அநாதை பெண்ணை மணந்த போது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. ஆகவே அவர் விஷயத்தில்தான் அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம் எனும் (4:3ஆவது) வசனம் இறங்கிற்று. (புகாரி: 4573)
அறிவிப்பாளர் (ஹிஷாம் பின் யூசுஃப், அல்லது ஹிஷாம் பின் உர்வா-ரஹ்) கூறுகிறார்:
(இதை அறிவித்த போது) உர்வா (ரஹ்) அவர்கள், அந்தப் பேரீச்ச மரத்திலும் அவரது செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள் என்று அறிவித்தார் என்று நான் எண்ணுகிறேன்.2
4574 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன் றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம் எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கின்ற- அவருடைய செல்வத்தில் கூட்டாக இருக் கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் – மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் – அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புகின் றார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.
இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.
இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர் என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான்.
மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (4:127) உயர்வுக்குரிய அல்லாஹ் மேலும் யாரை நீங்கள் மணந்து கொள்ள விரும்புவ தில்லையோ… என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும் போது அவளை (மணந்து கொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.
அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும் போது அவர்களை மணந்து கொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.3