07) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-7
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்வதிலும், தொழுகையின் முதல் வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிந்தால் (அதை அடைய) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். ஆரம்ப வேளையில் விரைந்து சென்று தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிந்தால் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும், ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிந்தால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் அதை (பானத்தில்) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போடட்டும். ஏனெனில் (அதன்) இரு இறகுகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
வியாழன் திங்கள் ஆகிய நாட்களில் செயல்கள் சமர்பிக்கப்படுகின்றன. நோன்பு வைத்த நிலையில் எனது செயல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுவதை விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை மூக்கைச் சிந்திக் கொள்ளுங்கள். ஏனெனில், மூக்கின் உள் பகுதிக்குள் ஷைத்தான் தங்கி இருக்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள், (சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை உறிஞ்சுமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். “உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)