33) முத்தலாக்கா? மூன்று தலாக்கா?

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

முத்தலாக்கா? மூன்று தலாக்கா?

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.

இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்லிம்: 2689, 2690, 2691)

ஒரே அமர்வில் மூன்று தலாக் என்று ஒருவன் கூறினாலும் முப்பது தலாக் என்று கூறினாலும் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.

மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் சொல்லும் தலாக் சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி சிந்திக்கும் எவரும் இதை பெண்களுக்குப் பாதகமாகக் கருதமாட்டார்கள்.மாறாக, பாதுகாப்பாகவே கருதுவார்கள்.

ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்காகவே இந்தச் சட்டங்களை இறைவன் அருளியுள்ளான். இப்படிப்பட்ட உன்னதமான சட்டத்தை உள்ளடக்கிய இறைவேதத்தை இந்தச் சமுதாயம் புறக்கணித்ததன் விளைவுதான் இத்தகைய விபரீதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

இந்த வேததின் மூலம் எத்தனையோ சமுதாயத்தை அல்லாஹ் உயர்த்தியுள்ளான். இவ்வேதத்(தை கைவிட்ட)தின் மூலம் எத்தனையோ சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளான்

அறிவிப்பவர்: உமர் (ரலி)

(முஸ்லிம்: 1353)

அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்பட்ட அறிவுரைகளைப் படித்து, அதன் வழி நடந்தால் நாம் கண்ணியத்துடன் வாழ இயலும். அந்த இறைவனின் வேதத்தைக் கண்டும் காணாமல் விட்டால் இழிவதான் நிகழும்.