அகீகா ஏழாம் நாள் தாண்டி கொடுக்கலாமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

அகீகா ஏழாம் நாள் தாண்டி கொடுக்கலாமா?

பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாள் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர்.
அகீகாவிற்காக ஏழாம் நாள்,பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி),நூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், பாகம் :5, பக்கம் :136, தப்ரானீ-ஸகீர், பாகம் :2, பக்கம் :29, பைஹகீ பாகம் :9, பக்கம் : 303

இந்த ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை. இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவராவார்.

இவர் ஒரே ஹதீஸை எங்களிடம் மூன்று முறைகளில் அறிவிப்பார் என்று கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய ஹதீஸ்களை எழுதுக்கூடாது என்று இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் அதிமாக தவறாக அறிவிப்பவர் என்று பல்லாஸ் குறிப்பிடுள்ளார்கள். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ குறிப்பிட்டுள்ளார்கள். இவரை யஹ்யா, இப்னு மஹ்தீ ஆகியோர் (பொய்யர் என்பதால்) விட்டுவிட்டார்கள் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள். இதைப்போன்று இவர் ஹதீஸ்கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ கூறியுள்ளளார்கள். இவருடைய ஹதீஸ்கள் பாதுகாப்பானவை அல்ல என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் பிரபலிமானவர்களிடமிருந்து மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர், அறிவிப்பாளர் வரிசையை மாற்றும் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :1 பக்கம் :289

எனவே ஆதாரமற்ற செய்திகள் அடிப்படையில் அகீகா 14,21 ஆம் நாளில் கொடுக்கமுடியாது. ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஏழாம் நாள் மட்டுமே அகீகா கொடுக்க வேண்டும்.