உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகையை வரையறுத்தார்களா?
உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகையை வரையறுத்தார்களா?
முஸ்லிம்களாகிய நாம் அடுத்தவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது பல்வேறுபட்ட குர் ஆன் வசனங்கள் ஹதீஸ்கள், வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறுகிறோம்; ஆதாரமாகக் காட்டுகின்றோம்.
ஆனால் இவ்வாறு நாம் எடுத்து வைக்கும் அல்குர்ஆன் வசனங்கள் உண்மையிலேயே நமது கருத்துக்கு சான்றாக அமைந்துள்ளதா, அதில் நாம் கூற வருகின்ற விளக்கம் உள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதிலும், ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானவையா?, ஆதாரபூர்வமானவை என்றால் உண்மையிலேயே நமது கருத்துக்கு சான்றாக அமைந்துள்ளதா , அதில் நாம் கூற வருகின்ற விளக்கம் உள்ளதா என்பதை நன்கு அறிந்து கொள்வதிலும் குறிப்பாக வரலாற்றுச் சம்பவங்கள் உண்மையில் நிகழ்ந்தவையா என்பதை உறுதி செய்வதிலும் சற்றுக் கவனக் குறைவாகவே செயல்படுகிறோம்.
எனவே இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் எம்மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ள தவறாக புரியப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான நபிமொழிகள் மற்றும் ஆதாரமில்லாத, நம்பகமான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படாத ஹதீஸ்கள், உறுதி செய்யப்படாத வரலாற்று நிகழ்வுகள் தொடர்பாக என்னால் முடியுமான வரை எழுத உத்தேசித்துள்ளேன்.
அதில் முதலாவதாக எம்மத்தியில் புழக்கத்தில் உள்ள உமர் (ரலி) அவர்கள் குத்பா நிகழ்த்தும் போது மஹர் தொகையை வரையறை செய்ய முற்பட்டார்கள் என்றும் அப்போது ஒரு பெண் எழுந்து ஆட்சேபித்த வேளையில் தனது தவறை திருத்திக் கொண்டார்கள் என்றும் கூறப்படும் செய்தியை நோக்குவோம்.
செய்தி இதுதான்:
ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் மிம்பரிலே ஏறி மனிதர்களே மஹர் கொடுப்பதில் நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள். நபியவர்களும் நபித் தோழர்களும் நானூறு திர்ஹங்களுக்கு மேல் கொடுக்கவில்லை எனவே நீங்களும் அதற்கு மேல் கொடுக்காதீர்கள் எனக் கூறினார்கள். பிறகு அவர் மிம்பரில் இருந்து இறங்கிய போது ஒரு பெண்மணி “அமீருல் முஃமினீன் அவர்களே “அல்லாஹ் குர் ஆனில் “பெண்களுக்கு ஒரு பாளத்தையே மஹராகக் கொடுத்த போதும்….” எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்” என ஆட்சேபிக்க உமர் (ரழி) அவர்களோ அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியபின் மீண்டும் மிம்பரிலே ஏறி தனது கருத்தை மீளப் பெற்றார்கள்”
இச் செய்தி மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது
1-அபூ யஃலா மற்றும் இப்னு கதீரின் தொடர்:
இத்தொடரில் இரு குறைகள் உள்ளன.
1- இதில் இடம் பெறும் “முஜாலித் பின் ஸைஈத் என்பவர் பலவீனமானவராவார்.
2-அத்துடன் இவர் சில வேளைகளில் முதல் அறிவிப்பாளரான மஸ்ரூக் என்பவரை சேர்த்தும் நீக்கியும் அறிவித்துள்ளார்.
2-அப்துர் ரஸ்ஸாகின் அறிவிப்பு:
இதிலும் இரு குறைகள் உள்ளன.
1-அபூ அப்துர் ரஹ்மான் ஸலமி என்பவர் உமர் (ரழி) அவர்களிடம் இருந்து கேட்கவில்லை.
2-இதில் இடம் பெறும் கைஸ் பின் ரபீஃ என்பவர் பலவீனமானவர்.
3-இப்னு கதீரில் இடம் பெறும் ஸுபர் பின் பக்கார் என்பவரின் அறிவிப்பு:
1-முஸ் அப் பின் தாபித் என்பவர் பலவீனமானவர்
2-இவருக்கும் உமர் (ரழி) அவர்களுக்கும் இடையில் தொடர்பறுந்ததாக அறிவிப்பாளர் வரிசை காணப்படுவது.
எனவே மேற்படி செய்தி பலவீனமானதாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நாமும் இச்செய்தியை தவிர்த்து விடுவோம்…