011. ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்யலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அவர்களின் காலத்தில் நபித்தோழர்களோ ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்ததாக நேரடியாக ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை பித்அத் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை இவர்கள் கவனிக்கத் தவறி விட்டதால் இந்தத் தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.
பொதுவாக வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒருவர் தான் விரும்பிய அளவிற்கு உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் வணக்கங்களை நிறைவேற்றலாம். சுய விருப்பத்தின் பேரில் உபரியாக நிறைவேற்றும் வணக்கத்திற்கு நஃபில் என்று கூறுகிறோம்.
உதாரணமாக ஒருவர் தடுக்கப்பட்ட நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அவர் விரும்பிய அளவிற்கு தொழுது கொள்ளலாம். அதே போன்று விரும்பிய நாட்களில் அவர் நோன்பு நோற்கலாம். தான் நாடிய அளவிற்கு தர்மங்களை எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்) என்றார்கள். அவர் இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தைத் தவிர என்றார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.
கடமையான வணக்கங்கள் தவிர நாமாக விரும்பி நம்முடைய வசதி வாய்ப்புக்கேற்ப வணக்கம் புரிய மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்பதை நாம் இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
ஹஜ்ஜையும், உம்ராவையும் பேசும் வசனத்தில் கூட இதைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். அறிந்தவன்.
மேற்கண்ட ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட ததவ்வுஃ என்ற அதே வார்த்தை தான் இந்த ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யார் தானாக விரும்பி மேலதிகமாகச் செய்கிறாரோ அதற்குக் கூலி தருவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் வாக்களிக்கிறான். ஹஜ் உம்ராவைப் பேசிவிட்டு மேலதிகமாகச் செய்பவருக்கு கூலி உண்டு எனக் கூறப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் ஹஜ் செய்யலாம். ஹஜ்ஜைப் பொறுத்த வரை ஒரு பயணத்தில் ஒரு முறை மட்டுமே செய்ய இயலும். எனவே ஒரு பயணத்தில் பல ஹஜ்ஜை செய்யலாமா? என்ற கேள்வி இங்கே எழாது.
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سِنَانٍ عَنْ ابْنِ عَبَّاسٍ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அக்ரவு பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்.
ஆக பொதுவாக வணக்கங்களை உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் செய்வதற்கு மார்க்கம் அனுமதியளித்திருக்கின்றது. இந்தப் பொதுவான அனுமதியின் கீழ் உம்ராவும் அடங்கும். உம்ராவுக்கு மட்டும் இந்தச் சட்டம் பொருந்தாது என்றால் அதைக் கூறும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை.
எனவே ஒரு பயணத்தில் பல உம்ராக்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இதை பித்அத் என்று கூறுவது தவறு.