03) காலத்தால் முரண்படாதது

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

03) காலத்தால் முரண்படாதது

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் என்பது ஏதோ இன்று நேற்று வழங்கப்பட்ட புத்தகமல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது காலத்து அறிவைக் கடந்து எதையும் அவரால் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகளும் முரண்பாடுகளும் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழுநூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை. துளி முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட இயலவில்லை.

இத்தனைக்கும் திருக்குர்ஆனைப் பொருத்தவரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

 பூமியைப் பற்றியும், ஏனைய கோள்கள் பற்றியும், வானுலகம் பற்றியும் பேசும்போது, இந்த நூற்றாண்டின்  மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது போல் மனிதனைப் பற்றியும், மற்ற உயிரினங்களைப் பற்றியும், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதைவிட அழகாகப் பேசுகிறது. தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேரச் சிந்திக்கும் யாரும் ” இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

காலங்கள் பல கடந்தாலும் பல துறைசார்ந்த கருத்துகள் திருக்குர்ஆனில் நிறைந்திருந்தாலும் எந்த ஒன்றிலும் முரண்பாட்டைக் காட்ட முடியவில்லை என்பது எத்தனை பெரிய அதிசயம். இதிலிருந்தே காலம் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இறைவேதமாக எவ்வித முரண்பாடும் இல்லாத ஒப்பற்ற இறைவேதமாக திருக்குர்ஆன் திகழ்கிறது என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் போல முரண்பாடில்லாத ஒரு வேதப்புத்தகத்தை யாராலும் எக்காலத்திலும் கொண்டுவர முடியாது என்பதே நிதர்சன உண்மையாகும்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:23)

இந்த நூலில் திருக்குர்ஆன் குறித்து தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன், திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதார திட்டம், வட்டியை ஒழித்த வான்மறை, மங்கையர் நலம் நாடும் மாமறை, திருக்குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம், குற்றங்களுக்கு குர்ஆனியச்சட்டமே தீர்வு ஆகிய தலைப்புகளில் ஆக்கங்கள் உள்ளன. இவைகளை படித்து பயனடையுங்கள்.