G.S.T. வசூலும் உண்மை நிலையும்
G.S.T. வசூலும் உண்மை நிலையும்
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் 89 ஆயிரத்து 264 கோடி ரூபாய் வசூலானது. அதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18 ஆயிரத்து 652 கோடி மத்திய ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.25 ஆயிரத்து 704 கோடி மாநில ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.50 ஆயிரத்து 348 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.21 ஆயிரத்து 246 கோடி இறக்குமதி வசூலாகவும். உபரி வரி வசூல் மூலம் ரூ.8 ஆயிரத்து 554 கோடியும் என ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.
இது ஏப்ரல் மாதத்தில் மட்டும் கிடைத்த வசூலாகும். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. மூலம் வசூலாகும் தொகையை வைத்து பொருளாதாரம் வளர்ச்சியடைந்து விட்டது என்று சொல்லி விட முடியாது. கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய மனிதவள மேம்பாட்டுக் குறியீடு அதிகரிக்க வேண்டும். இந்த மனித வளக் குறியீடு அதிகரிக்காமல் பொருளாதாரம் வளர்ச்சி பெற முடியாது என்பதை இந்தியாவின் முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சமீபத்தில் கூறி இருக்கிறார்.
உலக அளவில் மனித வளக் குறியீட்டில் இந்தியா 135-வது இடத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்? மோடியின் மத்திய அரசு எல்லா விஷயத்திலும் பொய்யை மட்டுமே கூறி வருகிறது. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் மனித வளக் குறியீட்டை மறைத்து விட்டு, ஜி.எஸ்.டி.யை மட்டும் காட்டி பொய்யுரைக்கிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தாயும், மகளும் தங்களை வெறும் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொண்டார்கள்.
இந்தத் தொகையைக் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிய ஒருவர், தாயைக் கற்பழித்து கொலை செய்து விட்டு, சிறுமியை அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து போலீசாரிடம் மாட்டி, தற்போது சிறையில் உள்ளார். இப்படி வெறும் 35 ஆயிரம் ரூபாய்க்கு தன்னைத் தானே விற்றுக் கொள்ளும் நிலைமைத் தான் நாட்டில் உள்ளது. இந்த உண்மை நிலைக்கு மோடி அரசு மூடி போட்டு விட்டு, ஜி.எஸ்.டி. கணக்கைக் காட்டி, இந்தியா வளர்ச்சி பெற்று விட்டது என கதை திரிக்கக் கூடாது.
Source : unarvu ( 18/05/2018 )