பெற்றோரை பேணுவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனிதன் சந்திக்கும் பல்வேறு உறவுகளில் மிகமிக முக்கியமான உறவு பெற்றொர் என்ற உறவு தான். அந்த பெற்றோர்களை மதிக்க, பேணச் சொல்லும் இறைவன், தன்னை வணங்குவதற்கு அடுத்த மிக முக்கியமான கடமையாக இதனை சொல்லிக் காட்டுவதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே!

மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ”சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:23)

சொர்க்கத்திற்கு சென்று சேர்க்கிற அமல்களில் இதுவும் ஒன்று
سَأَلْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم –
أَىُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ « الصَّلاَةُ عَلَى وَقْتِهَا ». قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ « ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ ». قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ « ثُمَّ الْجِهَادُ فِى سَبِيلِ اللَّهِ

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
”நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் நபியே! நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது” என்று கூறினார்கள். ”அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே! என்று கேட்டேன். அதற்கு ”தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். ”அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே!” என்று கேட்டபோது, ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள்.

நூல்: (முஸ்லிம்: 138) 

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللهِ؟ قَالَ: «الصَّلَاةُ عَلَى وَقْتِهَا» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ

வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ! இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்று கூறினார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டபோது, “பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள். 

நூல்: (முஸ்லிம்: 139) 

உறவாடுவதற்கு தகுதியானவர்கள்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயலை நம்மில் எத்தனை பேர் செய்கிறோம்? நட்பு வட்டாரம் என்று வைத்துக் கொண்டு அவர்களுக்காக எதையும் செய்யத் தயார். நண்பன் போன் செய்தால், உடனே ஓடோடிச் செல்வது. அவன் கூடவே அலைவது. டீ குடிப்பது என்று பலமணி நேரத்தை செலவழிக்கும் பலர், தன்னுடன் உறவாடுவதற்கு தகுதியானவர் தனது பெற்றோர்கள் தான் என்று உணரவேண்டும். நபியவர்கள் சொல்வதை கேளுங்கள்.

உலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ أَبُوكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 5971) 

பெற்றோருக்காகச் செலவிடுதல்
يَسْـــَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ”நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:215)

قَدِمْنَا الْمَدِينَةَ فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ النَّاسَ وَهُوَ يَقُولُ : يَدُ الْمُعْطِي الْعُلْيَا ، وَابْدَأْ بِمَنْ تَعُولُ : أُمَّكَ ، وَأَبَاكَ ، وَأُخْتَكَ وَأَخَاكَ ، ثُمَّ أَدْنَاكَ ، أَدْنَاكَ مُخْتَصَرٌ

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ”கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்” என்று கூறினார்கள்.

அறி: தாரிக் (ரலி),
நூல்: (நஸாயீ: 2532) (2485)

தாய், தந்தையருக்காக மாத வருமானத்தில் ஒரு தொகையை ஒதுக்கி செலவு செய்பவர்கள் எத்தனை பேர்? டிவி கேபிளுக்கு செலவு செய்கிறோம். பேப்பருக்கு செலவு செய்கிறோம். போனில் இன்டர்நெட்டுக்கு செலவு செய்கிறோம். எதற்கெல்லாமோ செலவு செய்கிற நாம், பெற்றோருக்கு கடந்த மாதம் எவ்வளவு செலவு செய்தோம்? சோறு போட்டு விட்டால் போதுமா? அவர்களுக்கு உடை வாங்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறோமா? வேறு ஏதேனும் தேவையிருக்கிறதா? என்று கேட்டிருப்போமா?

நாம் சிறுவயதில் இருந்தபோது, நம்மை இப்படித்தான் பார்த்தார்களா? என்பதை சிந்தித்து அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். இன்னும் சொல்வதாக இருந்தால் நாமும் நம்முடைய பொருளாதாரமும் அவர்களுடைய உழைப்பினால் வந்தது. அடித்தளம் அவர்கள் ஏற்படுத்தியது தான். அதனால் தான் நபியவர்கள் கூறுகிறார்கள்.

أَنَّ رَجُلاً أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى مَالاً وَوَلَدًا وَإِنَّ وَالِدِى يَجْتَاحُ مَالِى. قَالَ « أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ إِنَّ أَوْلاَدَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ فَكُلُوا مِنْ كَسْبِ أَوْلاَدِكُمْ

ஒரு மனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளன. எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகின்றது என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீயும், உனது செல்வமும் உன்னுடைய தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள் என்றார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: (அபூதாவூத்: 3530) (3063)

பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத்
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَهُ فِي الْجِهَادِ فَقَالَ أَحَىٌّ وَالِدَاكَ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ”உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ”ஆம் (உயிருடனிருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் ”அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)” என்று கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி),
நூல்: (புகாரி: 3004) 

இறையுதவியைப் பெற்றுத் தரும்
انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوُا الْمَبِيتَ إِلَى غَارٍ فَدَخَلُوهُ فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهِمُ الْغَارَ فَقَالُوا إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ فَقَالَ رَجُلٌ مِنْهُمُ اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلاً ، وَلاَ مَالاً فَنَأَى بِي فِي طَلَبِ شَيْءٍ يَوْمًا فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلاً ، أَوْ مَالاً فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلَى يَدَيَّ أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الْفَجْرُ فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوقَهُمَا اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ”நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர்.
அவர்களில் ஒருவர், ”இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன்.

அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து ” எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 2272) 

பெற்றோரின் தியாகத்திற்கு ஈடு செய்ய முடியாது
لاَ يَجْزِى وَلَدٌ وَالِدًا إِلاَّ أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தை) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்ய முடியாது.”

நூல்: (முஸ்லிம்: 3029) 

ஏன் இவ்வளவு சிறப்பு? ஒரு தாய் ஒரு மகனை கருவை சுமந்து, அவனை பெற்று வளர்ப்பது என்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை. ஒரு நாள் குழந்தையை சுமந்து பாருங்கள். குழந்தை அளவு பாரத்தை வயிற்றில் கட்டிப் பாருங்கள். ஒரே ஒரு நாள் இரவு தூக்கத்தை தியாகம் செய்து பாருங்கள். அவளோ, பலமாதங்கள் இப்படி சுமக்கிறாள். கஷ்டப்படுகிறாள். அதனால் தான் அல்லாஹ்வே அதனை சிலாகித்து கூறுகிறான்.

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌ ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ”என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்­லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 46:15)

தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்யாதவன் செல்லுமிடம் நரகம்தான்.
 قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«احْضَرُوا الْمِنْبَرَ» فَحَضَرْنَا فَلَمَّا ارْتَقَى دَرَجَةً قَالَ: «آمِينَ» ، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّانِيَةَ قَالَ: «آمِينَ» فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّالِثَةَ قَالَ: «آمِينَ» ، فَلَمَّا نَزَلَ قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لَقَدْ سَمِعْنَا مِنْكَ الْيَوْمَ شَيْئًا مَا كُنَّا نَسْمَعُهُ قَالَ: ” إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَرَضَ لِي فَقَالَ: بُعْدًا لِمَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يَغْفَرْ لَهُ قُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّانِيَةَ قَالَ: بُعْدًا لِمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ قُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّالِثَةَ قَالَ: بُعْدًا لِمَنْ أَدْرَكَ أَبَوَاهُ الْكِبَرَ عِنْدَهُ أَوْ أَحَدُهُمَا فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ قُلْتُ: آمِينَ

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மிம்பரைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அதனை கொண்டு வந்து வைத்தோம். அவர்கள் முதல் படியில் ஏறும் போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும்போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள்.

அவர்கள் இறங்கியபோது நாங்கள் ” அல்லாஹ்வின் தூதரே நாங்கள் இதுவரை கேட்டிராத ஒரு விஷயத்தை உங்களிடமிருந்து இன்று கேட்டோமே” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் ” ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு காட்சி தந்து, ”எவன் ரமலான் மாதத்தை அடைந்தும் அவனுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” (இறைவா இதை ஏற்றுக் கொள்வாயாக) என்று கூறினேன்.

இரண்டாவது படியில் நான் ஏறும்போது, ”யாரிடம் (நபியாகிய) நீங்கள் நினைவு கூறப்பட்டும் உங்கள் மீது அவன் ஸலவாத்து சொல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” என்று கூறினேன்.

நான் மூன்றாவது படியில் ஏறும்போது ” எவனிடம் அவனுடைய பெற்றோர்கள் இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமைப் பருவத்தை அடைந்து (அவர்களுக்குப் பணிவிடை செய்வதின் மூலம் ) அவன் சொர்க்கம் செல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” என்று கூறினேன்.

அறி: கஅப் பின் உஜ்ரா (ரலி),
நூல்: (ஹாகிம்: 7256) பாகம் : 4 பக்கம் : 170

 قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«رَغِمَ أَنْفُهُ، ثُمَّ رَغِمَ أَنْفُهُ، ثُمَّ رَغِمَ أَنْفُهُ» قِيلَ: مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا، ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ»

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்” என்றார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 4988) 

பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

இந்த பெற்றோர்களுக்காக நாம் செய்யவேண்டிய பிரார்த்தனைகளை மார்க்கம் நமக்கு கற்றுத் தருகிறது.

 وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

”சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!”

(அல்குர்ஆன்: 17 : 28)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

(அல்குர்ஆன்: 14 : 41)

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِي مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

”என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக”

(அல்குர்ஆன்: 71 : 28)

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنْ الْمُسْلِمِينَ

”என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லி­ம்களில் ஒருவன்”

(அல்குர்ஆன்: 46 : 15)

பெற்றோரை பேணி, இது போன்ற பிரார்த்தனைகளையும் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்து அருள்புரிவானாக!

தாயின் காலடியில் சொர்க்கம்
أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ، فَقَالَ : يَا رَسُولَ اللهِ ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ ، فَقَالَ : هَلْ لَكَ مِنْ أُمٍّ ؟ قَالَ : نَعَمْ ، قَالَ : فَالْزَمْهَا ، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே நான் போருக்குச் செல்ல நாடுகிறேன். உங்களிடம் ஆலோசனை பெறுவதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். நபியவர்கள் ”உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர் ”ஆம்” என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள் ”உன்னுடைய தாயைப் (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். நிச்சயமாக சொர்க்கமாகிறது அவளுடைய இரு பாதங்களின் கீழ்தான் இருக்கிறது”. என்று கூறினார்கள்.

நூல்: (நஸாயீ: 3104) (3053)

எனவே இஸ்லாம் மார்க்கம் காட்டி தந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாய் நம்மை ஆக்கி அருள் புரிவனாக..!