நிர்வாகத் தேர்வின் போது கூற வேண்டிய விஷயங்கள்?

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்
  • பொறுப்பு ஓர் அமானிதம்
  • துன்பத்தில் மிகப்பெரும் துன்பம்
  • மக்களில் சிறந்தவர்கள்
  • தலைமைக்கு  கட்டுப்படுதல்
  • விவேகம்
  • மென்மையை கடைபிடித்தல்
  • மென்மையால் கிடைக்கும்  நன்மைகள்
  • மென்மையால் மக்களை வென்றெடுத்த நபிகளார்
  • மக்களிடத்தில் நபிகளார் நடந்த விதம் 
  • துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே) பொறுமை
  • மஷூரா செய்தல் 
  • ஒருங்கிணைப்பு 
  • இக்லாஸே அடிப்படை 
  • நோக்கமே அடிப்படை 
  • நன்மையை நாடி செய்யும் நற்செயல் எதுவாயினும் அதற்கும் கூலியே 
  • சிறந்த தலைவர் யார்? 
  • பொறுப்பாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை

பொறுப்பு ஓர் அமானிதம்:

பொறுப்பு எனும் அமானிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا

‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம்.

யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 3729) 


துன்பத்தில் மிகப்பெரும் துன்பம்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»،

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.

ஆதாரம்: (புகாரி: 7148) 


மக்களில் சிறந்தவர்கள்:

تَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ فِي هَذَا الشَّأْنِ أَشَدَّهُمْ لَهُ كَرَاهِيَةً حَتَّى يَقَعَ فِيهِ

“இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்’’ என்று கூறப்படுகிறது.

ஆதாரம்: (முஸ்லிம்: 4945) 


தலைமைக்கு  கட்டுப்படுதல் 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் (ஆட்சியிலுள்ள) அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன்: 4:59)

(குறிப்பு: இதில் வரும் உலுல் அம்ர் என்போர், ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களாவர்)


விவேகம்

உறுதி, வீரம், பொறுமை போன்ற அத்தனை ஆற்றல்களும் “முட்டாள்’ என்ற பெயரை வாங்கித் தந்து விடாமல் இருப்பதற்கு விவேகம் மிகவும் முக்கியம். எதை முதலில் செய்ய வேண்டும்? எதை எங்கு செய்ய வேண்டும்? எப்போது பொங்கி எழ வேண்டும்? எப்போது பின் வாங்க வேண்டும்? என சூழ்நிலை, நேரத்தைப் பொறுத்துச் செய்யப்படும் முடிவு தான் விவேகம்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியாவில் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். அவர்கள் மக்கத்துக் காபிர்களுக்குப் பணிந்து போய்விட்டார்கள் என நபித்தோழர்கள் எல்லாம் எண்ணினார்கள். ஆனால் அவர்களின் தூர நோக்குப் பார்வையை அல்லாஹ், “மகத்தான வெற்றி’ என்று பாராட்டுகின்றான்.

48:1   اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ‏
48:2   لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏
48:3   وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا‏

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

(அல்குர்ஆன்: 48:1-3) 


மென்மையை கடைபிடித்தல் 

 قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مَنْ حُرِمَ الرِّفْقَ حُرِمَ الْخَيْرَ أَوْ مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

அறி: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5052) 

பிறரிடத்தில் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளும் பக்குவம் இழந்தவர் எந்த நன்மையையும் பெறமுடியாது என்று நபிகளார் கூறுகின்றார்கள்.


மென்மையால் கிடைக்கும்  நன்மைகள்

أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ  يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِى عَلَى الرِّفْقِ مَا لاَ يُعْطِى عَلَى الْعُنْفِ وَمَا لاَ يُعْطِى عَلَى مَا سِوَاهُ

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5055) 


மென்மையால் மக்களை வென்றெடுத்த நபிகளார்.

மது, மாது, சூது, விபச்சாரம் போன்றவைகள் மலிந்திருந்த காலம் அறியாமைக்காலம். இவைகள் தான் அக்காலத்து மக்களின் அன்றாட பொழுது போக்குகள். இவைகளை செய்பவர் முழுமையான மனிதராகவும், செய்யாதோர் கேவலமாகவும் பார்க்கப்பட்ட காலம். இக்காலத்து மக்களிடையே தான் நபிகளார் சத்தியப்பிரச்சாரம் செய்து அவர்களை, பண்புள்ளவர்களாக, ஒழுக்கசீலர்களாக, தியாகிகளாக வார்த்தெடுத்தார்கள்.

இறுதியில் நபிகளாருக்காக எதையும் இழப்பதற்கு அது உயிராக இருந்தாலும் தயார் எனுமளவில் ஒரு பெரும் கூட்டம் உருவாகியிருந்தது. காட்டுமிராண்டித்தனமான குணங்கள் கொண்டவர்களை இந்த நிலைக்கு மாற்றியதற்கு முழுமுதற்காரணம் நபிகளாரின் மென்மையான அணுகுமுறையே.

அனைத்து மக்களையும் நபிகளார் வென்றெடுத்ததற்கு அவர்களின் மென்மையான அணுகுமுறை ஒரு காரணம். இதை இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌‏

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 3:159)

சத்தியக் கொள்கையின் பால் மக்களை வென்றெடுக்க நபிகளார் தன் கைவசம் வைத்திருந்த மென்மை எனும் வழிமுறையை நாம் நம் வசமாக்கினால் அதற்கான பலன் கிடைப்பது உறுதி.


மக்களிடத்தில் நபிகளார் நடந்த விதம் 

أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ النَّاسُ مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ، فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ، فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَعْطُونِي رِدَائِي، لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ العِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلًا، وَلاَ كَذُوبًا، وَلاَ جَبَانًا»

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள்.

 நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் சற்ற நின்று, ‘என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்’ என்று கூறினார்கள்

அறி: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)

(புகாரி: 2821)

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலை வராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்க ளுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை.

போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.

‘என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது’ என்று கூறவில்லை. மாறாக ‘இம்மரங்களின் எண்ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்கு வேன்’ என்று கூறுவதிலிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا»، ثُمَّ قَالَ: «أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِلَّا أَمْثَلَ مِنْ سِنِّهِ، فَقَالَ: «أَعْطُوهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً»

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள்.

நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்

அறி: அபூ ஹுரைரா(ரலி)

(புகாரி: 2306)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர் மேல் ஆத்திரப்படும் அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்கிறார்.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்தால் அதைத் திரும்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித் தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத் தான் கடனைக் கேட்க முடியும்.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கடனை வசூலிப்பது ஒரு புறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூடக் கேட்க முடியாது.

அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படிக் கேட்க முடியுமா?

இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும், ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போதும் ‘தாம் ஒரு இறைத்தூதர்; மாமன்னர்; மக்கள் தலைவர்; இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்று அந்த மாமனிதர் எண்ணவில்லை.

தமது நிலையிலிருந்து இதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனைத் தாமதமாகத் திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும், சிரமங்களையும், மன உளைச்சல்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால் தான் ‘கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது’ எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.

தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.

மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.

கடுஞ்சொற்களை என்ன தான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்த வரை குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.

ஆனால், இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனை விட அதிக மாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.

அதே போன்று மற்றொரு சம்பவத்தை பாருங்கள். 


துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே) பொறுமை:

مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «اتَّقِي اللَّهَ وَاصْبِرِي» قَالَتْ: إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ، فَقِيلَ لَهَا: إِنَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ، فَقَالَتْ: لَمْ أَعْرِفْكَ، فَقَالَ: «إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

கப்ருக்கருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!’ என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்பட வில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள்.

அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. ‘நான் உங்களை (யாரென) அறியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அனஸ் இப்னு மாலிக்(ரலி)

(புகாரி: 1283)

ஆட்சித் தலைவர்கள் வெளியே வருகிறார்கள் என்றால் வருபவர் ஆட்சித் தலைவர் தான் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தான் வருவார்கள்.

கிரீடம் உள்ளிட்ட சிறப்பு ஆபரணங்கள், முன்னும் பின்னும் அணிவகுத்துச் செல்லும் சிப்பாய்கள், பராக் பராக் என்ற முன்னறிவிப்பு போன்றவை காரணமாக மன்னரை முன்பே பார்த்திராதவர்களும் கூட ‘இவர் தான் மன்னர்’ என்று அறிந்து கொள்ள முடியும்.

மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி நடக்கும் போது கூட இத்தகைய ஆடம்பரங்கள் இன்றளவும் ஒழிந்தபாடில்லை.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு அறிவுரை கூறுகிறார்கள். தமக்கு அறிவுரை கூறுபவர் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்பது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் சாதாரண உடையில் நபிகள் நாயகம் இருந்ததும், பல்லக்கில் வராமல் நடந்தே வந்ததும், அவர்களுடன் பெரிய கூட்டம் ஏதும் வராததுமே நபிகள் நாயகத்தை அப்பெண் அறிந்து கொள்ள இயலாமல் போனதற்குக் காரணமாகும்.

‘உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ’ என்று அப்பெண் கூறும் போது ‘நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா?’ என்று அப்பெண்ணிடம் அவர்களும் கேட்கவில்லை. உடன் சென்ற அவர்களின் பணியாளர் அனஸ் என்பாரும் கேட்கவில்லை. இதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) சென்று விடுகிறார்கள்.

தமக்கு அறிவுரை கூறியவர் தமது நாட்டின் அதிபதி என்று அறிந்து கொண்டு ஏனைய அதிபதிகளைப் போல வாயிற்காப்போரின் அனுமதி பெற வேண்டியிருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அவர் வருகிறார். ஆனால் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு எந்தக் காவலாளியும் இருக்கவில்லை. உலகிலேயே காவலாளி யாரும் இல்லாத ஒரே ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாகத் தான் இருக்க முடியும்.

தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்கத் தான் அப்பெண்மணி வருகிறார். ‘உங்களை அறியாமல் அலட்சியமாக நடந்து விட்டேன்’ எனக் கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அதைப் பொருட்படுத்தவே இல்லை. மாறாக, இந்த நிலையிலும் அவருக்கு முன்னர் கூறிய அறிவுரையைத் தான் தொடர்கிறார்கள். ‘துன்பம் வந்தவுடனேயே அதைச் சகிப்பது தான் பொறுமை’ என்று போதனை செய்கிறார்கள். அப்பெண்ணின் அலட்சியம் நபிகள் நாயகத்தைக் கடுகளவு கூட பாதிக்கவில்லை என்பதற்கு இது சான்றாகவுள்ளது.

பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி எந்த மரியாதையையும் அடைய அவர்கள் விரும்பவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.


மஷூரா செய்தல் 

  فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:159)

முதிர்ந்த வயதும் சிறந்த அனுபவமும் பெற்றிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குடிமக்களின் நலன் தொடர்பாக இரவில் ஆலோசனை செய்வார்கள். 

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முஸ்லிம்களின் காரியம் குறித்துத் பேசுவார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருப்பேன்.

(அஹ்மத்: 175)

பிரச்சனைகள் ஏற்படும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் குறிக்கிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுவார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தீர்ப்புக் கூறுவார்கள்.


ஒருங்கிணைப்பு 

قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قِسْمَةً، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ، قُلْتُ: أَمَا وَاللَّهِ لَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ وَهُوَ فِي مَلَإٍ فَسَارَرْتُهُ، فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ ثُمَّ قَالَ: «رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்’ என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன்’ என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்களிடம் சென்றேன். 

அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்டபோது) தம் முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘(இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதை விட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமையு(டன் சகித்துக்) கொண்டார்’ என்றார்கள்.

அறி: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)

(புகாரி: 6291)

ஒரு காரியத்தைச் செய்து விட்டால் பாராட்டுக்கள் குவிய வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் மிகையான தன்னம்பிக்கையின் வெளிப்பாடே.

இந்தக் குண நலன்கள் குடி கொண்ட ஒரு நிர்வாகி தானும் அழிந்து, தான் சார்ந்த நிர்வாகத்தையும் அழித்து விடுவார்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களைக் கொண்டு அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குப் பாடம் புகட்டினான். கண் தெரியாத நபித்தோழரான அவர் புறக்கணிக்கப்பட்டார் என 80வது அத்தியாயம் 1 முதல் 12 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றான். அதன் பின்னர் எப்போது உம்மி மக்தூம் (ரலி) அவர்களைப் பார்த்தாலும் நபி (ஸல்) கண்ணியப்படுத்துவார்கள். “இவரால் தான் எனக்கு இறைவன் திருந்திக் கொள்ள வாய்ப்பளித்தான்’ என நினைவு கூர்வார்கள். இது தான் முன்மாதிரி நிர்வாகியின் முன்மாதிரி.


இக்லாஸே அடிப்படை 

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ‏

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக, பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.

(அல்குர்ஆன்: 98:5)

إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ

நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடலையோ! தோற்றத்தையோ! பார்க்க மாட்டான். எனினும் உங்கள் உள்ளத்தையும், செயல்களையுமே! பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5012) 


நோக்கமே அடிப்படை 

 فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், அவன் தூதருக்காகவும் ஆகிவிடுகிறதோ! அவரது ஹிஜ்ரத் கூலி இறைவனிடம் பெற்றுக் கொள்வார். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ளும் உலகிற்காகவோ! அவர் மணமுடிக்க விரும்பும் பெண்ணிற்காகவோ! ஆகிவிடுகிறதோ அந்த ஹிஜ்ரத் அதற்கே ஆகிவிடும்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல் : (புகாரி: 1), (முஸ்லிம்: 3868) 

நன்மையை நாடி செய்யும் நற்செயல் எதுவாயினும் அதற்கும் கூலியே 

«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَّرَهُ فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒரு மனிதர் ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப்போட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு அருளினான்.

(முஸ்லிம்: 5105)


சிறந்த தலைவர் யார்?

عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خِيَارُ أَئِمَّتِكُمِ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَشِرَارُ أَئِمَّتِكُمِ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ فَقَالَ لَا مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلَاتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ فَاكْرَهُوا عَمَلَهُ وَلَا تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள்.

உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.

அறி : அவ்ஃப் பின் மாலிக் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 3778) 


பொறுப்பாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை:

சமுதாய விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு சிறப்புமிக்க பிரார்த்தைனையை இறைவனிடத்தில் பிரத்தியேகமாக நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். இந்தப் பிரார்த்தனைகளுக்குச் சொந்தக்காரர்களாக, பொறுப்பாளிகள் மாற முயற்சிக்க வேண்டும்!

 يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக!

என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

ஆதாரம்: (முஸ்லிம்: 3732) 

பொறுப்பாளியாக இருப்பவர் மக்களுக்கு சிரமத்தையோ அல்லது சிரமம் தருகின்ற வேலையிலோ ஈடுபட்டால் அல்லாஹ்வின் அந்தப் பொறுப்பாளிகளுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவான். எனவே, மக்களிடத்தில் மென்மையான முறையில் பொறுப்புகளைக் கையாள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.

குறிப்பு : கொடுக்கப்பட்ட நேரத்தை பொறுத்து, உரையை ரத்தினச்சுருக்கமாக அமைத்து கொள்ளவும். மேலும் மேற்கூறிய செய்திகள் அனைத்தையும், சங்கிலித்தொடராக பேசி, புதிய நிர்வாகத்திற்கு புத்துணர்வு ஏற்படும் வகையில் உரையை அமைத்துக் கொள்ளுங்கள். அனைத்திற்கும் அல்லாஹ் அருள் புரிவனாக.!

நவீத் அஹ்மத் Misc