08) மனித கடவுளாக முடியுமா?
மனித கடவுளாக முடியுமா?
அஃறிணைப் பொருட்கள் எவையும் கடவுளாக இருக்க முடியாது என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இப்போது எஞ்சியிருப்பவன் மனிதன் மட்டும் தான்! இந்த மனிதன் கடவுளாக முடியுமா? அவனும் கடவுளாக முடியாது. ஏன்? திருக்குர்ஆன் மட்டும் தான் கடவுளுக்குரிய இலக்கணங்களை மிகத் துல்லியமாகக் குறிப்பிடுகின்றது. அந்தத் தன்மையைப் பெற்றவர் தான் கடவுளாக இருக்க முடியும். அந்தத் தன்மைகளைப் பெறாதவர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனிதனுக்குரிய பலவீனங்கள் கடவுளுக்கு இருக்கக்கூடாது. கடவுளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் மக்கள் இதைக் கவனிப்பதுமில்லை, கண்டு கொள்வதுமில்லை. மனிதன், தான் வாங்குகின்ற பொன் நகைகள் முதல் மண் பாண்டம் வரை அத்தனையையும் சோதித்துப் பார்த்து தான் வாங்குகின்றான்.
தங்கத்தை உரசிப் பார்க்க உரைக்கல்லை வைத்திருக்கும் மனிதன் கடவுளைத் தேர்வு செய்வதற்கு எந்த உரைக்கல்லையும் பயன்படுத்துவதில்லை. திருக்குர்ஆன் கடவுளைத் தேர்வு செய்வதற்கு ஓர் உரைக்கல்லைத் தருகின்றது. அதாவது கடவுளுக்குரிய இலக்கணங்களை அது குறிப்பிடுகின்றது.
அது கற்பனை அடிப்படையில் அமைந்தது அல்ல. அந்த உரைக்கல் ஒவ்வொன்றாகப் பார்த்தோம் என்றால் இது தான் கடவுளைத் தேர்வு செய்வதற்கு சரியான அளவுகோல் என்று மனிதனின் அறிவு ஒப்புக்கொண்டு விடும். ஒப்புக் கொள்வதுடன் நிற்காமல் கடவுளைத் தேர்வு செய்வதற்கு இதைத் தாண்டி வேறெதுவுமில்லை; இது தான் சரியான அளவுகோல் என்ற இறுதியான, உடைக்க முடியாத, உறுதியான முடிவுக்கு வந்து விடும். வேதம் கூறும் வேதியியல் பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைவோம் கடவுளுக்குரிய இலக்கணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.