ரமளானில் எழுபது மடங்கு கூலியா?
கீழ்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை. பொய்யானவை.பலவீனமானவை.
ரமளானில் எழுபது மடங்கு கூலியா?
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தின் இறுதியில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) மனிதர்களே! உங்களுக்கு மகத்துவம் மிக்க, அருள் நிறைந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். இரவில் தொழுவதை உபரியான வணக்கமாக ஆக்கியுள்ளான். நன்மையான காரியம் ஏதாவது ஒன்றைச் செய்தால் அவன் அதுவல்லாத ஒரு கடமையான செயலைச் செய்வதன் போன்றாவான். அம்மாதத்தில் ஒரு கடமையான செயலைச் செய்தால் அதுவல்லாத எழுபது கடமையான செயலைச் செய்தவன் போன்றாவான். இது பொறுமைக்குரிய மாதமாகும். பொறுமையின் கூலி சொர்க்கமாகும். மேலும் (இது) பெருந்தன்மையுடன் நடக்கும் மாதமாகும். முஃமின்களின் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதமாகும். யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்புதிறக்க செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். நரகத்திலிருந்து பாதுகாப்பாக அமையும். மேலும் (நோன்பு நோற்றவரின்) கூலிபோன்று இவருக்கும் வழங்கப்படும். அவரின் கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! எங்களின் அனைவரும் நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யும் அளவு (வசதி படைத்தவர்கள்) இல்லையே! என்று கூறினோம். அப்போது யார் தண்ணீர் கலந்த பாலை அல்லது பேரீச்சம் பழத்தை அல்லது தண்ணீரை கொடுத்தாலும் இந்த நன்மையை அல்லாஹ் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் நோன்பாளிக்கு வயிறு நிரம்ப (உணவு வழங்கி) நோன்பு துறக்கச் செய்கிறாரோ அவருக்கு என்னுடைய ஹவ்லுல் (கவ்ஸரில்) சொர்க்கம் செல்லும் வரைக்கும் அல்லாஹ் நீர் புகட்டுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த மாதத்தின் முதல் பகுதி அருளுக்குரியதாகும். நடுப்பகுதி மன்னிப்புக்குரியதாகும். இறுதிப்பகுதி நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதாகும். யார் அந்த மாதத்தில் அடிமையிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரோ அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். மேலும் நரகத்திலிருந்து அவரை விடுதலை செய்கிறான்.
நீங்கள் நான்கு விசயங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்கள் உங்களை இறைவனை திருப்திக் கொள்ள செய்வதாகும். இரண்டு விஷயங்கள் உங்களுக்கு அவசியமானதாகும்.
உங்கள் இறைவனை திருப்திக் கொள்ள செய்யும் இரண்டு விஷயங்கள் : 1. வணங்குவதற்கு தகுதியானவான் அல்லாஹ் ஒருவனே என்று உறுதிகூறுவதாகும். 2. அவனிடம் பாவமன்னிப்பு கோருவதாகும்.
உங்களுக்கு அவசியமான இரண்டு விஷயங்கள் : 1. அவனிடம் சொர்க்கத்தை கேட்பதாகும். 2. நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸல்மான் பாரிஸி (ரலி),
நூல் : ஷுஅபுல் ஈமான்- பைஹகீ, பாகம் : 5, பக்கம் :223
இதே செய்தி ஸஹீஹ் இப்னு ஹுஸைமா பாகம் :3, பக்கம் :191, பைஹகீ அவர்களில் பலாயிலுல் அல்அவ்காத், பாகம் :1, பக்கம் : 147 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நூல்களிலும் அலீ பின் ஜைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.