48) சதா பாடாதீர்

நூல்கள்: நாவை பேணுவோம்

சதா பாடாதீர்

இஸ்லாமிய இளைஞர்களில் இளைசிகளில் பலருக்கும் குர்ஆன் ஓத தெரியாது. அவர்களிடம் நம்முடைய இறைவேதத்தையே உங்களுக்கு பார்த்து ஓத தெரியாதா ஏன் முயற்சி செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் குர்ஆன் ஓத மிகவும் சிரமமாய் உள்ளது என்று சற்றும் தயங்காமல் கூறுவார்கள்.

இன்னும் பலர் குல்ஹூ வல்லாஹூ அஹத் என்ற சூராவை மட்டுமே மனனம் செய்திருப்பார்கள். இதையே பலவருடங்களாக எல்லா தொழுகைக்கும் அசராமல் ஓதிவருவார்கள் ஏன் மற்ற சூராக்களை மனனம் செய்ய வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினால் அது என்னமோ தெரியலங்க குர்ஆனை மனனம் செய்வது ரொம்பவும் சிரமமாக உள்ளது என்பார்கள்.

இத்தகையோர்களின் நடவடிகையை பார்த்தால் பெரிய பெரிய சினிமாப்பாடல்களை அதன் சுருதி குறையாமல். ஒரு வரிவிடாமல் முழுவதுமாக படிப்பதை காணலாம் குர்ஆனை ஓத சிரமமாக உள்ளது என்று கூறியவர்களுக்கு சினிமா பாடல்கள் படிப்பது சிரமமாக இல்லை. குர்ஆனை மனனம் செய்வது கஷ்டமாக இருக்கின்றது என்று முனங்கியவர்கள் பாடலை மனனம் செய்ய கஷ்டமாய் இல்லை. இந்தளவிற்கு சினிமாப்பாடல்களின் ஆதிக்கம் நமது முஸ்லிம்களின் மத்தியில் பரவியிருக்கின்றது.

அவ்வப்போது ஏதாவது ஒரு சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். நமது நாவு சதா ஒரு பாடலை படித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இதை இஸ்லாமியர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. நல்ல கருத்துள்ள கவிதையை பாடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதுவே முழு நேரமும் ஆக்கிரமித்து இருந்தால் நமது நாவை தேவையற்ற காரியத்தில் ஈடுபடுத்துகிறோம் என்றாகும். இந்த குற்றத்திற்கு நமது நாவை ஒரு போதும் பயன்படுத்திவிடக்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.

அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 6154)

மனிதன் எந்தச் சொல்லை மொழிந்தாலும் அதைக் கண்காணித்துப் பதிவு செய்யக்கூடிய(வானவர்) அவனுடன் இல்லாமலிருப்பதில்லை. 

(அல்குர்ஆன்: 50:139)