அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்!

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே! என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்க, மக்கள் ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், நான் கடும் வேதனை யொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன் என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கூறினான்.

அப்போது தான் அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்…… என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

(புகாரி: 4770)