11) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-11
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:
சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ பிக்க வளஅத்து ஜன்பீ, வ பிக்க அர்ஃபஉஹு, இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா. வ இன் அர்சல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பி மா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: இறைவா! நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அமமார் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிவிட்டு, வேறு பக்கத்தில் திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)