07) நியாயத்தை சொல்வோம்

நூல்கள்: நாவை பேணுவோம்

நியாயத்தை சொல்வோம்

இஸ்லாமியர்களில் பலரும் ஏதோ பேசுவோம் என்ற அடிப்படையில் நியாயமற்றதை பேசிவருகின்றனர். அநியாயத்தை தட்டிக் கேட்க தயங்குகின்றனர். இந்த தயக்கத்தை அநியாயத்ளதை பேசுவதில் கூட செலுத்துவதில்லை. அரசு சார்பில் அல்லது மற்றவர்கள் சார்பில் மக்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டல்அவர்களிடமிருந்து சுயலாபம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்கு அவர்களுக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்த அநியாயத்தை நியாயமாக்கி பேசிவருகின்றனர். ஒரு முஸ்லிம் இது போன்ற அநியாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கலாமா?

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த அல்லாஹ்வின் தூதரே சிறந்த ஜிஹாத் எது என்று வினவினார் அந்நேரத்தில் நபியவர்கள் ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போது அவருக்கு பதிலளிக்கவில்லை. மீண்டும் அவ்வாறே கேட்டார் அந்நேரத்தில் ஜம்ரதுஸ் ஸானியா எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போதும் பதிலளிக்கவில்லை ஐம்ரதுல் அகபாவில் கல்லெறிந்த பிறகு கேள்வி கேட்டவர் எங்கே (சிறந்த ஜிஹாத் அநீதி புரியும் ஆட்சிக்காரனிடம் நியாயத்தை சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்

அறிவிப்பவர் : ஆபூ உமாமா (ரலி)

(அஹ்மத்: 2131)

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக் குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என்று கூறினார்கள் மக்கள் அல்லாஹ்வின் தூதரே அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம் அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்துக் கொள்வாய் (இதுவே நீஅவனுக்குச் செய்யும் உதவி) என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(புகாரி: 2444)

அநீதி இழைப்பவர் யாராக இருந்தாலும் அநீதி இழைக்கப்படுபவர் யாராக இருந்தாலும் சரி அதற்கெதிரான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். அநீதி இழைக்கும் கரத்தை தடுத்து அவனுக்கெதிராக குரலெழுப்ப வேண்டும் என்று நபிகளார் கூறுகின்றார்கள். இப்படியிருக்கும் போது அநியாயத்திற்கு ஆதரவாக குரலெழுப்புபவர் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.