விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலை என்ன?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலை என்ன?

ஒருவரின் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். யார் என்ன செயல் புரிகிறார்களோ அந்தச் செயல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகளாவர். ஒருவர் செய்த நன்மை பிறருக்கு வழங்கப்படாததைப் போன்று ஒருவர் செய்த தீமை மற்றவர் மீது சுமத்தப்படாது.

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” அல்குா்ஆன் 53 38 39

பெற்றோர்கள் விபச்சாரம் எனும் தவறான உறவில் ஈடுபட்டால் அவர்கள் தான் குற்றத்திற்குரியவர்கள். இஸ்லாமிய ஆட்சி இருந்திருந்தால் தண்டனைக்குரியவர்கள். அல்லாஹ் மன்னிக்காவிட்டால் மறுமையிலும் தண்டனைக்கு உரியவர்களாவர்.

தகாத உறவில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கும் இந்தப் பாவத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் செய்த பாவத்தில் இந்தக் குழந்தைக்கு எந்தப் பங்கும் கிடையாது.

விபச்சாரம் செய்தவர்களை தான் இறைவன் மறுமையில் தண்டிப்பானே தவிர அதனால் பிறந்த குழந்தையை அக்காரணத்திற்காக ஒரு போதும் இறைவன் தண்டிக்க மாட்டான்.

மேலும் எல்லா குழந்தையும் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தான் பிறக்கின்றதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1385)

விபச்சாரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த பாவத்தில் எந்த பங்கும் கிடையாது. நபியவர்கள் விபச்சாரத்தில் பிறந்த குழந்தையை முஸ்லிம்களிடம் ஒப்படைத்துள்ள சம்பவமும் இதற்கு தெளிவான எடுத்துக் காட்டாகும்.

ஒரு பெண் விபச்சாரம் செய்ததை தானாக முன்வந்து ஒப்புக் கொண்டு தண்டனையை நிறைவேற்றுமாறு கேட்டார். அவருக்கு தண்டனை வழங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

சுருக்கம்

(முஸ்லிம்: 3500)

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையாயினும் அதுவும் இஸ்லாமிய மார்க்கத்தில் தான் பிறக்கின்றன. பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் செயல்பாடுகள் என்னவோ அதற்குத் தான் அந்தக் குழந்தைகள் பொறுப்பாளிகளாவர்.