24) இறைவசனங்களை…
இறைவசனங்களை…
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேற பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான் நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.
இறைவசனங்களை கேலி செய்யக்கூடாது என்று இந்த வசனத்தில் இறைவன் அறிவுரை கூறுகின்றான். அதெப்படி இறை வசனங்களை கேலி செய்ய முடியும்? இறைவசனங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கின்றது. அதை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதும் இறை வசனம் கூறும் போதனையை அலட்சியப்படுத்துவதும் இறைவசனங்களை கேலி செய்வதற்கு சமமானதாகும். இதையும் இஸ்லாமியர்களில் பலர் செய்து கொண்டிருக்கின்றனர்.
தங்கள் ஊர்களில் நடக்கும் கந்தூரி விழாக்களில் மிகவும் சாதாரணமாய் இதை காணலாம். தர்காவில் ஒரு பக்கம் குர்ஆன் கிராஅத் ஓடவிடப்படும் இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று அந்த வசனங்கள் கூறினாலும் இவர்கள் அந்த அவ்லியாக்களிடம் தான் கேட்பார்கள் என்பது வேறு) மறுபக்கம் அந்த சப்தத்தை ஒவர்டேக் செய்யும் விதமாக பக்கத்தில் உள்ள சர்க்கஸ் செய்யும் இடத்தில் ஏதேனும் கொச்சையான சினிமா பாடலை பாடவிடுவார்கள்.
இதுதான் இறைவசனங்களை கேலி செய்யம் நிலையாகும். இந்த சபைகளில் நாமும் பங்கெடுத்தால் அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதாக எச்சரிக்கை விடுக்கின்றான். எனவே மனிதர்களை கேலி செய்வதை தவிர்ப்பதை போலவே இறைவசனங்களை கேலி செய்யும் நிலையையும் தவிர்க்க வேண்டும்.