008. பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?
பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?
தாய் தந்தையினர் உயிருடன் இருந்தால் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.
1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்துகொண்டிருந்த போது “கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.
1939 و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ أَبُو الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ قَالَ فَقَالَ وَجَبَ أَجْرُكِ وَرَدَّهَا عَلَيْكِ الْمِيرَاثُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَصُومُ عَنْهَا قَالَ صُومِي عَنْهَا قَالَتْ إِنَّهَا لَمْ تَحُجَّ قَطُّ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ حُجِّي عَنْهَا رواه مسلم
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். அப்பெண்மணி, “என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். அப்பெண்மணி, “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
பெற்றோர்கள் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் ஹஜ் செய்வது அவர்களின் மீது கடமையாகிவிடும். இந்நிலையில் அவர்களால் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் போனால் அவர்களது சார்பில் அவர்களுடைய பொறுப்பாளர்கள் அதாவது உறவினர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.
1852 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :
ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.
6699 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَاقْضِ اللَّهَ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.
புகாரி (6699)
ஹஜ்ஜோடு சேர்த்து, உம்ரா செய்யலாம். தனித்து கூடாது.
பெற்றோர்களுக்காக பிள்ளைகள், ஹஜ்ஜோடு சேர்த்து, உம்ரா செய்வதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பெற்றோர்களின் சார்பில் பிள்ளைகள் ஹஜ்ஜோடு சேர்த்து, உம்ரா செய்யலாம்.
852 حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الْحَجَّ وَلَا الْعُمْرَةَ وَلَا الظَّعْنَ قَالَ حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي
அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதி (852)
ஹஜ் உம்ரா செய்வதற்கு பெற்றோர்களால் முடியாமல் போனாலே அவர்கள் சார்பில் பொறுப்பாளர்கள் நிறைவேற்ற முடியும். பெற்றோர்களுக்கு சக்தி இருந்தால் இவ்வணக்கத்தை அவர்களே நிறைவேற்ற வேண்டும். உறவினர்கள் நிறைவேற்றக் கூடாது.
ஹஜ் என்பது ஒருவர் மீது கடைமையான நிலையில் அவர் ஹஜ்ஜை மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்பட்ட மூன்று வகையான ஹஜ்ஜில், தமத்தூ மற்றும் கிரான் ஆகிய இருவகையான ஹஜ்ஜுகளில் உம்ராவையும் இணைத்து செய்யும் போது செய்யக்கூடிய உம்ராவை பற்றித்தான் இந்த நபித்தோழர் கேள்வி கேட்கின்றார். அப்போது செய்யும் உம்ராவை பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே, இந்த ஹதீஸை தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. மேலும், ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை. தனித்து உம்ரா செய்யவேண்டும் என்பது நம்மீத்து கட்டாய கடமையும் இல்லை
சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?
ஹஜ் செய்வதை பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,
“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை”
அல்குர்-ஆன் 3:97
வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவர் ஹஜ் செய்யவேண்டும் என்றால், அதற்குரிய சக்தி அவரிடத்தில் இல்லை. அப்போது இவருக்குத்தான் ஹஜ் செய்ய சக்தியில்லையே, இவர் மீது ஹஜ் கடமையாகுமா? என்றால், இவர் மீது ஹஜ் கடமையில்லை. அதே நேரத்தில் அவர் உடல் வலிமையும், பொருளாதாரத்தையும் பெற்று திடகாத்திரமாக இருந்த நிலையில் அவர் மீது ஹஜ் கடமையாகி, அவர் அப்போது ஹஜ் செய்யாமலிருந்து இருப்பாரேயானால், அவர் சக்தி பெற்றிருந்த நிலையில் ஹஜ் செய்யாமல் விட்டதை, அவர்களுடைய வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
கடன் வாங்கிய ஒருவர் அந்த கடனை நிறைவேற்றுவது கட்டாயம் என்பது போல, அவர் திடகாத்திரமாக இருந்த போது கடமையாகிய ஹஜ்ஜைத்தான் அவர் நிறைவேற்றியாக வேண்டுமே ஒழிய, ஒருவர் வாங்காத கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்லுவது எப்படி நீதியாகாதோ, அதைப்போல கடைமையாகத ஹஜ்ஜை அவர் செய்யவேண்டும் என்று சொல்லுவதும் நீதியாகாது.
மேற்கண்ட அடிப்படையில் இந்த சட்டத்தை விளங்கிக்கொண்டால் தான் சக்திபெற்றவர் மீது ஹஜ் கடமை என்ற வசனத்திற்கும், வயது முதிர்ந்த நிலையில் உள்ளவர்களுக்காக அவரது பொறுப்பாளர்கள் ஹஜ் செய்ய வேண்டும் என்ற நபிமொழிக்கும் எந்த முரணும் இல்லாமல் விளங்க முடியும்