَرِّ مَا خَلَقَ
– அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.) 114 வது அத்தியாயத்தில் உள்ளத்தின் மூலமாக தவறான எண்ணங்களை விதைத்து நம் கண்ணை நம் கையாலேயே குத்திக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்ளும் வேலை தான் வஸ்வாஸ். இப்படி உள்ளத்தில் தீய எண்ணங்களை போடும் சக்திகளை விட்டு பாதுகாப்பு தேடச் சொன்ன அல்லாஹ் இந்த 113 ஆவது அத்தியாயத்தில் உடல்ரீதியான துன்பங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவதைப் பற்றிப் பேசுகிறான். மனிதனுக்கு இரண்டு விதமான பாதுகாப்பும் தேவை தான். சூரத்துந்நாஸில் மனிதனின் ஈமானைப் பாதுகாக்க அதாவது மறுமையில் வெற்றிபெறத் தக்க பாதுகாப்பு பற்றியும், ஆத்மாவைப் பாதுகாப்பது பற்றியும் இறைவன் கற்றுத் தருகிறான். சூரத்துல் ஃபலகில் உலக வாழ்கையையும் அதில் நமது உயிரையும் உடலையும் உலகில் நம்மோடு தொடர்புடையவைகளின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேவை என்பதை இறைவன் கற்றுத் தருகிறான். இந்த வாக்கியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதன் சிலவற்றை தீங்கு தருபவை என்றும் சிலவற்றை நன்மை தருபவை என்றும் தீர்மானித்து வைத்துள்ளான். ஆனால் அது முற்றிலும் சரியானது அல்ல. ஏனெனில் மனிதன் நல்லவை என்று தீர்மானித்துள்ளவற்றிலும் மனிதனுக்கு கேடு ஏற்படலாம். மனிதன் தீமை எனத் தீர்மானித்துள்ளவற்றிலும் நன்மைகள் ஏற்படலாம். எனவேதான் தீயவற்றின் தீங்கில் இருந்து பாதுகாப்பு தேடுமாறு சொல்லாமல் அவன் படைத்த அனைத்தின் தீங்கில் இருந்தும் பாதுகாப்பு தேடுமாறு அல்லாஹ் அற்புதமாக நமக்கு கற்றுத்தருகிறான். இங்கு தருகிற பொருட்களிலிருந்து மட்டும் பாதுகாப்புத் தேட அல்லாஹ் சொல்லித் தரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த அனைத்துப் பொருட்களிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான். நாம் சாப்பிடுகிற சோறு நமக்கு ஆரோக்கியத்தைத் தந்து உயிர் வாழ்வதற்கு ஆகாரமாகவும் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தச் சோற்றை வேறொரு கோணத்தில் ஆய்வு செய்தால், சோற்றிலும் கூட கேடு இருக்கத் தான் செய்கிறது.
இன்று எத்தனையோ மருத்துவர்கள் சக்கரை வியாதி உடையவர்களுக்கு கேள்வரகு, சோழம், கோதுமை போன்றவற்றைச் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சோற்றிலிருக்கிற மாவுச் சத்து சக்கரை நோயாளின் சக்கரை அளவைக் கட்டுப்படுத்தாது. அதே போன்று தான் ஒவ்வொரு சாப்பாட்டிலும் சொல்லுகிறார்கள். உருளைக்கிழங்கில் புரோட்டின் இருக்கிறது நன்றாகச் சாப்பிடுங்கள் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். அதே மருத்துவர்கள் ஒருவருக்கு உருளைக்கிழங்கு, தக்காளி சாப்பிடக் கூடாது என்பார்கள். அது மாதிரி, உப்பு சேர்க்க வேண்டும் என்றும் சேர்க்கக்கூடாது என்றும் பேசுவார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால், மழை பெய்கிறது. இது பலருக்கு நன்மை என்றாலும் சிலருக்குச் சிரமம் தரக் கூடியதாகத் தான் இருக்கும். உப்பு வியாபாரிக்கு மழை பெய்தால் நன்றாக இருக்காது. ஏனெனில் மழைத் தண்ணீரில் உப்புமூட்டை கரைந்து வெறும் சாக்கு மட்டுமே மிஞ்சும். இப்போது உப்பு வியாபாரிக்கு மழை கெடுதலாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால், பெய்கிற மழை அளவுக்கு அதிகமாகப் பெய்தால் அது மனிதர்களுக்குப் பெரும் சிரமத்தை அளிக்கிறது. அது போன்று அளவுக்கு அதிகமான புயலுடன் மழை பெய்தாலும் மக்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்திவிடும். இப்படி எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதுமிருக்கிறது. அதனால் தான் தமிழில் ஒரு அழகான பழமொழி இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று. அனைத்திலும் தீங்கு இருக்கிறது என்ற இஸ்லாத்தின் கருத்தை உண்மைப்படுத்தும் பழமொழி இது.
எனவே இப்படி எல்லாவற்றிலும் ஒரு கெடுதி இருக்கத் தான் செய்கிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவனிடம் அப்பீல் போட்டால் சரியாகி விடும். ஆண்கள் மூலம் பெண்களுக்கும் பெண்கள் மூலம் ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன். அதே சமயம் ஆண்களினால் பெண்களுக்குக் கேடும். பெண்களினால் ஆண்களுக்குக் கேடும் ஏற்படத்தான் செய்கின்றன. காசு பணத்தினால் மனிதனுக்குக் கேடும் இருக்கிறது. நன்மையும் இருக்கிறது. அதிகமான செல்வமிருந்தால் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்து உதவலாம் என்று நினைப்பது நன்மை. அதே காசுபணம் அதிமாக இருப்பதினால் தான் அநியாயமும் செய்கிறான். இதுபோன்று பதவி அந்தஸ்து எதை எடுத்துக் கொண்டாலும் நல்லதுமிருக்கிறது. கெட்டதுமிருக்கிறது. சாப்பாட்டிலும் நல்லது கெட்டது இருக்கிறது. மருந்து மாத்திரையிலும் கூட நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நோயைக் குணப்படுத்துகிற மருந்து மாத்திரையைக் கூட அதிகம் உண்பதினால் கேடு இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இப்படி திண்கிற சோற்றிலும் ஊற்றிக் கொள்கிற குழம்பிலும் குடிக்கிற தண்ணிரிலும் என்று இறைவன் படைத்த எல்லாவற்றிலும் கேடு இருக்கத் தான் செய்கிறது. அதனால் அனைத்தின் தீங்கில் இருந்தும் அவனிடம் பாதுகாப்புத் தேடுவது கடமை. எல்லாவற்றிலும் நன்மையும் பயனும் இருப்பதைப் போல் தீங்கும் கேடும் இருக்கும். மனிதன் தீங்கு, கேடு தரக் கூடியதாக எதை நினைக்கிறானோ அதற்கு அர்த்தம் அதிக தீங்கு தரக்கூடியது என்பது தான். உலகில் தீங்கு தராத எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு மனிதன் அதிகத் தீங்கு தரக் கூடியதாக பாம்புகளைக் கண்டு அஞ்சுகிறான். ஆனால் அந்தப் பாம்புகள் இல்லையென்றால் மனிதன் உயிர்பிழைக்கவே முடியாது. இன்று பல்வேறு பிரச்சனைகளுக்காக மனிதன் ஆப்பரேஷன் செய்து கொள்கிறான். நமது உடலை அறுக்கும் போது இரத்தம் ஓடிக் கொண்டேயிருந்தால் நாம் மரணித்து விடுவோம். நமது இரத்தத்தை உரைய வைப்பதற்கு பாம்புகளின் விஷம் தேவைப்படுகிறது. அது போன்று நாய்களிடமும் நமக்கு நன்மையிருக்கத் தான் செய்கிறது. அம்மை நோய்க்கு நாய்களிடமிருந்து தான் மருந்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படி நாய், பன்றி, கழுதை, குதிரை என்று எதை எடுத்துக் கொண்டாலும் நன்மையும் தீமையும் இருக்கத் தான் செய்கிறது. எதில் நன்மை அதிகம் இருக்கிறதோ அதை நன்மை என்று சொல்லி விடுகிறோம். எதில் தீமை அதிகம் இருக்கிறதோ அதை தீங்கு என்கிறோம். ஆனால் எந்த ஒன்றிலும் நூறு சதம் நன்மையோ அல்லது நூறு சதம் தீமையோ கிடையவே கிடையாது. மனிதனின் மலத்திலும் கூட நன்மை இருக்கத் தான் செய்கிறது. நமது மலம் பன்றிக்கு உணவாக இருக்கிறது. அந்தப் பன்றியிலிருந்தும் மனிதனுக்கு சில நன்மையிருக்கிறது. அதே போன்று இறைவனால் படைக்கப்பட்ட சூரியன், சந்திரன், வானம், பூமி, கோள்கள் கடல்கள் போன்றவற்றிலும் மனிதனுக்கு நன்மையும் தீமையும் இருக்கிறது. அதனால் தான் இறைவன், நான் படைத்திருக்கிற அனைத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடவேண்டும் என்று நமக்குக் கட்டளையிடுகிறான். அதுவும் தினமும் பாதுகாப்புத் தேடிக் கொள்ளச் சொல்லுகிறான். ஒருமனிதனுக்கு ஆண்மீகப் பாதுகாப்பும் கிடைக்கிறது. உலகப் பாதுகாப்பும் கிடைக்கிறது. இதை விட சிறந்த ஒரு பாதுகாப்பும் மனிதனுக்கு இல்லவே இல்லை. இதற்கு அடுத்தபடியாக இறைவன், தீங்கிலேயே தனித்தனியாக சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியும் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான்.
அதில், وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
– பரவும் இருளின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக) காஸிகின் என்று சொன்னால் சந்திரன் என்ற பொருளும் உண்டு. அப்படியெனில் கிரகணம் பிடிக்கும் போது அதன் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும். இந்த வசனத்திற்கு இருள் பரவும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே மனிதர்களுக்குக் கேடான விசயமாகத்தான் இருக்கிறது. கிரகணக் கேடு சந்திர கிரகணம் ஏற்படும் போது மனித சமுதாயத்திற்கு மிகப் பெரும் கேடுவர வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுடைய வெளிச்சம் என்பது சூரியனுடைய வெளிச்சத்தை வாங்கி பூமிக்கு திருப்பியனுப்புகிறது. சந்திரனுக்கென தனி வெளிச்சம் எதுவும் கிடையாது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் அந்தக் காலத்தில் ரேடியம் தஸ்பீஹ் மணி வைத்திருப்பார்கள். அதை இருட்டில் வைத்தாலும் வெளிச்சமாக இருக்கும். அதற்குள் லைட் எதுவுமே இருக்காது. வெளிச்சத்தை வாங்கி பிரதிபலிக்கும். இருட்டில் பளிச்சென்று தெரிகிறது. இதுபோலத் தான் சந்திரனும் அமைந்துள்ளது. சந்திரன் என்பது வெறும் மண் தான். சூரியன் போன்று அதில் நெருப்பு எதுவுமில்லை. ஆம்ஸ்ட்ராங் அதிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்து காட்டிவிட்டான். சூரியனிலிருந்து வெளிச்சம் நிலவின் மீது பட்டு அதை பூமிக்கு கொடுக்கிறது. கிரகணம் எப்படி ஏற்படுகிறதெனில், சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படாமல் இருக்கும் விதத்தில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் குறுக்கே வந்து நின்று கொள்ளும். சந்திரன் வானில் இருக்கும். ஆனால் வெளிச்சம் வராது. உதாரணத்திற்கு ஒரு பேட்டரி லைட் வெளிச்சத்தை கண்ணாடியில் அடித்தால் கண்ணாடியில் வெளிச்சம் பட்டு ஒளி எதிர் திசையில் பிரதிபலிக்கும். கண்ணாடிக்கும் பேட்டரிக்கும் மத்தியில் நான் குறுக்காக நின்றால் கண்ணாடியில் வெளிச்சம் படாது. இது போன்று சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படாமல் பூமி தடையாக நிற்பதால் இதற்குப் பெயர் சந்திர கிரகணம். ஒவ்வொரு கோள்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் ஈர்ப்பு விசையினால் கீழே விழாமலும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமலும் இருக்கிறது. சந்திர கிரகணம் ஏற்படும் போது சிறிய அளவுக்கு ஏதேனும் ஒன்றினுடைய ஈர்ப்பு குறையுமானால் அல்லது கூடுமானால் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி உலக அழிவு ஏற்பட்டுவிடும். இது நமக்குப் பெரிய தீங்கு தான். அதனால் தான் நபியவர்கள் சூரிய கிரகணத்தையோ அல்லது சந்திர கிரகணத்தையோ கண்டால் அதன் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடும் விதமாக நமக்குத் தனித் தொழுகையையும் பிரார்த்தனைகளையும் கற்றுத் தந்த செய்திகள் பல உள்ளன.
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்ளிக்குச் சென்றார்கள். நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒரு போதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுவனவல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),(புகாரி: 1059) மேற்சொன்ன அடிப்படையில் சந்திரனுக்குக் கிரகணம் ஏற்பட்டால் முழு உலகத்திற்கும் பாதிப்பு வருவதினால் குறிப்பிட்டு அதிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறான். இரவின் இருட்டினாலும் கேடு சந்திரன் ஒளி இழக்கும்போது தான் இருட்டு உண்டாகிறது. சூரியன் மறைந்தவுடன் இருள் பரவத் தொடங்கினாலும், சந்திரனின் ஒளி பிரகாசமாக இருப்பின் நாம் ஓரளவு வெளிச்சத்தில் சென்று விடலாம். ஆனால் சந்திரனிலிருந்து ஒளி பிரகாசமாக இல்லாமல் இருந்தால் இருட்டாகிவிடும். இருட்டாக இருப்பதினால் தான் பாம்புக்கும் பள்ளத்துக்கும் வித்தியாசமில்லாமல் தெரிகிறது. இருட்டின் காரணமாக நம் கால்இடறி பள்ளத்தில் விழுந்து விடுகிறோம். நம்மையும் அறியாமல் அசிங்கத்தில் காலை வைத்து நடக்கிறோம். இதுவெல்லாம் இருட்டினால் ஏற்படும் தீங்குதான். இன்னும் சொல்லப் போனால், இருட்டின் காரணமாகத் தான் நமக்குப் பல்வேறு விதமான கெட்ட எண்ணங்களும் ஏற்படுகிறது. இருட்டைப் பயன்படுத்தி விபச்சாரம் நடக்கிறது. இருட்டைப் பயன்படுத்தித் தான் தப்புதண்டாக்கள் நடக்கிறது. போக்கிரிகளின் தங்கும் கூடாரமாகவும் இருட்டுத் தான் இருக்கிறது. பொதுவாக இருட்டைப் பார்த்து எல்லாருக்குமே ஒருவித பயமுண்டு. இல்லாத பேய்பிசாசுகளை இருப்பதாக நம்புகின்றனர். இருட்டில் எதாவது ஆடுவதைப் பார்த்துவிட்டு அஞ்சி நடுங்குகிறோம். அடுத்ததாக, அல்லாஹ் சொல்லுகிற வசனம் மிகவும் முக்கியமானது. இந்த வசனத்திற்கு தவறாக நிறைய விரிவுரையாளர்களும் விளக்கம் சொல்லியுள்ளனர். பொதுவான மக்களும் இந்த வசனத்தைத் தவறாகவே கருதியுள்ளனர். وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
– முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக) அரபி மொழியில் னஃப்பாஸாத் என்ற வார்த்தைக்கு முடிச்சுகளில் ஊதுபவர்கள் என்று பொருள் கொள்வது கூடாது. குறிப்பாக பெண்களுக்குச் சொல்லுகிற வார்த்தை அமைப்பு. இந்த வசனத்தை வைத்து முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கு என்பதற்கு, பில்லி சூனியம் என்று அர்த்தம் வைக்கின்றனர். அதனால் சூனியம் என்பது உண்டு என்றும் அதற்கு நாம் பரிகாரத்தின் மூலம் பாதுகாப்புத்தேட வேண்டும் என்றும் தவறாக நம்புகின்றனர். அதாவது மந்திரத்தால் ஒருவனை வீழ்த்துவது என்று நம்புகின்றனர். ஒருவனைக் கத்தியைக் கொண்டோ அல்லது விஷத்தின் மூலமோ வீழ்த்த முடியும். ஆனால் இப்படி உடலில் தீங்கை ஏற்படுத்தாமல், வெறுமனே ஏதேனும் மந்திரங்களை உச்சரிப்பதின் மூலமோ அல்லது நாம் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்கோ இருக்கிற எதிரியை அங்கிருந்தபடியே வீழ்த்த முடியும் என்று நம்புகின்றனர். உண்மையிலேயே இப்படி சூனியத்தின் மூலம் ஒருவனை வீழ்த்த முடியுமா? என்றால், முடியவே முடியவே முடியாது. இப்படி முடியாது என்று தெரிந்து கொண்டே பல்வேறு அறிஞர்கள் இதனைக் கூடும் என்று ஃபத்வா கொடுப்பதையும் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் உலகத்தில் பல்வேறு அறிஞர்கள் சூனியத்தை உண்மை என்று நம்புவதையும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதையும் பார்க்க முடிகிறது. எனவே ஸிஹ்ர் – சூனியம் என்பது உண்மையா? அதைப் பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது? இன்று நடைமுறையில் பல்வேறு விசயங்களை சூனியத்தின் பெயரால் செய்கின்றனரே, இதெல்லாம் உண்மையா? என்கிற விசயங்களை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து புரிந்து கொண்டால் நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு உதவலாம் என்ற அடிப்படையில் சூனியத்தைப் பற்றிய ஆய்வுக்குள் நுழைவோம்!
முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
இந்த வசனத்தின் விளக்கத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஸிஹ்ர்-சூனியம் சம்பந்தமாக அக்குவேறாக ஆணிவேராக பார்ப்பது மிகவும் நல்லது. இனிவரும் காலங்களில் இந்த வசனத்தைத் தவறாக விளங்கிவிடாத அளவுக்கு நாம் சூனியத்தை விரிவாக அலசவேண்டும். இந்த வசனத்தை யார் யார் எப்படி எப்படியெல்லாம் தவறாக விளங்கியும் விளக்கியும் உள்ளனர் என்பதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதின் மூலம் நமது ஈமானுக்கு பாதுகாப்பாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன். எனவே தற்போது இந்த வசனத்தை நிறுத்திவைத்துவிட்டு சூனியத்திற்குள் நுழைந்துவிட்டு அதில் தெளிவு பெற்றபிறகு இந்தவசனத்தை விளக்கினால் மிகஎளிதாக விளங்கிட முடியும்.
ஷைத்தானின் தூண்டுதலில் இருந்தும் இலகுவாக தப்பித்துக் கொள்வதற்கு சரியான வழியாக இருக்கும் என்பதை கூறிக் கொண்டு சூனியத்திற்குள் நுழைவோம். முதலில் ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அலச வேண்டும். தற்போது, ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு பில்லி, சூனியம், மாயமந்திரம் போன்ற அர்த்தங்களில் இன்று உலமாக்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தை நாமாக தீர்மானிக்கக்கூடாது. ஒரு வார்த்தையின் நேரடியான பொருளை, அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு அந்த மொழியின் அகராதியைப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் ஸிஹ்ர் என்பதற்கு நேரடிப் பொருள் (கவனத்தை) ஈர்த்தல், (கவர்தல்) என்று பொருள். உதாரணமாக ஒருவர் தனது பேச்சினால் மக்களைக் கவர்ந்து ஈர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குப் பெயர் ஈர்க்குதல் (ஸிஹ்ர்) என்று பெயர்.
தெருவில் செல்லுகிற ஒரு அழகான பெண்ணை ஒருவன் ஒரு மாதிரியாக பார்க்கிறான் என்றால் அவள் அவனை ஈர்க்கிறாள் (ஸிஹ்ர்) என்று பெயர். அதே போன்று, ஒருவன் ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக எடுக்கிறான். ஆனால் அதன் கடைசிப் பக்கம் வரைக்கும் கீழே வைக்காமல் படித்து முடிக்கிறான் என்றால் அந்தப் புத்தகம் அவனை ஈர்க்கிறது என்று பொருள். அதாவது பேச்சினாலோ அல்லது எழுத்தாலோ அல்லது நடவடிக்கையாலோ அல்லது காட்சியாலோ இப்படி எந்த ஒன்றாலும் மற்றொன்றைக் ஈர்த்தால் அவை அத்தனைக்கும் ஸிஹ்ர்-வயப்படுத்துதல், கவர்தல் என்று தான் அரபிமொழி அகராதியில் அர்த்தம் உள்ளது. இதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் நபிமொழியிலிருந்தும் ஏராளமான ஆதாரங்களைக் காட்டலாம்.
நபிமார்கள் தங்களது சமுதாயங்களில் பிரச்சாரம் செய்யும் போது அந்த மக்களால் சொல்லப்பட்ட வார்த்தைகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
(132) 7 “எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7:132) ➚ ➚ இந்த வசனத்தில் (لِتَسْحَرَنَا) -தஸ்ஹரனா என்ற வார்த்தைக்கு பொருள், ஈர்க்குதல், மயக்குதல், வயப்படுத்துதல், வெற்றிபெறுதல், கவர்தல், கையில் எடுத்துக் கொள்வது போன்ற அர்த்தங்கள் உண்டு. அதேபோன்று அல்லாஹ் இன்னொரு இடத்தில் சொல்லும்போது, நபிமார்கள் அவர்களது சமுதாயங்களுக்கு தங்களது செய்தி இறைவனிடமிருந்து தான் வந்தது என்பதை நிரூபிக்க அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்கள் சிலதை நடத்திக் காட்டுவார்கள். அப்படி அற்புதங்களைக் கண்கூடாகக் கண்டபிறகும்கூட அந்த அற்புதமும் தங்களை மயக்குவதாகச் சொல்வார்கள்.
அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், “எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்” என்றே கூறுவார்கள். (அல்குர்ஆன்: 15:15) ➚ ➚ எங்களது பார்வைகள் கட்டப்பட்டுவிட்டது என்றும், இல்லை.. இல்லை.. எங்களது சிந்தனை மதிமயக்கப்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். அதில் இறைவன் பயன்படுத்தும் வார்த்தை ???? ஸிஹ்ரிலிருந்து வந்த மஸ்ஹூர் என்ற வார்த்தையாகும்.
இதற்கு மதிமயக்கப்பட்டு விட்டோம் என்று பொருள்.
“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! “ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா;?” என்று கேட்பீராக! “பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 23:84) ➚ ➚…89) மேற்கூறிய 23:89 வசனத்தில் تُسْحَرُونَ
துஸ்ஹரூன் என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ஸிஹ்ர் என்பதிலிருந்து வந்தவார்த்தையாகும். இதற்கு மதிமயக்கப்படுதல் என்று பொருள் ஆகும். மேலும் ஹதீஸ்களில் ஆராய்ந்து பார்த்தால், பேசுவதில் கூட ஸிஹ்ர் இருக்கிறது.
உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், சிலபேர் இலேகியம் விற்பார்கள். இலேகியம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அவன் பேசுவது நன்றாயிருக்கும். ஆளுக்குத்தகுந்த மாதிரி ஒவ்வொருவரின் மனநிலைக்குத் தக்கவாறு (சைக்காலஜிக்) பேசி நம்மை நம்ப வைத்து விடுவான். ஒருவனுக்கு மனைவி மூலம் பிரச்சனை இருக்கலாம். இன்னொ ருவனுக்கு மனக்கவலை இருக்கலாம். அனைத்திற்கும் இந்த இலேகியத்தில் மருந்து இருக்கிறது என்பான். அந்த இலேகியத்தை வாங்கிச் செல்பவர்கள் மூன்று நபர்கள் இருந்தால். இலேகிய வியாபாரியைச் சுற்றி முந்நூறு பேர் நிற்பார்கள். இதற்குக் காரணம் அவனது பேச்சில் இருக்கிற ஈர்ப்புத்தான். இதுபோன்று நபிகள் காலத்தில் வெளியூரிலிருந்து வியாபாரத்திற்கு வந்த இரண்டு பேர்கள் தங்களது சரக்குகளை (பொருட்களை) விற்பதற்காக அழகாக சொற்பொழிவாற்றுகிறார்கள். அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டமிடுவதைப் பார்த்த நபியவர்கள் பேச்சில் சொற்பொழிவில் ஈர்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பயன்படுத்திய வார்த்தை ஸிஹ்ர் என்பதாகும். 5146
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்கüடையே சொற்பொழிவும், கருத்துச் செறிவும் மிக்கதோர்) சொற்பொழிவு நிகழ்த்தி னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாகப் பேச்சில் சிஹ்ரில் கவர்ச்சி உள்ளது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),(புகாரி: 5146) 5767
இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றி னார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சில சொற்பொழிவில் ஸிஹ்ர் கவர்ச்சி உள்ளது’ அல்லது “சொற்பொழிவுகüல் சில ஸிஹ்ர் கவர்ச்சியாகும்’ ” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),(புகாரி: 5767)மேற்கூறிய ஹதீஸில் மாயமோ மந்திரமோ அவர்கள் செய்யவில்லை. பயான் பண்ணுகிறார்கள். அவ்வளவுதான். ஆனால் மக்கள் ஒன்றுகூடி நின்று கேட்கிறார்கள். அதைப் பார்த்துத்தான் ஸிஹ்ர் என்றார்கள் நபியவர்கள்.
எனவே மேற்சொன்ன குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் ஆராய்ந்து பார்த்தாலேயே, ஒன்றை ஒருவன் கவருகிற மாதிரி அல்லது ஈர்க்கிற மாதிரி செய்தால் அதற்குத்தான் அரபி அகராதியில் ஸிஹ்ர் என்று பொருள் என்பதை யாரும் விளங்கிக் கொள்ளமுடியும். பேச்சில் ஸிஹ்ர் என்றால் பிறரைக் கவரும் விதத்தில் பேசியிருக்கிறார் என்று அர்த்தம். அதேபோன்று ஒரு நாடகத்தை வைத்த கண் வைக்காமல் அதாவது கண்சிமிட்டாமல் மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அந்த நாடகம் அவர்களை ஈர்த்திருக்கிறது என்று அர்த்தம்.. ஆனால் தற்போது மக்கள் ஸிஹ்ர் (சூனியம்) என்ற வார்த்தையை மாயமந்திரம், பில்லி, சூனியம் போன்ற தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். ஒருவன் இன்னொருவனது கைகால்களை முடக்குவது, முறிப்பது, நோயை உண்டாக்குவது, கிறுக்கனாக்குவது, கனவன் மனைவியைப் பிரிப்பது, இன்னும் கூடுதலாகச் சென்று பிள்ளைக் கொடுப்பதுவும், பிள்ளை இல்லாமல் அவதிப்பட வைப்பதுவும், கொடுத்த பிள்ளையை ஊமையாக்குவது, முடக்குவது என்று எல்லாத்தையுமே நேரடியாகவோ அல்லது ஆயுதத்தாலோ இல்லாமல் மந்திரத்தால் மந்திரவாதி செய்வார் என்று ஸிஹ்ரைப் பற்றி தவறாக நம்புகின்றனர்.
எனவே இதுபற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கொண்டு ஆராய்ந்தால், ஸிஹ்ர் என்பதற்கு தந்திரம் என்று பொருள். அதாவது தந்திரமான வித்தைகள் செய்வது என்ற பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி தந்திரத்தால் எதைச் செய்தாலும் அது வெறுமனே ஒன்றுமில்லாத கண்கட்டி வித்தைதான் காட்டும்போது இருக்கிற மாதிரி (நிஜம் மாதிரி) தெரியும். ஆனால் உண்மையில் இருக்காது என்று அல்லாஹ் சொல்லுகிறான். அல்லாஹ் மூஸா நபியை ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனிடத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச் சொல்ல அனுப்புகிறான். அவன் மூஸா நபியிடம் நீர் தூதர் என்பதை நிரூபிக்கிற அற்புதம் ஏதும் உம்மிடம் இருக்கிறதா? என்று கேட்கும்போது, மூஸா நபி அவர்கள் இறைவனின் அனுமதியுடன் தமது கையிலுள்ள கைத்தடியைப் போட்டு பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். உடனே ஃபிர்அவ்ன், மூஸா நபியிடம் நானும் எனது மந்திரவாதிகள் மூலமாக இதைப்போன்று செய்யமுடியும். எனவே நமக்குள் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு பந்தயம் வைத்துக் கொள்வோம் என்று பேசுகிறான். மூஸா நபியும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். குறித்த நாளில் பந்தயம் தயாரானது. மூஸா நபி ஒருபுறமும் அவர்களுக்கு எதிராக ஃபிர்அவ்ன் திரட்டிய மந்திரவாதிகள் எதிரணியாக எதிர்புறமும் நிற்கிறது. முதலில் ஃபிர்அவ்னால் அழைத்துவரப்பட்ட மந்திரவாதிகள் தங்களது பொருட்களைப் போட்டு மக்களின் கண்களை வயப்படுத்தி னார்கள். இதை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
“நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன்: 7:116) ➚ ➚ ஃபிர்அவ்னால் அழைத்து வரப்பட்ட மந்திரவாதிகள் மக்களின் கண்களை மயக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் உண்மையில் அவர்கள் பாம்புகளாக மாற்றவில்லை. ஆனால் மூஸா நபியவர்கள் கண்கட்டிவித்தையாக அற்புதத்தை செய்யவில்லை. மாறாக உண்மையிலேயே கைத்தடியை பாம்பாக மாற்றினார்கள். ஒரு வாதத்திற்காக இன்றைக்கு மூஸா நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்டாலும், அவர்கள் கைத்தடியைப் பாம்பாக மாற்றினால் அதை இன்றுள்ள டி.என்.ஏ சோதனை உட்பட எந்த மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினாலும் அது உண்மையிலேயே பாம்பாகத்தான் இருக்கும். உண்மையான பாம்புக்கு என்னவெல்லாம் இருக்குமோ அதுவெல்லாம் இருக்கும்.
இது தான் நபிமார்களின் அற்பு தங்களுக்கும் பிற மந்திரவாதிகளான மேஜிக் செய்பவர்களுக்குமுள்ள வித்தியாசம். கைத்தடிதான். நமது கண்களுக்கு மட்டும் பாம்பாகத் தெரிகிறது. உண்மையில் பாம்பு என்று நிரூபிக்க முடியாது. இப்படி இருந்தால் அது கண்கட்டி வித்தை. அதாவது மேஜிக். தந்திர வேலை. அவர்கள் செய்து காட்டியது பெரிய ஸிஹ்ர் என்று அல்லாஹ் கூறுகிறான். பெரிய ஸிஹ்ர் செய்தும் கூட அவர்களால் பாம்பாக மாற்ற முடியவில்லை. மாறாக பாம்பைப் போன்ற போலித் தோற்றத்தைதான் ஏற்படுத்த முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது. இன்னும் தெளிவாக இறைவன் 20 அத்தியாயத்தில் 66 ஆவது வசனத்தில் சொல்லுகிறான்.
“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (அல்குர்ஆன்: 20:66) ➚ ➚
இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகிற வார்த்தை
யுகைய்யலு என்பதாகும். அதாவது அவர்கள் கயிறுகளாலும் கைத்தடிகளாலும் காட்டிய வித்தை மூஸாவுக்கு சீறுவதைப்போன்று கற்பனையாகத் தோற்றமளித்தது. இந்த யுகைய்யலு என்ற வார்த்தை கியால் என்ற சொல்லிருந்து பிறந்தது. இந்த வார்த்தை உருதுமொழியிலும் ஃபார்சி மொழியிலும்கூட இருக்கிறது. இதன் பொருள் பொய்யாக கற்பனையாக தோற்றமளித்தல் என்பதாகும். அப்படியெனில் மூஸா நபிக்குக் கற்பனையாகப் பொய்தோற்றமளித்தது. உண்மையிலேயே சீறவில்லை என்று அல்லாஹ் சொல்லுகிறான். ஆனாலும் மூஸா நபியவர்கள் பயந்துவிட்டார்கள் என்பதாகவும் அல்லாஹ் பதிவுசெய்கிறான். மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்” என்று கூறினோம். (அல்குர்ஆன்: 20:67) ➚ ➚,68) இந்த வித்தையின் மூலம் கழுதையை குதிரையாகக் காட்டலாமே தவிர இதார்த்தத்தில், அதாவது உண்மையில் குதிரையாக ஆக்க முடியாது. இதுதான் மந்திரத்தின் வேலை. இதற்கு சரியான அர்த்தம் மேஜிக் என்பதாகும்.
“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான்” (என்றும் கூறினோம்.) (அல்குர்ஆன்: 20:69) ➚ ➚ இன்னும் தெளிவாக அடுத்த வசனத்தில் சொல்லுகிறான். இப்படி கயிறுகளும் கைத்தடிகளும் சீறுவதாக மாறியது சூனியக்காரர்களின் சூழ்ச்சி. இங்கு சூழ்ச்சி என்பதைக் குறிப்பிடுவதற்கு இறைவன் பயன்படுத்தும் வார்த்தை கைத் என்பதாகும். சூழ்ச்சி என்றாலேயே உண்மையிருக்காது என்று அர்த்தம். அதனால்தான் அதற்கு அடுத்தாகவே சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்பதையும் அல்லாஹ் சேர்த்துச் சொல்லுகிறான். அப்படியெனில் சூனியக்காரர்களால் இல்லாததை இருப்பதாகக் காட்டத்தான் முடியுமே தவிர உண்மையிலேயே இருக்காது என்பதையும் சொல்லுகிறான். சூனியத்தால் இரத்த வாந்தி எடுக்க வைத்து விடுவேன், வயிற்றுவலியை வரவழைத்து விடுவேன், அதைச் செய்துவிடுவேன் இதைச் செய்துவிடுவேன் என்று யாராவது சொல்வார்களானால் தாராளமாக வைக்கச் சொல்லுங்கள், அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். மாறாக தோல்வியைத்தான் தழுவுவார்கள் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். மூஸா நபியின் போட்டியை இன்னும் தெளிவாக இறைவன் சொல்லுகிறான்.
“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. (அல்குர்ஆன்: 7:117) ➚ ➚
உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது. (அல்குர்ஆன்: 26:45) ➚ ➚
இந்த வசனத்தில் அல்லாஹ் அவர்கள் பொய்யாக கற்பனையாக வித்தை செய்ததை மூஸா நபியின் பாம்பு விழுங்கிவிட்டது என்று பயன்படுத்துவதற்கு யஃஃபிகூன் என்ற வார்த்தையைக் கையாளுகிறான். இந்த யஃஃபிகூன் என்ற வார்த்தை இஃப்க் என்பதிலிருந்து வந்தது. இஃப்க் என்றால் பொய், இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். இதை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் நபியின் மனைவியும் அபூபக்கரின் மகளுமான ஆயிஷா ரலியையும் இன்னொரு ஸஹாபியையும் சேர்த்து தவறாக முனாபிக்குகள் இட்டுக்கட்டினார்களே அதற்கு அல்லாஹ் குர்ஆனில் இஃப்க் என்று சொல்லிக்காட்டுகிறான். நபியவர்களின் ஹதீஸிலும் இஃப்க் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த வசனங்களின்படி மூஸா நபிக்கு எதிராக திரண்ட மந்திரவாதிகள் என்றழைக்கப்பட்ட சூனியக்காரர்கள் சிஹ்ர் செய்பவர்கள் பொய்யாக காட்டியதை மூஸா நபியின் உண்மை அற்புதமாக விளங்கிய பாம்பு விழுங்கிவிட்டது. எனவே ஸிஹ்ர் என்பது முழுவதும் பொய் என்பதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். மூஸா நபி காலத்தில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தை விளங்கிக் கொள்வதற்கு இன்று நம்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் மேஜிக் ஷோக்களை (மந்திரதந்திர நிகழ்ச்சிகளை) உதாரணமாகக் கொள்ளலாம். சின்னசின்ன அளவுக்கு நடப்பதைக் காட்டிலும் பெரிய அளவுக்கு, நாமே உண்மையென்று நம்பிக் கொள்கிற அளவுக்கு நடத்தப்படுகிற பி.சி. சர்க்கார் போன்றவர்களின் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இந்த மேஜிக் ஷோவில் விமானம் நின்றால் எப்படியிருக்குமோ அதைப்போன்று அந்தரத்தில் ஒருநபரை நிறுத்திவிடுவார்கள். அவர் அந்தரத்தில் நிற்கிறார் என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக அவரது உடலுக்குக் கீழாக கையை வைத்துத் அங்கும்இங்குமாகத் தடவிக்காட்டுவார்கள்.
உண்மையில் இப்படி அந்தரத்தில் நிற்க இயலுமா? என்றால், ஒருக்காலும் எவனா லும் நிற்க இயலாது. ஆனால் அந்தரத்தில் நிற்பதைப் போன்று காட்ட இயலும். இப்படி மேஜிக் செய்பவர்களை பரிசோதனை செய்தால் உண்மை வெளியே வந்துவிடும். இது உண்மையில் உள்ளது இல்லை. தந்திர வேலைதான் என்பதை மேஜிக் செய்பவர்களே சொல்லிவிட்டுத்தான் செய்கின்றனர். உண்மையிலேயே ஒருமனிதரை அந்தரத்தில் நிறுத்த முடியும் என்றால், எந்த லைட்டும் இல்லாமல் மேடையும் இல்லாமல் எந்த செட்டிங்கும் (முன்நடவடிக்கை) இல்லாமல் எந்த இடத்திலும் சாதாரணமாக நம்மை நிறுத்த முடியுமா? முடியவே முடியாது. அப்படியெனில் உண்மையிலேயே அந்தரத்தில் யாரையும் நிற்க வைக்கமுடியாது. ஆனால் அப்படி நிற்பதைப் போன்று பொய்யாகக் காட்டமுடியும். இதே போன்று, ஒரு மனிதனை இரண்டாக அறுப்பார்கள். நான்காக அறுப்பார்கள். கை தனியாக கால் தனியாக அறுத்தெடுத்து விடுவார்கள். அதற்குப்பிறகு 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து ஒட்டவைத்த பிறகு முழுமனிதாக எழுந்து வருவான். இது உண்மையிலேயே நடக்குமா? ஒருவனது கைகால்களை அறுத்தால் இரத்தம் வரவேண்டும். ஆனால் மேஜிக் ஷோவில் இரத்தம் வராது. அப்படி இரத்தம் வந்தால் 20 நிமிடங்களில் அவனது உடலிலுள்ள இரத்தம் அனைத்தும் வெளியேறி அந்த மனிதன் இறந்து போய்விடுவான். அப்படியெனில் மேஜிக் ஷோவில் மனிதனை இரண்டாக அறுப்பதைப் போன்றோ நான்கு பக்கமும் தலையில் கத்தியால் ஒருபக்கம் குத்தி மறுபக்கம் வழியாக கத்தியை வெளியே எடுப்பது போன்றோ காட்டுவது பொய்யானது. அறுப்பதைப் போன்றோ குத்துவதைப் போன்றோ காட்டத்தான் முடியுமே தவிர உண்மையில் அறுக்கவும் குத்தவும் முடியாது. அறுத்த உறுப்புக்கள் தானா சேர்ந்த கொள்ளுமெனில் மெடிக்கல் காலேஜ் எதற்கு? மருந்து மாத்திரைகள் எதற்கு? ஆபரேசன் செய்வது ஏன்? கை துண்டானால் மேஜிக் செய்பவனிடம் கொண்டுவந்து சரிசெய்து விடலாமே? இன்னும் சொல்லப்போனால் இதெல்லாம் முடியும் என்றால் அவன் ஏன் நம்மிடம் 50 என்றும் 100 என்றும் டிக்கட் வாங்கி பிழைப்பு நடத்தவேண்டும்?
எனவே கண்ணுக்குத்தான் அறுப்பது தெரியுமே தவிர உண்மையில் இல்லை என்பதை நம்பவேண்டும். இதேபோன்று மண்ணை அள்ளிப்போட்டு தங்கத்தை உருவாக்கிக் காட்டுவார்கள். இதெல்லாம்கூட பொய்தான். உண்மையிலேயே மண்ணை அள்ளிப்போட்டு தங்கத்தை உருவாக்குவதற்கு ஆற்றல் பெற்றவனாக இருந்தால், நம்மிடம் டிக்கட்டுகாக காசுபணம் வாங்கி ஏன் பிழைப்பு நடத்தவேண்டும்? அவன் மண்ணை அள்ளிப்போட்டு தங்கமாக ஆக்கிக் கொள்ளவேண்டியதுதானே. ஆக இதுவெல்லாம் பொய். உண்மையில்லை என்று நம்பவேண்டும். உண்மையில் மண்ணைக்கூட தங்கமாக ஆக்கலாம். இப்படி ஒருடப்பாவில் மண்ணை அள்ளிப்போட்டு மூடி திறந்தவுடன் தங்கமாக ஆகாது. அணுவைப் பிளக்கும் அறிவு மனிதனுக்கு வந்த பின்னர் எந்த உலோகத்தையும் இன்னொரு உலோகமாக மாற்றமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். உதாரணத்திற்கு இரும்பை தங்கமாக மாற்றலாம். எப்படியெனில், அதற்கான அணுக்களை சரியான விகிதத்தில் கலந்தோமானால் இரும்பு தங்கமாக மாறும். ஆனால் இப்படி இரும்பைத் தங்கமாக மாற்றுவதற்கு ஆகுகின்ற செலவு, நேரடியாக தங்கம் வாங்கும் செலவைவிட அதிகமானதாகும். எனவே இந்த முறையில் இல்லாமல் வெறுமனே டப்பாவிற்குள் மண்ணைப்போட்டு குளுக்கிவிட்டு டப்பாவைத் திறந்தால் தங்கமாக மாறிவிடும் என்று நம்புவது மடமையும் அறிவீனமுமாகும். அப்படியெனில் மேஜிக்மேன் மண்ணைத் தங்கமாகக் காட்டுகிறானே தவிர உண்மையில் மண் தங்கமாக மாறியது என்ற கருத்தில் இல்லை.
இப்படி மேஜிக்மேன் எதைச் செய்து காட்டினாலும் அது உண்மையாக இருக்கவே முடியாது என்று ஆழமாக நம்பவேண்டும். அவையெல்லாம் ஸிஹ்ர் (சூனியம்) என்று நம்பவேண்டும். இதைத்தான் அல்லாஹ் மூஸா நபியின் காலத்தில் ஃபிர்அவ்னால் அழைத்து வரப்பட்ட மேஜிக்காரர்கள் செய்தார்கள் இதைத்தான் இறைவன் ஸிஹ்ர் அதாவது சூனியம் என்று குறிப்பிடுகிறான். இந்த விசயத்தில் இன்னொரு கோணத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ், நமது நபிக்கு முன் பல்வேறு தூதர்களை அனுப்பினான். அவர்களும் தங்களது சமூகத்திற்குத் தம்மைத் தூதர் என்று சொல்லுவார். ஆனால் அந்த சமூக மக்கள் நபிமார்களை ஏற்காமாட்டார்கள். உடனே அல்லாஹ் அவரை நபி என்று நிரூபிக்க அவர்களுக்கு ஏதேனும் அற்புதங்களைக் கொடுத்து மக்களிடத்தில் காட்டச் சொல்லுவான். இப்படி மூஸா ஈஸா, லூத், நூஹ் போன்ற தூதர்கள் இறைவனது அற்புதங்களைச் செய்தவுடன் நபிமார்களை எதிர்த்த அந்தந்தச் சமூக மக்கள், என்ன சொல்லி கேலிகிண்டல் செய்தார்கள் என்பதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லுகிறான். ஏனெனில் ஸிஹ்ரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அதில் விளக்கம் இருக்கிறது. மூஸா நபியின் சமூகம் அளித்த பதில்
“இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார்” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7:109) ➚ ➚ மூஸா நபி இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதத்தைச் செய்து காட்டியதும் அந்த சமூக மக்கள் அவரை திறமையான சூனியக்காரர் என்று சொன்னர்கள். அப்படியெனில் மூஸாவை நபியாக ஏற்பதற்கு இந்த வார்த்தையைச் சொல்லவில்லை. மாறாக அவரை மறுப்பதற்காகத்தான் திறமைமிக்க சூனியக்காரன் என்றார்கள். அப்படியெனில் ஸாஹிர் என்றால் இல்லாததை இருப்பதாகக் காட்டுபவர் என்று சொல்லி அந்தசமூகம் மூஸா நபியை மறுக்கிறது. ஆனால் மூஸா நபி செய்தது உண்மை. அவர்கள் இல்லாததை இருப்பதாகக் காட்டவில்லை. மூஸா நபி செய்தது உண்மையென நம்பியவர்கள் மூஸாவை நபி என்று ஏற்றுக் கொள்வார்கள்.
மூஸா நபி செய்தது பொய். இல்லாததை இருப்பதாகக் காட்டும் சூனியக்காரர் என்று நம்பியவர்கள் அவரை ஏற்க மறுத்தார்கள். இன்னும் பல்வேறு வசனங்களில் ஸிஹ்ர் என்ற வார்த்தையை நபி மூஸா அவர்களை மறுப்பதற்காக அந்த சமூகம் சொன்னது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் சொல்லுகிறான்.
நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது “இது தெளிவான சூனியம்” என்றனர். “உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார் (அல்குர்ஆன்: 10:76) ➚ ➚,77)
“இவர் திறமைமிக்க சூனியக்காரர்” என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். (அல்குர்ஆன்: 26:34) ➚ ➚
மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர். (அல்குர்ஆன்: 28:36) ➚ ➚
மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். “இவர் சூனியக்காரரோ பைத்தியக்காரரோ” எனக் கூறினர். (அல்குர்ஆன்: 51:38) ➚ ➚,39)
நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 27:13) ➚ ➚
மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர் அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 40:23) ➚ ➚,24)
மூஸா நபி உண்மையிலேயே அற்புதம் தான் செய்தார்கள் என்று நம்பியிருந்தால் அவரை ஈமான் கொண்டிருப்பார்கள் இதற்கு ஆதாரமாக மூஸா நபிக்கும் சூனியக்காரர்களுக்கும் போட்டி நடக்கிறது. போட்டியில் மூஸா நபியின் பாம்பு, சூனியக்காரர்களால் பாம்புகளாகக் காட்டப்பட்ட கயிறுகளையும் தடிகளையும் சாப்பிட்டுவிட்டது. உடனே இது உண்மைதான் என்பதை உணர்ந்த சூனியக்காரர்கள், அதுவும் ஃபிர்அவ்னால் கூலிக்கு அமர்த்தப்பட்ட சூனியக்காரர்கள் மூஸா நபியையும் அவர் சொன்ன கடவுள் கொள்கையும் ஏற்றுக் கொள்கிறார்கள். “உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். “அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றும் கூறினர். (அல்குர்ஆன்: 7:117) ➚ ➚…122) எனவே மூஸா நபியவர்கள் உண்மையாகவே அற்புதத்தைச் செய்துகாட்டி னாலும் அதனை மறுப்பவர்கள், இது கற்பனை, கடைந்தெடுத்த சூனியம், இல்லாததை இருப்பாதகக் காட்டுதல் அல்லது இருப்பதை இல்லாததாகக் காட்டுதல் என்ற அர்தத்தில் ஸிஹ்ர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள் என்று அறியமுடிகிறது.