02) முரண்பாடின்மை
02) முரண்பாடின்மை
பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.
எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.
முன்னர் பேசியதை மறந்து விடுதல்
முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல். கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்
யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்
வயதாவதால் மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்
விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல் மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதர்களுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேசும் ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.
ஆனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.
மேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏகஇறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும். இறைவனிடமிருந்து வந்ததால் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.