03) கடல் பயணம்
03) கடல் பயணம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்முஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தில் சிலர் இறைவழியில் (போரிடுவதற்காகக்) கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும்’ என்று கூறினார்கள்.
அதற்கு உம்மு ஹராம்(ரலி), ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம்(ரலி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உம்மு ஹராம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள். பிற்பாடு செல்பவர்களில் ஒருவராக இருக்க மாட்டீர்கள்’ என்று கூறினார்கள்.
பிறகு, உம்மு ஹராம்(ரலி) உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களை மணந்தார்கள். பிறகு கரழா இப்னு அப்தி அம்ர் என்பவரின் மகளுடன் (அறப் போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)