இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டலாமா?
பின்வரும் வசனம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் பாலூட்ட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது.
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ (233) 2
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
அல்குர்ஆன் (2 : 233)
தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்கள் கட்டாயமாக பாலூட்ட வேண்டும் என்றே இவ்வசனம் கூறுகின்றது.
இரண்டு வருடத்திற்குப் பிறகு பாலூட்ட வேண்டும் என்ற கருத்தையோ பாலூட்டக் கூடாது என்ற கருத்தையோ இது கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு வருடம் கழித்தும் குழந்தைகளுக்குப் பாலூட்டும் வழக்கம் இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறியலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (பால்குடி உறவு ஏற்பட வேண்டுமானால்) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: திர்மிதி 1072
இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கும் பாலூட்டும் வழக்கம் மக்களிடையே இருந்துள்ளதால் இது பற்றி ஒரு சட்டத்தை நபியவர்கள் விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
நபியவர்கள் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒரு குழந்தைக்குப் பாலூட்டினால் அதனால் பால்குடி உறவு ஏற்படாது என்ற சட்டத்தை மட்டுமே மக்களுக்கு விளக்குகிறார்கள். ஆனால் இவ்வாறு பாலூட்டுவதை அவர்கள் தடை செய்யவில்லை.
எனவே பால் குடி காலம் இரண்டு வருடம் கடந்த பின்பும் குழந்தைக்குத் தாய் பாலூட்டினால் அதில் தவறேதுமில்லை.