12) நரகில் சேர்க்கும்
நரகில் சேர்க்கும்
பொய் சொல்வதினால் நமது நோன்புகள் பாழாகுவதோடு நின்று விடாது. மாறாக நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் வேலையை இந்த பொய் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கும். பொய் பேசுவதினால் மட்டும் நரகிற்கு போய்விடுவோமா? சர்வ நிச்சயமாய் ஒரு மனிதன் பொய் சொல்வதில் கவனமற்று அலட்சியமாக இருக்கின்றான் எனில் அவனிடம் சகல நரகில் தள்ளும் தீமைகளையும் சர்வ சாதாரணமாய் செய்ய ஆரம்பித்து விடுவான். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார் இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்: தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார் தீமைகளும் புகுந்து விடும்.
அறிவிப்பவர் : அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி)
பொய் பேசுவது நரகில் சேர்த்து விடும் என எச்சரிக்கை ஒன்றை விட்டுவிட்டு அது இறைவனிடத்தில் பொய்யன் என்ற அவப்பெயரை பெற்றுத்தரும் என்று சொல்கின்றார்கள். இந்த உலகில் நாம் நன்கு மதிக்கும் ஒருவரிடம் நற்பெயர் எடுக்க எவ்வளவோ பாடுபடுகிறோம். அவரிடம் ஒரு போதும் அவப்பெயர் எடுத்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம்.
இவர்களை விட இறைவன் என்ன இளக்காரமாக ஆகிவிட்டானா? இறைவனிடத்தில் என்ன பெயர் எடுத்தாலும் பிரச்சனையில்லை என படைத்த இறைவனை புறந்தள்ளி விட்டு மற்றவர்களை முன்னிலைப்படுத்துபவர்கள் எப்படி உண்மை முஸ்லிம்களாக இருக்க முடியும். இது மட்டுமா பொய் என்பது ஏதோ ஒரு சிறிய பாவமாக மக்கள் கருதுகின்றனர் இதை செய்தால் பெரிய அளவில் தண்டனை கிடைக்காது என்ற தவறான நம்பிக்கையினாலும் குருட்டு தைரியத்தினாலும் பொய்யை வழக்கமாக்கி கொள்வோர் பலர்.
இவர்கள் நினைப்பது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் பொய் பாவத்திற்கு நரகில் கிடைக்கும் தண்டனையை அறிந்தால் இதை சிறிய தவறாக ஒரு போதும் பார்க்க மாட்டோம்.